மாற்று திறனாளிகள் பற்றிய பேச்சு: வருத்தம் தெரிவித்தார் ராதாரவி!
அதிமுக-வில் இருந்த நடிகர் ராதாரவி கடந்த 28-ம் தேதி திமுக-வில் இணைந்தார். இதைத் தொடந்து சென்னையில் நடைபெற்ற ஸ்டாலின் பிறந்தநாள் விழா கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர், வைகோவும் ராமதாஸும் குறைமாத குழந்தைகள் என்று விமர்சனம் செய்ததுடன் குறைமாதத்தில் பிறந்த குழந்தைகளின் செயல்பாடுகள் இப்படித்தான் இருக்கும் என தனது பேச்சாலும் உடல் மொழியாலும் கேலியும் கிண்டலுமாக விமர்சித்தார்.
இந்த உடல்மொழி விளக்கம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி, கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார் ராதாரவி. முக்கியமாக திமுக மாநில மகளிரணி செயலாளர் கனிமொழி எம்பி., “ராதாரவி மாற்றுத் திறனாளிகளைப் பற்றி இகழ்ச்சியாக ஏளனமாக பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். திமுக தலைவர் கருணாநிதியின் தொண்டர்கள் இதை ஏற்க மாட்டார்கள். உடல் கூறுகள் வேறுபட்டு இருப்பது ஒரு சிறிய தடை தான். மன ஊனம் தான் தாண்டமுடியாத தடை. மாற்றுத் திறனாளிகள் மனத் தடைகளை உடைத்தவர்கள்” என்று தனது முகநூல் பக்கத்தில் கருத்துத் தெரிவித்துள்ளார்.
இவரைப் போலவே கவிஞர் சல்மா மற்றும் மாற்றுத் திறனாளிகள் நல அமைப்பினர் போன்றோரும் ராதாரவிக்கு எதிராக தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகிறார்கள். மேலும், ராதாரவி வீட்டுமுன் மாற்றுத் திறனாளிகள் நல அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தினர்.
சர்ச்சைக்குரிய இந்த விவகாரம் குறித்து நடிகர் ராதாரவியிடம் கேட்டபோது, ’மாற்றுத் திறனாளிகளையும் ஆதரவற்றோரையும் பெரிதும் மதிப்பவன் நான். மாற்றுத் திறனாளிகள் பள்ளி ஒன்றுக்கு எனது தந்தையாரின் பெயரில் வகுப்பறை ஒன்றை கட்டித் தந்திருக்கிறேன். அப்படிப்பட்ட நான் மாற்றுத் திறனாளிகளை இழிவுபடுத்தும் நோக்கில் எப்படிப் பேசுவேன்? பொதுக்கூட்டத்தில் நான் தெரிவித்த கருத்துகள் அரசியல் ரீதியான விமர்சனம் தானே தவிர, மாற்றுத்திறனாளிகளை புண்படுத்தும் நோக்கத்தில் சொல்லப்பட்டது இல்லை.
எனது பேச்சு தொடர்பாக மாற்றுத் திறனாளிகள் சங்கத்திலிருந்தும், வேறு பலரும் என்னிடம் ஆதங்கப்பட்டார்கள். கனிமொழி அவர்களை நானே தொடர்புகொண்டு என் தரப்பு விளக்கத்தைச் சொன்னேன்.
மாற்றுத்திறனாளி சகோதர சகோதரிகளுக்கும் அவர்கள் நலன் விரும்பிகளுக்கும் நான் சொல்லிக்கொள்வது என்னவென்றால், மாற்றுத்திறனாளிகளை சிறுமைப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலோ, அவர்களின் மனதை புண்படுத்த வேண்டும் என்ற எண்ணத்திலோ நான் அந்தக் கருத்துகளை தெரிவிக்கவில்லை. அது முழுக்க முழுக்க அரசியல். ஒருவேளை, எனது பேச்சு உங்கள் மனதை புண்படுத்தி இருந்தால் அதற்காக உங்களிடம் நான் பகிரங்கமாக வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்’ என்றார் ராதாரவி.