உ.பி. வெற்றிக்காக துள்ளிக் குதிக்கும் மோடியும், ‘கர்ணன்’ திரைப்பட காட்சியும்!

உ.பி . தேர்தல் முடிவுகள் பற்றிய வாதங்கள் தொடருகின்றன . மோடி அவர்கள்   சமாஜ்வாடி, காங்கிரஸ் இரண்டையும் வென்று மிகப் பெரும் சாதனை படைத்து விட்டார் என்று ஊடகங்கள் பாராட்டு மழை பொழிகின்றன. தலைவர்கள் அறிக்கைக்கு மேல் அறிக்கை விடுகிறார்கள் !.

கர்ணன் திரைப்படத்தில் ஒரு காட்சி. “கர்ணனை கொன்று விட்டேன்” என்று  சொல்லும் அர்ஜுனனிடம்,  கண்ணன்,  “செதத பாம்பை அடித்துவிட்டு ‘நான் தான் கொன்றேன்,  நான்தான் கொன்றேன்’ என்று ஏன் புலம்புகிறாய்?  கர்ணனை ஏற்கனவே ஆறு பேர் கொன்றுவிட்டார்கள்” என சொல்லுவான்.

கவச குண்டலத்தை ஏமாற்றி  பெற்றுச் சென்ற இந்திரன்,

பிரம்மாஸ்திரம்  தேவையான சமயத்தில் உனக்கு பயன்படாமல் போகட்டும் என்று சாபம் விட்ட பரசுராமன்,

தனது மகனை கொன்றுவிட்டான் என்ற கோபத்தில் “உனது தேர்  நடுவழியில் குழியில் இறங்கி மாட்டிக் கொள்ளட்டும்” என்று சபித்த ஒரு கிழவன்,

இரண்டாவது முறை நாகாஸ்திரத்தை பயன்படுத்தக் கூடாது  என்று வரம் வாங்கிய குந்தி,

தேரை யுத்தக்களத்தில் விட்டுவிட்டு இறங்கிப்போன சல்லியன்,

நாகாஸ்திரம் வரும்போது தேரை அழுத்தி அர்ஜுனனை காப்பாற்றிய கிருஷ்ணன்…

 ஆகிய ஆறு பேர்  ஏற்கனவே கர்ணனை கொன்று விட்டார்கள். நீ ஏன் புலம்புகிறாய்  என்பான் கண்ணன்!

உபி.யில் அதைப்போல –

டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சிததை உபி முதல்வர் வேட்பாளராக காங்கிரஸ் அறிவித்தவுடன் அக்கட்சியில் இருந்து விலகி பிஜேபியில் சேர்ந்த செல்வாக்கு மிகுந்த  ரீடா பகுகுணா,

தன்னை முதல்வர் வேட்பாளர் என்று அறிவித்துவிட்டு, பிறகு சமாஜ்வாடி கட்சியுடன் சேர்ந்து அகிலேஷ் யாதவை மீண்டும் முதல்வராக்க காங்கிரஸ் முடிவு செய்ததும்,  தான் சேர்ந்த பிராமண சமூகத்தினர் காங்கிரசுக்கு ஓட்டளிக்காமல் தடுதத ஷீலா தீட்சித்,

அகிலேஷ் யாதவுடன் ஏற்பட்ட பிரச்சனையால் ஒதுங்கிக்கொண்ட முலாயம்சிங் யாதவ்,

முஸ்லிம்கள் நிறைந்துள்ள  நூற்றிபத்து  தொகுதிகளில்  சமாஜ்வாடி கட்சி நிறுத்திய முஸ்லிம் வேட்பாளர்களுக்கு  எதிராக,  தானும் முஸ்லிம் வேடபாளர்களையே நிறுத்தி பிஜேபி வெற்றி அடைய வழி வகுத்த மாயாவதி,

வாரணாசி தொகுதியில் மூன்று பெரும் பேரணிகளை தொடர்ந்து மூன்று நாட்கள் நடத்திட ரூபாய் எழுபது கோடி வரை செலவு செய்கின்ற அளவுக்கு பிஜேபி வசம் நிறைந்துள்ள பணபலம்,

தனக்கு ஒரு கண்  போனாலும் பரவாயில்லை,  எதிரிக்கு இரண்டு கண்ணும் போக வேண்டும் என்று நினைத்த அகிலேஷ் யாதவின் சித்தப்பா சிவபால் யாதவ்…

இப்படி பல்வேறு முனைகளில் சிக்கி உபியில் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த  காங்கிரஸ் –  சமாஜ்வாடி  கூட்டணியை வென்று விட்டதாக துள்ளிக் குதிக்கும் மோடிக்கும்,  கர்ணனை கொன்று விட்டதாக சொன்ன அர்ஜுனனுக்கும் ஏதாவது வித்தியாசம் இருக்கிறதா, என்ன ?

உஸ்மான்