கடம்பன் – விமர்சனம்
லாபவெறியில் காட்டை அழித்து பணமாக்கத் துடிக்கும் கார்ப்பரேட் முதலாளிய நிறுவனத்துக்கு எதிராக, காட்டையே வாழ்வாதாரமாகக் கொண்ட பழங்குடிகள் நடத்தும் வீரம் செறிந்த போராட்டம் எனும் சமகாலப் பிரச்சனையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது ‘கடம்பன்’.
மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள கடம்பவனம் என்னும் மலைகிராமத்தில் பழங்காலம் தொட்டு தலைமுறையாக தலைமுறையாக வாழ்ந்து வருகிறார்கள் பழங்குடி மக்கள். சிமெண்ட் தொழிற்சாலைக்குத் தேவையான சுண்ணாம்புக் கற்களை எடுப்பதற்கு ஒரு கார்ப்பரேட் முதலாளிய நிறுவனம் கடம்பவனம் உள்ளிட்ட சுற்றியுள்ள மலைப் பகுதிகளை அழிக்கப் பார்க்கிறது. வனத்துறை அதிகாரிகளை கைக்குள் போட்டுக்கொண்டு, பழங்குடி மக்களை வலுக்கட்டாயமாக விரட்டி அடிக்கிறது கார்ப்பரேட் நிறுவனம். விரட்டியடிக்கப்படும் பழங்குடிமக்கள் தங்களது வாழ்வாதாரமான மலைக்காட்டை விட்டு வெளியேறினார்களா? தங்கள் வாழ்க்கையை அவர்கள் எப்படி வடிவமைத்துக் கொண்டார்கள் என்பது தான் ‘கடம்பன்’ படத்தின் அடிப்படை கதை.
அகன்ற தோள்கள், விரிந்த மார்பு, கட்டுமஸ்தான உடல், தீர்க்கமான பார்வை, எதிரிகளைப் பந்தாடும் ஆவேசம், காதல் காட்சிகளில் கண்ணியம் என்று முழுமையான உழைப்பைக் கொடுத்திருக்கிறார் ஆர்யா. மரம் விட்டு மரம் தாவுவது, அசுர வேகத்தில் மரம் ஏறுவது என ஆர்யா அசால்ட்டாக ஆச்சரியப்பட வைக்கிறார். யானைக் கூட்ட நடுவிலான ஆர்யாவின் ஆக்ரோஷம் அசத்தல்.
கேத்தரின் தெரசாவை மலைவாழ் பெண்ணாக பார்ப்பதற்கு வித்தியாசமாக இருக்கிறது. மலைவாழ் மக்களின் வலியை தனது நடிப்பால் அழகாக பிரதிபலித்திருக்கிறார். அவரது அண்ணனாக வரும் ராஜசிம்மன் பார்வையாலேயே மிரட்டுகிறார். முதலில் ஆர்யாவுக்கு எதிரியாகவும், பிறகு அவருக்கு உதவி செய்பவருமாக மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
தீப்ராஜ் ராணா, சூப்பர் சுப்பராயன், ஆடுகளம் முருகதாஸ், மதுவந்தி அருண், ஒய்.ஜி.மகேந்திரன் ஆகியோர் பாத்திரம் உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.
காடு, மலை, அருவி என்று ஒட்டுமொத்த அழகையும், ரம்மியத்தையும் ஒளிப்பதிவாளர் சதீஷ்குமார் நம் கண்களுக்கும், மனதுக்கும் கடத்துகிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையில் ஒத்த பார்வையில், ஆகாத காலம் ஆகிய இரு பாடல்களும் ரசனை. பின்னணி இசை படத்துடன் பொருந்திப் போகிறது.
கார்ப்பரேட் முதலாளிய நிறுவனங்களின் பேராசையையும், அதற்கான வியாபார வியூகங்களையும், அதற்கு ஒத்துழைக்கும் அதிகாரிகளின் சுயநலத்தையும், இதனால் பாதிக்கப்படும் பழங்குடி மக்களின் பரிதாப நிலையையும் மிகச் சரியாகப் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் ராகவா. தனியார் தொண்டு நிறுவனங்களின் அணுகுமுறைகளையும் அக்கறையுடன் வெளிப்படுத்தி இருக்கிறார்.
சைகை மொழி, புதை குழி, சடலம் புதைக்கும் விதம், சடங்கு, தேன் எடுத்தல், கிழங்கு கொண்டு வருதல் உள்ளிட்ட மலை வாழ் மக்களின் வாழ்வியலை நெருக்கமாகப் பதிவு செய்திருக்கிறார்.
”வசதிங்கிறது வாழ்ற தரத்துல இல்லை. வாழ்ற முறையில இருக்கு”, ”காட்டை அழிக்குறது கர்ப்பப்பையில் இருக்குற குழந்தை கத்தி எடுத்து தாயை அழிக்கிற மாதிரி”, ”காட்டை அழிக்க உன்னை மாதிரி 1000 பேர் வந்தா என்னை மாதிரி 100 பேர் வருவான்”, ”நம்ம பாட்டன் பூட்டன் பாத்த பாதி வளங்களை நம்ம ஐயனுங்க பார்க்கலை, நம்ம ஐயனுங்க பார்த்த மீதி வளங்களை நாம பார்க்கலை, இன்னைக்கு நாம பார்த்த வளங்களை நமக்கு பின்னாடி வர்ற சந்ததிங்க பார்ப்பாங்களா இல்லையான்னு தெரியலை’, ”எங்க சந்ததியை சார்ந்த கடைசி ஒருத்தன் இருக்குற வரைக்கும் உங்களால காட்டுல இருந்து ஒரு பிடி மண்ணைக் கூட எடுக்க முடியாது” என்ற தேவ்- ராகவாவின் வசனங்கள் படத்துக்கு கூடுதல் வலு சேர்க்கின்றன.
கார்ப்பரேட் முதலாளிய நிறுவனங்களால் பழங்குடி மக்களுக்கு ஏற்படும் ஆபத்தையும், காடு வாழ் உயிரினங்களுக்கு நிகழும் பாதிப்புகளையும் சொன்ன விதத்திலும், இயற்கையின் மதிப்பை உணர வைத்த விதத்திலும் ‘கடம்பன்’ தனித்து நிற்கிறது.
‘கடம்பன்’ – நல்ல முயற்சி!