தனுஷ் அங்க அடையாளங்கள் லேசர் சிகிச்சை மூலம் அழிப்பு: உயர் நீதிமன்றத்தில் மருத்துவ அறிக்கை தாக்கல!
மதுரை மாவட்டம், மேலூர் மலம்பட்டியைச் சேர்ந்த கதிரேசன்(60), அவரது மனைவி மீனாட்சி(55) ஆகியோர், நடிகர் தனுஷ் தங்கள் மூத்த மகன் என உரிமை கோரி வருகின்றனர். தங்களுக்கு மாதம் ரூ.65 ஆயிரம் வழங்க தனுஷுக்கு உத்தரவிடக் கோரி, அவர்கள் மேலூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் வழக்கு தொடர்ந்து, அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி தனுஷ் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கில் தனுஷின் பள்ளி சான்றிதழ்களின் உண்மை நகல்கள் தனுஷ் தரப்பிலும், அவரை தங்கள் மகன் என உரிமை கோரி வழக்கு தொடர்ந்துள்ள கதிரேசன் தம்பதியர் தரப்பிலும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என ஏற்கெனவே உத்தரவிடப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி ஜி.சொக்கலிங்கம் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, கதிரேசன் தரப்பில் அங்க மச்சம் அடையாளம் குறிப்பிடப்பட்ட 10-ம் வகுப்பு பள்ளி மாற்றுச் சான்றிதழை வழக்கறிஞர் டைட்டஸ் தாக்கல் செய்தார். தனுஷ் தரப்பிலும் பள்ளி மாற்றுச் சான்றிதழ் தாக்கல் செய்யப்பட்டது. அதில் அங்க அடையாளம் குறிப்பிடப்படவில்லை.
இதையடுத்து, கதிரேசன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பள்ளி மாற்றுச் சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ள அங்க, மச்ச அடையாளங்கள் தனுஷின் உடலில் உள்ளதா? என்பதை கண்டறிந்து அது தொடர்பாக நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தனுஷ் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஆஜரானார். நீதிமன்றப் பதிவாளர் அறையில் வைத்து, தனுஷின் அங்க அடையாளங்களை அரசு மருத்துவர் சரி பார்த்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
இதனையடுத்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை டீன் வைரமுத்து ராஜுவும், மருத்துவக் கல்லூரி உதவி முதல்வர் மீனாட்சிசுந்தரமும் உயர் நீதிமன்றம் சென்றனர். இருவரும் பதிவாளர் முன்னிலையில் தனுஷின் அங்க அடையாளங்களைச் சரி பார்த்தனர். கதிரேசன் தாக்கல் செய்த பள்ளி மாற்றுச் சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ள அங்க அடையாளங்கள் தனுஷின் உடலில் உள்ளதா? உடலில் இருந்து அங்க அடையாளங்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளதா? அங்க அடையாளங்கள் நீக்கப்பட்டதற்கான அறுவை சிகிச்சை அடையாளங்கள் எதுவும் தனுஷின் உடலில் உள்ளதா என்பது தொடர்பாக அவர்கள் ஆய்வு செய்தனர்.
இந்த சோதனை நடைபெற்றபோது இயக்குநர் கஸ்தூரிராஜா, அவரது மனைவி விஜயலட்சுமி மற்றும் தனுஷை தங்களின் மகன் என உரிமை கோரும் கதிரேசன், அவரது மனைவி மீனாட்சி யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. இந்த சோதனை அரை மணி நேரம் நடைபெற்றது.
இந்நிலையில் தனுஷின் அங்க அடையாளங்களை ஆய்வு செய்த மருத்துவர்கள், தங்கள் மருத்துவ அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர். “தனுஷ் உடலில் சில அங்க அடையாளங்கள் லேசர் சிகிச்சை மூலம் அழிக்கப்பட்டுள்ளன” என்று அந்த மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து விரிவான விசாரணையை உயர் நீதிமன்ற மதுரை கிளை வரும் 27-ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.