“கருத்துள்ள படங்களுக்கு வரி விலக்கு வேண்டும்”: இயக்குனர் கோரிக்கை!

“சமுதாயக் கருத்துகள் கொண்ட திரைப்படங்களுக்கு அரசின் வரி விலக்கு கண்டிப்பாக வேண்டும்”  என்று ‘நிசப்தம்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் அறிவழகன் கோரிக்கை விடுத்தார்.

மிராக்கிள் பிக்சர்ஸ் சார்பில் ஏஞ்சலின் டாவின்சி தயாரித்திருக்கும் ‘நிசப்தம்’ படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா  சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.

இவ்விழாவில் நடிகர் ராதாரவி, ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டி என்கிற நட்ராஜ், இசையமைப்பாளர் (சங்கர்) கணேஷ், தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்.கே.சுரேஷ், இயக்குனர்கள் மீரா கதிரவன், மிஷ்கின், கிருத்திகா உதயநிதி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

இவர்களுடன் படத்தின் நாயகன் அஜய், நாயகி அபிநயா, முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் பேபி சாதன்யா, பழனி, பாடகர் தாமஸ் ஆண்ட்ரூஸ், இப்படத்தின் அறிமுக இயக்குனர் மைக்கேல் அருண் மற்றும் இப்படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப குழுவினர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

இப்படத்தில் பணியாற்றிய மறைந்த பாடலாசிரியர் அமரர் நா.முத்துக்குமாருக்கு ஒரு நிமிட மவுன அஞ்சலியுடன் விழா நிகழ்ச்சி தொடங்கியது.

‘நிசப்தம்’ படத்தின் ஆடியோ உரிமையைப் பெற்றிருக்கும் ராகம் ஆடியோஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பிரசாத் அனைவரையும் வரவேற்றார். அவர் பேசும்போது, “படத்தின் இயக்குனர் என்னுடைய நண்பர். அவரின் வேண்டுகோளுக்காக படத்தைப் பார்த்தேன். பார்த்தவுடன் இப்படத்தை வெளியிட வேண்டும் என்று எண்ணினேன். அத்துடன் இதுவரை ஆடியோ நிறுவனத்தைத் தொடங்காத நான், இப்படத்திற்காக ராகம் ஆடியோஸ் என்ற நிறுவனத்தைத் தொடங்கியிருக்கிறேன். இதுவே இப்படத்திற்கு கிடைத்த முதல் வெற்றியாக கருதுகிறேன்” என்றார்.

இசையமைப்பாளர் ஷான் ஜேஸீஸ் பேசும்போது,‘”இது என்னுடைய முதல் படம். நானும் இயக்குனர் அருணும் பத்தாண்டு கால நண்பர்கள். காத்திருந்து இந்த வாய்ப்பை வழங்கியிருக்கிறார். இதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இப்படத்தின் பாடல்கள் வித்தியாசமாக இருக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.

தயாரிப்பாளர் ஏஞ்சலின் டாவின்சி பேசும்போது, ” என்னுடைய கணவர், என்னுடைய சகோதரர்கள், கணவர் வீட்டார், என்னுடைய நண்பர்கள், தோழிகள், குடும்ப உறவினர்கள் என பலரும் ஒத்துழைப்பும் ஆதரவும் கொடுத்ததால்தான் இப்படத்தைத்  தயாரிக்க முடிந்தது. அவர்களுக்கு இந்தத் தருணத்தில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இது அனைத்து தரப்பினரும் பார்க்க வேண்டிய படம்” என்றார்.

இயக்குனர் அறிவழகன் பேசும்போது, “இந்த படம் பார்த்தேன். ரொம்ப ஆழமான படம். சமூகத்திற்குத் தேவையான படம் என்று நினைக்கிறேன். இன்றைக்கு ஒரு தயாரிப்பாளரை பார்த்து கதை சொல்லப் போனால், படத்துக்கு யூ சர்டிபிகேட் கிடைக்குமா? அல்லது யூ/ஏ கிடைக்குமா? என்று தான் முதலில் கேட்கிறார்கள். படம் முடிந்து சென்சாருக்குப் போய் யூ சர்டிபிகேட் கொடுத்து விட்டார்கள் என்றால், அங்கேயே படத்தின்  வெற்றியை   முடிவு செய்து விடுகிறார்கள். ஆனால் ஆடியன்ஸ் தான் ஒரு படத்தை சக்ஸஸ் பண்ணப் போகிறார்கள். இந்த நேரத்தில் நான் வைக்கிற வேண்டுகோள் என்னவென்றால், யூ-வோ, யூ/ஏ-வோ, என்ன சர்டிபிகேட் வேண்டுமென்றாலும் கொடுங்கள். ஆனால் ‘நிசப்தம்’ மாதிரி சமூக விழிப்புணர்வுக்கு, சமுதாயத்துக்குத் தேவைப்படுகிற துணிச்சலான சப்ஜெக்ட்டுக்கு  நிச்சயமாக யூ சர்டடிபிகேட் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன். அத்தோடு வரி விலக்கும் கொடுக்க வேண்டும். ஏனென்றால், அப்போது தான் மைக்கேல் அருண் மாதிரியான இளம் திறமைசாலி இயக்குனர்கள் தொடர்ச்சியாக நல்ல படமாக எடுக்க முடியும். இந்த கோரிக்கையை இந்த மேடையில் உங்கள் ஆதரவோடு முன்வைக்கிறேன்.‘ என்றார்.

முன்னதாக படத்தின் ட்ரைலரும், ஒரு பாடல் காட்சியும் திரையிடப்பட்டன.

விழாவில் பார்வையற்றவர்கள் இருவர் கௌரவிக்கப்பட்டனர். விழாவின் நிறைவில்  இயக்குனர் மைக்கேல் அருண் நன்றி கூறினார்.