“என் வீட்டில் எதுவும் சிக்கவில்லை”: அமைச்சர் விஜயபாஸ்கர்!

“என்னுடைய வீட்டிலிருந்து வருமானவரித் துறை அதிகாரிகள் எதையும் பறிமுதல் செய்யவில்லை” என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

சென்னை க்ரீன்வேஸ் சாலையில் உள்ள தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை முதல் வருமானவரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையில், விஜயபாஸ்கர் இல்லத்தின்முன் தளவாய் சுந்தரம் தலைமையில் திரண்ட அதிமுகவினர் தங்களையும் வீட்டுக்குள் அனுமதிக்க வேண்டும் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பரபரப்பான சூழல் நிலவிவந்த நிலையில், அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டிலிருந்து வெளியே வந்து, “அதிகாலை முதலே வீட்டில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். நான் இந்த சோதனைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறேன். இதுவரை எனது வீட்டிலிருந்து ஏதும் பறிமுதல் செய்யப்படவில்லை.

நான் முழு ஒத்துழைப்பு அளித்தும்கூட அதிகாரிகள் கெடுபிடி காட்டி வருகின்றனர். எனது மகளை பள்ளிக்குச் செல்லக் கூட அனுமதிக்கவில்லை. பாதுகாப்புப் படையினர், வருமானவரித் துறையினர் அத்துமீறிச் செயல்படுகின்றனர்.

என்னுடைய வீட்டில் இருந்து ரூ.10 ஆயிரம் கூட பறிமுதல் செய்யப்படவில்லை. இது அரசியல் காழ்ப்புணர்ச்சியால் நடைபெறும் சோதனை” என்றார்.

தொடர்ந்து அங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது.