பஞ்சாப், மணிப்பூர், கோவா தோல்விகளை மறைத்து ஆட்டமாய் ஆடும் பாஜகவினர்!

உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட்டில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. பஞ்சாபில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கிறது. மணிப்பூர், கோவா மாநிலங்களில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் இழுபறி நீடிக்கிறது. அந்த மாநிலங்களில் காங்கிரஸுக்கு அதிக இடங்கள் கிடைத்துள்ளன.

உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் கடந்த பிப்ரவரி 4-ம் தேதி முதல் மார்ச் 8-ம் தேதி வரை பல்வேறு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. அந்த மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டன.

உத்தரப் பிரதேசத்தில் மொத்தம் 403 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. பாஜக, சமாஜ்வாதி-காங்கிரஸ் கூட்டணி, பகுஜன் சமாஜ் கட்சிகளிடையே மும்முனைப் போட்டி நிலவியது.

பாஜக 384 தொகுதிகளிலும் அதன் கூட்டணி கட்சிகளான அப்னாதளம் 11 தொகுதிகளிலும், சஹல்தேவ் பாரதிய சமாஜ் 8 தொகுதிகளிலும் போட்டியிட்டன. சமாஜ்வாதி கூட்டணியில் அந்த கட்சி 298, காங்கிரஸ் 105 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தின. பகுஜன் சமாஜ் 403 தொகுதிகளிலும் களம் இறங்கியது.

தேர்தல் முடிவுகள் வெளியானது முதல் பாஜக முன்னிலையில் இருந்தது. இறுதியில் அந்த கட்சி 312 தொகுதிகளைக் கைப்பற்றி வெற்றி பெற்றது. கூட்டணி கட்சிகள் 13 இடங்களைப் பிடித்தன. இதன்மூலம் பாஜக கூட்டணி 325 இடங்களைக் கைப்பற்றியது.

சமாஜ்வாதிக்கு 47 இடங்களும் காங்கிரஸுக்கு 7 இடங்களும் கிடைத்தன. பகுஜன் சமாஜ் 19 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

உத்தராகண்ட்டில் ஆளும் காங்கிரஸ், பாஜக இடையே கடும் போட்டி நிலவியது. மொத்தமுள்ள 70 தொகுதிகளில் பாஜக 57 இடங்களைக் கைப்பற்றி அறுதிப் பெரும்பான்மையை பெற்றது. காங்கிரஸுக்கு 11 இடங்கள் மட்டுமே கிடைத்தன. சுயேச்சைகள் 2 இடங்களில் வெற்றி பெற்றனர்.

மாநில முதல்வர் ஹரிஷ் ராவத், ஹரித்வார், கிச்சா ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டார். 2 தொகுதிகளிலும் அவர் தோல்வியைத் தழுவினார்.

பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் அகாலிதளம் – பாஜக கூட்டணி, காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளிடையே மும்முனைப் போட்டி நிலவியது. மொத்தமுள்ள 117 தொகுதிகளில் காங்கிரஸ் 77 தொகுதிகளைக் கைப்பற்றி அறுதிப் பெரும்பான்மையை பெற்றது. அகாலிதளம் 15, பாஜக 3 இடங்களில் வெற்றி பெற்றன. ஆம் ஆத்மி கட்சி 20 தொகுதிகளைக் கைப்பற்றியது.

காங்கிரஸ் முதல்வர் வேட்பாளராக போட்டியிட்ட கேப்டன் அமரிந்தர் சிங், பாட்டியாலா தொகுதியில் 52,407 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

முதல்வர் பிரகாஷ் சிங் பாதல், லம்பி தொகுதியில் வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் கேப்டன் அமரிந்தர் சிங் தோல்வியடைந்தார். பாதலுக்கு 66,375 வாக்குகளும் அமரிந்தர் சிங்கிற்கு 43,605 வாக்குகளும் கிடைத்தன.

மணிப்பூர் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. மொத்தமுள்ள 60 தொகுதிகளில் காங்கிரஸ் 28 தொகுதிகளைக் கைப்பற்றியது. பாஜக வுக்கு 21 இடங்கள் கிடைத்தன.

பெரும்பான்மையை நிரூபிக்க 31 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில் அங்கு ஆட்சியை தக்கவைக்க காங்கிரஸ் முயற்சி மேற்கொண்டு வருகிறது.

கோவா மாநிலத்தில் ஆளும் பாஜக, காங்கிரஸ் இடையே போட்டி நிலவியது. மொத்தமுள்ள 40 தொகுதிகளில் காங்கிரஸ் 17 தொகுதிகளிலும் பாஜக 13 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.

மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி 3, கோவா பார்வர்டு கட்சி 3, சுயேச்சைகள் 3, தேசியவாத காங்கிரஸ் ஒரு தொகுதியில் வெற்றி பெற்றன.

பெரும்பான்மையை நிரூபிக்க 21 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் இழுபறி நீடிக்கிறது. எனினும் அதிக இடங்களைப் பெற்றுள்ள காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட்டில் பாஜக வெற்றி பெற்றதற்காக, அக்கட்சியினர் ஆட்டமாய் ஆடுகிறார்கள். ஆனால், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் அக்கட்சி தோல்வியை தழுவியிருப்பதை பாஜகவினரும், அவர்களுக்கு ஜால்ரா போடும் ஊடகங்களும் ஒரு பொருட்டாக மதிக்கவில்லை என்பது தான் இன்றைய இந்திய ஜன Aநாயகத்தின் சோகம்!