மோடியின் “குரங்கு குளியல்” உரைக்கு தேர்தல் ஆணையம் அனுமதி!
ஒவ்வொரு மாதமும் நாட்டு மக்களுக்கு வானொலி வழியாக பிரதமர் நரேந்திர மோடி உரை நிகழ்த்துவது வழக்கம். இதற்கு “குரங்கு குளியல்” (மங்கி பாத்) உரை என பெயர் சூட்டியிருக்கிறார் மோடி.
(வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் எப்படி உச்சரிக்கிறார்களோ, என்ன பொருள் கொள்கிறார்களோ, நமக்கு தெரியாது. அது பற்றி நமக்கு கவலையும் இல்லை. நமக்கு தமிழ் தெரியும். அதற்கு அடுத்தபடியாக ஆங்கிலம் மட்டும் தான் தெரியும். அதன்படி, “மங்கி” என்றால் “குரங்கு”, “பாத்” என்றால் “குளியல்”; “மங்கி பாத்” என்றால் “குரங்கு குளியல்”. என்ன… சரி தானே…! நம் மீது திணிக்கப்படும் வடமொழிச் சொற்களை இப்படித்தானே திருப்பி அடிக்க முடியும்!)
தற்போது பஞ்சாப், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல்கள், வரும் பிப்ரவரி 4ஆம் தேதி துவங்கி, மார்ச் 8ஆம் தேதி வரை நடைபெறுவதாலும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதாலும், மோடியின் “குரங்கு குளியல்” உரைக்கு அனுமதி கிடைக்குமா என்ற கேள்வி எழுந்தது.
இந்நிலையில், அவர் வானொலியில் உரை நிகழ்த்த அனுமதி கேட்டு மத்திய பாஜக அரசு இந்திய தேர்தல் ஆணையத்தை அணுகியது. “அதனால் என்ன… பேஷா உரை நிகழ்த்தச் சொல்லுங்கோ…” என்று அனுமதி அளித்துள்ளது தேர்தல் ஆணையம்.
இந்த முறை மோடியின் “குரங்கு குளியல்” உரை, பள்ளியிறுதி தேர்வை எதிர்கொள்ள இருக்கிற மாணவர்கள் குறித்து அமையும் என்று தெரிகிறது. “ஆதி காலத்திலேயே நம் முன்னோர்கள், மாற்று உறுப்பு பொருத்தும் அறுவை சிகிச்சை செய்து வந்தார்கள் என்பதற்கான எடுத்துக்காட்டு தான், மனித உடலும் யானைத் தலையும் கொண்ட பிள்ளையார் உருவம்” என்று முன்பொரு முறை விளக்கம் அளித்த மோடி, மாணவர்களுக்கென என்ன உருப்படியான உரை நிகழ்த்திவிட முடியும்…!