“சசிகலா குடும்பத்தின் பிடியில் அ.தி.மு.க. சிக்காமல் தடுப்போம்”: ஓ.பி.எஸ். சூளுரை!
“நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து, அ.தி.மு.க. கட்சி சசிகலா குடும்பத்தின் பிடிக்குள் செல்லாத வண்ணம் தடுப்போம்” என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் வி.கே.சசிகலா, அவரது உறவினர்களான இளவரசி, சுதாகரன் ஆகிய மூவருக்கும் நான்கு ஆண்டு சிறைத் தண்டனை விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனால் முதல்வராகும் கனவு தகர்ந்த வி.கே.சசிகலா, பெங்களூர் பார்ப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனையடுத்து அதிமுகவின் முதல்வர் பதவிக்கு, சசிகலாவால் பரிந்துரைக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமியை முதல்வராக பதவி ஏற்குமாறு தமிழக ஆளுநர் இன்று (வியாழக்கிழமை) அழைப்பு விடுத்தார்.
இது குறித்து தனது அணியினருடன் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம் கூறும்போது, “மறைந்த முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான ஆட்சியை தமிழகத்தில் மீட்டெடுக்கும்வரை எங்களது தர்மயுத்தம் தொடரும். நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து அ.தி.மு.க. கட்சி சசிகலா குடும்பத்தின் பிடிக்குள் செல்லாத வண்ணம் தடுப்போம்” என்றார்.