“கிரிமினல் சாமியாரின் பிசினஸ் வளர்ச்சிக்காக வருகிறார் என்றால், அவர் யாருக்கான பிரதமர்?”

ஆன்மிக வணிகர்… தன்னை யோகி என சொல்லிக்கொள்கிறவர். நம் கண் முன்னே காட்டை அழிக்கிறார். அங்கே கட்டிடங்கட்டி  காட்டுயிர்களுக்கு தொல்லை கொடுக்கிறார். அரசு விதிகளுக்கு எதிராக வனப்பகுதிகளை வளைத்துப்போட்டு அத்துமீறல்களில் ஈடுபடுகிறார். அவருடைய அக்கிரம செயல்களுக்காக ஏராளமான வழக்குகளை போடுகின்றன பூவுலகின் நண்பர்கள் மாதிரியான சுற்றுசூழல் பாதுகாப்பு அமைப்புகள். பலரும் எதிர்ப்பு காட்டுகிறார்கள். ஆனால் அவர் தொடர்ந்து காட்டை அழிக்கும் வேலைகளில் குற்றவுணர்ச்சியே இல்லாமல் ஈடுபடுகிறார். 1993ல் 37ஆயிரம் சதுர மீட்டர் இருந்த ஆஸிரம அளவு… இப்போது 55ஆயிரம் சதுர மீட்டராக உயர்ந்து நிற்கிறது. அத்தனைக்கும் ஆசைப்படுகிற அந்த மன அமைதி வியாபாரியின் பெயர் ஜக்கி வாசுதேவ் அவருடைய வணிக நிறுவனத்திற்கு பெயர் ஈஷா.

”நாங்கள் பசுமை விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். ஒரு கோடி மரக்கன்றுகளை நட்டுள்ளோம்… நாங்கள் செய்த பசுமை புரட்சிக்காக மத்திய மாநில அரசுகள் விருது கொடுத்துள்ளன… ” என்று இந்த காட்டுயிர் அழிப்பான்கள் எப்போதும் மறுப்புத் தெரிவிக்கின்றன.

# ஆனால் காட்டில் இருக்கிற மரங்களை எல்லாம் வெட்டிவிட்டு நாட்டுக்குள் மரக்கன்றுகளை நடுவது ஏன்?

# காடுகளை அழித்துவிட்டு நாட்டை பசுமையாக்குவது தான் பசுமை புரட்சியா?

# காட்டில் இருக்கிற மரங்கள் என்பது வீணாக வளர்ந்து நிற்கிறதா… அந்த மரங்களை அழித்துவிட்டால் அதை நம்பி வாழ்கிற காட்டுயிர்கள் என்ன செய்யும்?

# வனச்சூழல் பாழானால் நம் வாழ்வுச்சுழலும் பாழாகாதா?

# ஏற்கனவே காடுகளின் பரபரப்பளவு குறைந்துவரும் நிலையில் மேலும் மேலும் ஆக்கிரமிப்பது தவறில்லையா?

# காட்டுக்குள் பல ஆயிரம் பேரைக்கூட்டி வைத்து சிவராத்திரி விழா நடத்துவதால் சூழல் சிதைவு உண்டாகும்தானே?

# காட்டுயிர்களின் இடங்களை ஆக்கிரமிப்பதால் அவை ஊருக்குள் வர நேரும். இதனால் MAN ANIMAL CONFLICT வராதா?

என்கிற எளிய கேள்விகளுக்கும் கூட ஈஷா பதில் சொல்லத் தயாராயில்லை. எதுவாக இருந்தாலும் சட்டப்படி சந்திப்போம் வாடா என தொடை தட்டி அழைக்கும். அரசிடமிருந்து பெற்ற விருதுகளையே சாட்சிக்கு நிறுத்தி வைக்கும். அதனால்தான் உயர்நீதிமன்றமே உத்தரவிட்ட போதும் விளக்கம் கேட்டபோதும்கூட… ”போடா அங்கிட்டு… அந்த அரசாங்கமே எங்க பக்கம்” என்று ஈஷாவால் சீன் போட முடிகிறது. எத்தனை தடைகள் விதித்தாலும் கட்டிடங்கட்டுவதை நிறுத்த மாட்டோம் என கொக்கரிக்கிறது.

அயோக்கியத்தனங்களுக்கும் ஆன்மிகத்துக்கும் என்னமோ அப்படி ஒரு ஃபெவிகால் நெருக்கம். ஈஷா மட்டும் என்ன விதிவிலக்கா… ஏற்கனவே பெண்களை மயக்கி மொட்டை அடித்து வைத்திருக்கிறார்கள் என்றும் கூட குற்றச்சாட்டுகள் இவர்கள் மீதும் உண்டு.

முதலில் லிங்கம் வைத்திருந்தாலும்… எங்களுக்கு மதமில்லை என்றனர். ஆனால் விபூதி கொடுத்தனர். பிறகு லிங்கத்திற்கு பின்னாலேயே சக்தி பீடமோ என்னமோ ஒன்றை வைத்து குங்குமம் கொடுக்க ஆரம்பித்தனர். மலைச்சுனையிலிருந்து இயற்கையாக வருகிற நீரை உறிஞ்சி குளம்வெட்டி உள்ளேயே புனிதக் குளியலுக்கும் ஏற்பாடு செய்துள்ளனர். ஆனால் இது எதுவுமே இந்துமதத்திற்கு தொடர்புடையது இல்லையாம்… எல்லாமே ஓர் இறை கொள்கைதானாம்… இப்போது ஆதியோகி என மிகப்பெரிய சிவன் சிலை ஒன்றை நட்டுவைக்க போகிறது ஈஷா. இதுவும் கூட இந்துமதம் தொடர்பானது இல்லையாம்…

போய் தொலையட்டும் அந்தக் கற்சிலை என்னவாகவும் இருக்கட்டும். ஆனால் அந்த சிலையை வைக்க வெறும் 300 சதுர மீட்டர் அளவுக்குத்தான் மாவட்ட ஆட்சியரால் அனுமதி வழங்கபட்டுள்ளது. ஆனால் சிலையை சுற்றி ஒருலட்சம் சதுர அடியில் பார்க்கிங், மண்டபங்கள், பூங்கா என தன் வேலையை ஆரம்பித்துவிட்டது ஜக்கி வாசுதேவ் சாமியாரின் ஆஸிரமம். இந்த கட்டுமானங்களுக்கு மலைப்பிரதேச பாதுகாப்பு குழுமத்தின் அனுமதி வாங்கப்படவில்லை. வனத்துறையின் அனுமதி பெறப்படவில்லை. சுற்றுசூழல் அனுமதியும் நொன்னைதான். இப்போது ஆக்கிரமித்திருப்பது நொய்யல் ஆற்றின் நீர்பிடிப்பு பகுதி.

அப்படிப்பட்ட ஒரு சிலையை திறக்கிற  விழாவுக்கு தன்னுடைய இடைவிடாத பணிகளை எல்லாம் தூக்கிப்போட்டுவிட்டு டெல்லியிலிருந்து கோயம்புத்தூர் வரைக்கும் பாய்ந்தடித்துக்கொண்டு ஒரு நாட்டின் பிரதமர் கிளம்பி வருகிறார். அவருக்கு இந்த சாமியாரின் மீதிருக்கிற அத்துமீறல் வழக்குகள் பற்றி ஒன்றுமே தெரியாதா… இப்படி ஒரு முட்டாளைப் போல கிளம்பிவந்து அந்த சாமியாரோடு இழித்தபடி மேடையில் உட்கார்ந்திருந்தால்… அவனுடைய குற்றங்களுக்கு துணை போவதாக ஆகிவிடாதா?

ஊரில் ஒரு திருடன்… அல்லது திருடன் என குற்றஞ்சாட்டப்பட்டவன். ஒரு காதுகுத்து கல்யாணம் வைக்கிறான். அதில் கலந்துகொள்ள திருடன் தன்னுடைய திருட்டில் பங்குகொடுத்து கவுன்சிலரை அழைத்து வருகிறான் என்றால்… அதற்கான காரணம் என்னவாக இருக்கும். ‘இங்க பார் கவுன்சிலரே என் பிரண்டுதான்… பிராது குடுத்தா வகுந்துடுவேன்’ என்பதாகத்தானே இருக்கும். ஈஷா செய்ய நினைப்பது இதைத்தான்.

நாம் வாக்களித்து தேர்ந்தெடுத்த மக்கள் பிரதிநிதியான ஒரு பிரதமர் இதை உணர வேண்டாமா? மலைகிராமத்து மக்களெல்லாம் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்… அதுவெல்லாம் பிரதமருக்கு தெரிந்திருக்குமா? அல்லது தெரியாதது போல இருந்துவிடுவாரா? அந்தச் சாமியாரின் மீதும் இப்போது திறந்து வைக்கிற சிலைக்கு பின்னாலும் இத்தனை அத்துமீறல்கள் அல்லது குற்றச்சாட்டுகள் இருக்கும்போது அந்த சிலையை தன்னுடைய திருக்கரங்களால் திறந்துவைப்பது என்பது ஒரு குற்றவாளியின் குற்றத்திற்கு துணைபோவது என்பதைக்கூட அறியாதவரா நம் பாரதப் பிரதமர்.

காவிரி டெல்டாவில் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். அவர்களுக்காக வந்திருக்கலாம்… மெரீனாவில் தமிழகமே திரண்டு போராடியபோதாவது வந்திருக்கலாம்…  காவிரி பிரச்சனை வெடித்தபோதாவது எட்டிப் பார்த்திருக்கலாம்… அப்போதெல்லாம் வராத ஒரு பிரதமர்… ஒரு சாமியாரின் பிஸினஸ் டெவலப்மென்ட்டுக்காக வருகிறார் என்றால் அவர் யாருக்கான பிரதமர்?

ATHISHA VINO