“10 ரூபாய் நாணயம் செல்லாது” என்ற வதந்தியால் பாதிக்கப்பட்ட இளைஞர் நூதன போராட்டம்!
வங்கிகளும், கடைகளும் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பதாகக் கூறி, நாணயங்களை மாலையாக அணிந்து வந்து, சேலம் ஆட்சியரிடம் இளைஞர் புகார் தெரிவித்தார்.
சேலம் சன்னியாசி குண்டு பகுதியைச் சேர்ந்தவர் சேகர் (வயது 32). இவர் சில்லி சிக்கன் கடை நடத்தி வருகிறார். இவர் 10 ரூபாய் நாணயங்களை பிளாஸ்டிக் கவரில் போட்டும், நாணய மாலையை கழுத்தில் அணிந்தபடியும் வந்து சேலம் ஆட்சியர் வா.சம்பத்திடம் புகார் மனு கொடுத்தார்.
மனுவில், “10 ரூபாய் நாணயங்கள் செல்லும் என ரிசர்வ் வங்கி அறிவிப்புகள் அவ்வப்போது வெளியானதால் எனது கடைக்கு வந்தவர்களிடம் 10 ரூபாய் நாணயங்களை நான் வாங்கிக் கொண்டேன். என்னிடம் தற்போது ரூ.2 ஆயிரம் மதிப்புக்கு 10 ரூபாய் நாணயங்கள் உள்ளன. இந்த நாணயங்களை கடைகளில் கொடுத்து பொருள் கேட்டால், நாணயங்களை வாங்க மறுக்கின்றனர். வங்கியில் டெபாசிட் செய்ய முயன்றபோது, வங்கி அதிகாரிகளும் நாணயங்களை வாங்க மறுத்துவிட்டனர்.
சிறிய அளவில் கடை நடத்தி வரும் எனக்கு ரூ.2 ஆயிரம் அளவுக்கு 10 ரூபாய் நாணயங்கள் முடங்கிவிட்டதால், கடையை நடத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே, நாணயங்களை ரூபாயாக மாற்ற எனக்கு உதவிட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
“நாணயங்களை வங்கியில் டெபாசிட் செய்யுங்கள். வங்கியில் நாணயங்களை வாங்க மறுப்பு தெரிவித்தால், எனக்கு தகவல் கொடுங்கள்” என ஆட்சியர் கூறி அவரை அனுப்பி வைத்தார்.
இது குறித்து ஆட்சியர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
சமூக வலைத்தளங்களில் ‘10 ரூபாய் நாணயங்கள் செல்லாது’ என வெளியாகும் தகவல் வதந்தியே. 10 ரூபாய் நாணயங்கள் செல்லும் என ஏற்கெனவே வங்கிகளுக்கும், வியாபாரிகளுக்கும் கூட்டம் நடத்தப்பட்டு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. எனவே 10 ரூபாய் நாணயங்களை வங்கிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.