ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு நெடுவாசல் பகுதி விவசாயிகள் கடும் எதிர்ப்பு!
தமிழக அரசியலில் அசாதாரண சூழலை ஏற்படுத்தி அதன்மூலம் மக்கள் கவனத்தை திசை திருப்பி விட்டு புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் எனும் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் எடுக்கும் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் மத்திய மோடி அரசு அத்திட்டத்தை ரத்து செய்வதாக வாக்குறுதி அளித்தது.
இந்த நிலையில், ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் தமிழக அரசியலில் அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. மக்கள் விரோத திட்டம் என ஜெயலலிதா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வந்த பல திட்டங்களுக்கு ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான் அதிமுக அரசு ஒப்புதல் அளித்தது.
அதில் மிக முக்கிய திட்டமாக கருதப்படுவது புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் எனும் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டமாகும். இத்திட்டத்தால் அச்சமடைந்துள்ள அப்பகுதி விவசாயிகள், மத்திய அரசு அந்த திட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
மீத்தேன் வாயுக்களின் பொதுப் பெயரே ஹைட்ரோ கார்பன். ஹைட்ரோ கார்பன் திட்டம் என்பது அதன் வகைகளான மீத்தேன், ஈதேன், ப்ரோபேன், பியூட்டேன் எனும் அனைத்து வாயுக்களின் கலவைதான். இவற்றை ஷேல் காஸ், டைட் காஸ் என்றும் பிரிக்கலாம் எனவும் கூறுகின்றனர்.
நிலத்தில் இருந்து இயற்கை எரிவாயுவை எடுப்பது சுற்றுசூழலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும். நிலத்தடி நீர் வளம் குறையும் என்பதும் இந்தத் திட்டத்தை எதிர்ப்பவர்களின் குற்றச்சாட்டு. எரிவாயுவை எடுப்பதற்கு செங்குத்தாகவும், படுக்கைவசமாகவும் 1000, 5000 மீட்டர் துளைகள் அமைக்கப்பட்டு நிலத்தடி நீர் வெளியே உறிஞ்சப்படும் என்கிறார்கள் அவர்கள்.
இதுபோன்ற திட்டங்கள் பொதுவாக கடலை ஒட்டியுள்ள பகுதிகளில் செயல்படுத்தப்படும். அம்மாதிரி செயல்படுத்தப்படும் போது, நிலத்தடியில் உள்ள நீர் வளம் குறையும் என்ற பிரச்சனை எழுவதில்லை. ஆனால் தற்போது விவசாயப் பகுதியில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுவதுதான் எதிர்ப்புக்குக் காரணம்.
காவிரி நீர், கானல் நீராகிப் போன நிலையில், டெல்டா மாவட்டங்களின் கடைமடை பகுதியான புதுக்கோட்டை மாவட்டத்தில் கிணற்று பாசனத்தை நம்பியே விவசாயம் நடைபெற்று வருகிறது. ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் நிலத்தடி நீர் வளம் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் அழிந்து போகும் என்கிறார்கள்.
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதி மலர் வணிகத்திற்குப் பெயர் பெற்றது. இந்தப் பகுதியில் மலர் தொழிற்சாலை கட்டி தர வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது. ஆனால் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்தினால், மலர் விவசாயம் முற்றிலும் வீணாகும் என்று விவசாயிகள் கூறுகின்றனர்.
நெடுவாசலை தொடர்ந்து காரைக்காலிலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.