‘2.0’ படப்பிடிப்பில் பத்திரிகை யாளர்கள் மீது தாக்குதல்: வருத்தம் தெரிவித்தார் ஷங்கர்!
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துவரும் ‘2.0’ படத்தின் படப்பிடிப்பு இன்று (புதன்கிழமை) சென்னை திருவல்லிக்கேணியில் நடைபெற்றது. காலை சுமார் 10 மணி அளவில் திருவல்லிக்கேணி ஈஸ்வர தாஸ் லாலா தெருவில் 2.0 படப்பிடிப்பு நடைபெற்று வந்ததால் அங்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
‘தி இந்து’ பத்திரிகையாளர்கள் எஸ்.ஆர்.ரகுநாதன், ஸ்ரீபரத் ஆகிய இருவரும் தங்கள் வீட்டில் இருந்து ஆர்.கே.நகர் செல்வதற்காக இருசக்கர வாகனங்களில் தேரடி வீதி வழியாக வந்தனர். அப்போது ஈஸ்வர தாஸ் லாலா தெருவில் ‘2.0’ படப்பிடிப்பு நடைபெறுவதால் இந்தப் பகுதிக்கு வர அனுமதி இல்லை என்று படப்பிடிப்புக் குழுவினர் கூறினர்.
இதனால் தி இந்து பத்திரிகையாளர்களுக்கும் படப்பிடிப்புக் குழுவினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து ‘தி இந்து’ பத்திரிகையாளர்கள் எஸ்.ஆர்.ரகுநாதன், ஸ்ரீபரத் ஆகியோரை ‘2.0’ படப்பிடிப்புக் குழுவினர் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்த மற்ற பத்திரிகையாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு இருந்த போலீஸாருக்கும், பத்திரிகையாளருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பத்திரிகையாளர்களைத் தாக்கிய படப்பிடிப்புக் குழுவைச் சார்ந்த அலெக்ஸ், பப்பு, சுந்தர்ராஜன் ஆகிய மூவரையும் கைது செய்ய வேண்டும் என்று பத்திரிகையாளர்கள் வலியுறுத்தினர்.
இது குறித்து, தாக்கப்பட்ட பத்திரிகையாளர் எஸ்.ஆர்.ரகுநாதன் கூறுகையில், ”ஈஸ்வர தாஸ் லாலா தெருவில் ஆட்டோவில் பயணித்த கர்ப்பிணியைக் கூட அந்தப் பகுதி வழியாக செல்ல அனுமதிக்கவில்லை. ஏன் என்று நியாயம் கேட்டபோது நாகரிகமில்லாத வார்த்தைகளில் பேசினார்கள்.
பகலில் பொதுமக்கள் கூடும் இடத்தில் ஷுட்டிங் நடத்த உங்களுக்கு யார் அனுமதி கொடுத்தது? எங்கே அந்த அனுமதியைக் காட்டுங்கள் என்று கேட்டபோது, உன்னிடம் காட்ட வேண்டிய அவசியம் இல்லை என்று கூறியதோடு, ‘2.0’ படப்பிடிப்புக் குழுவைச் சார்ந்த அலெக்ஸ், புரொடக்ஷன் மேனேஜர் சுந்தர்ராஜன், பப்பு உள்ளிட்ட மூவரும் ஸ்ரீபரத்தையும், என்னையும் தாக்கினார்கள்.
எங்களுக்கு இதைப் புகாராகக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. அவர்கள் கூறிய வார்த்தைகளில் இருந்த நாகரிகமற்ற தன்மையே ஐஸ் ஹவுஸ் டி3 காவல் நிலையத்தில் புகார் கொடுக்கக் காரணமாக இருந்தது” என்றார்.
இந்நிலையில் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் இயக்குநர் ஷங்கர் புதன்கிழமை பிற்பகல் சுமார் 3.20 மணி அளவில் பத்திரிகையாளர்களை சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், ”இந்த விவகாரம் என் கவனத்துக்கு வரவில்லை. இருந்தாலும் என் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இனிவரும் காலங்களில் இது போன்ற எந்த சம்பவமும் நடக்காமல் பார்த்துக்கொள்கிறேன்” என்றார் ஷங்கர்.
இயக்குநர் ஷங்கர் வருத்தம் தெரிவித்ததை அடுத்து, காவல் நிலையத்தில் அளித்த புகாரை வாபஸ் பெறுவதாக பத்திரிகையாளர்கள் தெரிவித்தனர்.