மோடிக்கு பதிலடி: “நாங்களும் செல்ஃபி எடுப்போம்ல…!”
மக்கள்நலக் கூட்டணித் தலைவர்கள் வைகோ, ஜி.ராமகிருஷ்ணன், தொல்.திருமாவளவன், இரா.முத்தரசன் ஆகியோர் சேர்ந்து எடுத்துக்கொண்ட செல்ஃபி இன்று காலை முதல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
திருமாவளவன் செல்ஃபி எடுக்க மற்ற தலைவர்கள் புன்னகையுடன் போஸ் கொடுத்திருக்கின்றனர். இந்த செல்ஃபியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.
அந்த செல்ஃபியை #makkalnalaselfie #mnkselfie #makkalnalan makkalnalan.in ஆகிய ஹேஷ்டேகுகள் கீழ் டிரண்டாக செய்திருக்கிறார்கள்.
செல்ஃபி எடுக்கும் அரசியல் தலைவர்களில் மோடிக்கே இன்றளவும் முதலிடம் என்றாலும் மக்கள் நலக் கூட்டணித் தலைவர்களின் இந்த முதல் செல்ஃபி சற்றே சிறப்பானதாக உள்ளது.
காரணம் செல்ஃபியுடனே இருக்கும் படவிளக்கம். “இது ஊழலை ஒழிக்கும் செல்பி, மீத்தேன் திட்டம் தடுக்கும் செல்பி, மதுவிலக்கு அமலாக்கும் செல்பி, தீண்டாமை ஒழிக்கும் செல்பி, கொள்கை அரசியல் முழங்கும் செல்பி…” என செல்ஃபியுடன் 5 கொள்கைகள் விளக்கப்பட்டிருக்கின்றன.
மக்கள்நலக் கூட்டணி தோற்றுவிக்கப்பட்டபோதே மக்கள் பிரச்சினைகளுக்காக ஒன்றாக குரல் கொடுப்போம் என்ற கொள்கை முழங்கப்பட்டது. அது இப்போது அவர்களது செல்ஃபியிலும் பிரதிபலித்துள்ளது என்றே சொல்லலாம்.
இந்த செல்ஃபி பதிவேற்றப்பட்ட 45 நிமிடங்களில் 400-க்கும் மேற்பட்ட லைக்குகள் குவிந்துள்ளன (நீங்கள் இச்செய்தியை படிக்கும்போது லைக் எண்ணிக்கை இன்னும் உயர்ந்திருக்கலாம்).
அதுமட்டுமல்லாது மக்கள் தங்கள் கருத்துகளையும் பதிவு செய்துள்ளனர். மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் செல்ஃபிக்கு டேக் லைன் வைத்த பாணியிலே இந்த செல்ஃபி கூடங்குளம் பிரச்சினையை தீர்க்க வேண்டும்.. இந்த செல்ஃபி முல்லை பெரியாறு பிரச்சினையை தீர்க்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.