ஆர்.கே.நகரில் ஓ.பி.எஸ். அணி சார்பில் மதுசூதனன் போட்டி!

சென்னை ஆர்.கே.நகர் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில், அ.தி.மு.க ஓபிஎஸ் அணி சார்பில் மதுசூதனன் போட்டியிடுவார் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் நடந்த ஓபிஎஸ் அணி ஆட்சி மன்றக் குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், “ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மதுசூதனன் வேட்பாளராக போட்டியிடுகிறார்” என்று அறிவித்தார்.

இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய மதுசூதனன், ”நான் ஆர்.கே.நகரில் கடந்த 50 ஆண்டுகளாக வசித்து வருகிறேன். என் தொகுதி மக்களை நன்கறிவேன். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிக வாக்குகள் பெற்று டிடிவி தினகரனை தோற்கடிப்பேன்” என்று கூறினார்.

மதுசூதனன் 1991-ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆனவர். அப்போதைய அதிமுக அமைச்சரவையில் கைத்தறித்துறை அமைச்சராகவும் இருந்தார்.

2015, 2016 தேர்தல்களில் ஆர்.கே.நகரில் போட்டியிட்ட ஜெயலலிதா, தனது மாற்று வேட்பாளராக மதுசூதனனை தான் தேர்வு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.