டெல்லியில் அமைச்சர் பொன்.ராதாவை சந்தித்தார் நடிகர் கமல்ஹாசன்!

மத்திய இணையமைச்சர் பொன்.ராதா‌கிருஷ்ணனின் டெல்லி அலுவலகத்துக்கு நடிகர் கமல்ஹாசன் இன்று சென்றார். அவரை பொன். ராதாகிருஷ்ணன் பொன்னாடை போர்த்தி வரவேற்றார்.

இந்த தகவலை புகைப்படத்துடன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பொன்.ராதாகிருஷ்ணன், “சற்றுமுன் மரியாதை நிமித்தமாக என்னை புதுடெல்லியில் நடிகர் கமல்ஹாசன் அவர்கள் சந்தித்தார்” என்று கூறியிருக்கிறார்.

சில வாரங்களுக்குமுன் ஜல்லிக்கட்டு உரிமைக்காக மாணவர்கள் போராடியபோது, அவர்களை ஆதரித்தும், சுப்பிரமணியன் சுவாமியை எதிர்த்தும் கமல்ஹாசன் கருத்துக்களை பதிவிட்ட சமயத்தில், அவரை அவரது ஆழ்வார்பேட்டை அலுவலகத்துக்கு சென்று சந்தித்தார் பொன்.ராதாகிருஷ்ணன். அப்போதும் அது “மரியாதை நிமித்தமான சந்திப்பு” என்று தான் கூறப்பட்டது.

வெளியில் சொல்லக் கூடாத விஷ்யங்கள் குறித்து ரகசியமாக பேசுவதற்காக நடைபெறும் சந்திப்பை, “மரியாதை நிமித்தமான சந்திப்பு” என்று சொல்லிக்கொள்வது… அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா…!