“கட்சிகளின் விளையாட்டை வேடிக்கை பார்த்தது போதும்; மக்கள் பிரச்சனைகளில் கவனம் வைப்போம்!”

மக்களாகிய நாமே மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகளைப் புறந்தள்ளி அரசியல் கட்சிகளின் சித்து விளையாட்டுகளை வேடிக்கை பார்த்துக் காலம் கழித்துக்கொண்டிருக்கிறோம். பிறகு, மீடியாவோ, அரசோ மக்கள் பிரச்சனையைக் கவனிக்கவில்லை என்று சொல்வதில் நியாயம் என்ன இருக்க முடியும்?
அரசியல் கட்சிகள் பலம் இழக்கும் போதெல்லாம் அவைகளின் சுய ரூபம் வெளிப்படுகின்றன.
அவ்வளவுதான்.
சசிகலா சக்தி வாய்ந்தவராக இருக்கும்போது தமிழக முதல்வரை யாருமே பார்க்க முடியாதவாறு அடைத்து வைத்திருந்தாரே…. அப்போது அநியாயம் நடக்கவில்லையா?
அல்லது ஜெயலலிதாவின் சர்வாதிகார ஆட்சியில் நடக்கவில்லையா?
எல்லா காலகட்டத்திலும் நடக்கத்தான் செய்தது. இன்னும் சொல்லப்போனால் இன்று நடப்பதை விட வீரியத்துடன் நடந்து கொண்டிருந்தது.
அரசியல்வாதிகள் பலத்துடன் இருக்கும்போது அவர்கள் குற்றங்கள் மக்களை அடையாவண்ணம் பார்த்துக் கொள்ளப்படுகின்றன. மறக்கடிக்கப்படுகின்றன. அரசியல்வாதிகள் பலமில்லாமல் இருக்கும்போது அவர்கள் செய்யும் குற்றங்கள் வெளியில் தெரிகிறது; பெரிதானது போல உணரப்படுகிறது.
அவ்வளவுதான்.
எனவே இந்த அரசியல் கட்சிகளின் சித்து விளையாட்டுகளைப் புறம் தள்ளிவிட்டு மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்துங்கள். விவாதியுங்கள். தீர்வுக்கு உழையுங்கள்.
அரசியல் விளையாட்டை மக்களும், சமூக வலைத்தளங்களும் புறம் தள்ளும்போது தான் மீடியாக்களும், பத்திரிகைகளும் புறந்தள்ளுவார்கள்.
மீடியா, பத்திரிகைகள் உட்பட யாவரும் மக்கள் பிரச்சனைகளில் தான் குவியம் வைக்கிறோம் என்பது புரிபட்டால், அரசியல்வாதிகளும் மக்கள் பிரச்சனைகளைப் பேசவும் தீர்வுக்கு உழைக்கவும் முன்வருவார்கள்.
யாரைக் குறை சொல்லியும் பிரயோஜனம் இல்லை.
நம் தரத்துக்குத் தக்கனவே நமக்கான அரசியல் தலைவர்களும் செயல்படுவார்கள்.
ILANGOVAN GEETHA