பாஜக, காங்கிரஸ் தலைவர்கள் தமிழகத்தை அச்சத்துடனும் மரியாதையுடனும் பார்க்கிறார்கள்!

தமிழகத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தால் அதிர்ச்சி அடைந்த பாஜக, காங்கிரஸ் ஆகிய தேசிய கட்சிகளின் தலைவர்கள் மாநிலத் தலைவர்களிடம் உடனுக்குடன் விவரங்களை கேட்டறிந்துள்ளனர்.

ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கக் கோரி கடந்த 17-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது. 23-ம் தேதி வரை 7 நாட்கள் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் சுமார் 20 லட்சம் பேர் பங்கேற்றனர். சென்னை மெரினா கடற்கரையில் மட்டும் 10 லட்சம் பேர் திரண்டனர். இதனால் ஒட்டுமொத்த தமிழகமே ஸ்தம்பித்தது.

ஆங்கிலம், இந்தி மட்டுமல்லாது நாடு முழுவதும் மாநில மொழி தொலைக்காட்சிகளிலும் இந்தப் போராட்ட காட்சிகள் இடைவிடாது ஒளிபரப்பப்பட்டன. இதனால் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு தொற்றிக்கொண்டது.

எப்போதும் தமிழகத்தை பெரிதாக கண்டுகொள்ளாத பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகளின் தலைவர்கள் இந்தப் போராட்டத்தால் அதிர்ச்சி அடைந்தனர். தமிழகத்தில் உள்ள தங்களது கட்சியின் தலைவர்களை தொடர்பு கொண்டு போராட்ட நிலவரங் களை உடனுக்குடன் கேட்டறிந்துள்ளனர்.

அமித்ஷா

பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா, தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் ராம்லால் ஆகியோர் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோரை தொடர்பு கொண்டு தமிழகத்தில் போராட்டம் யாரால் தொடங்கப்பட்டது? இவ்வளவு பெரிய அளவில் கூட்டம் எப்படி திரள்கிறது? உணவு, தண்ணீர் யார் விநியோகிக்கிறார்கள்? பின்னணியில் யார், யார் இருக்கிறார்கள்? என பலமுறை கேட்டறிந்துள்ளனர்.

பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்களும், மத்திய அமைச்சர்களும் மாநிலங்களவை உறுப்பினர் இல.கணேசன், மாநிலப் பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளை தொடர்புகொண்டு ஜல்லிக்கட்டு போராட்டம் குறித்து விசாரித்துள்ளனர்.

இது தொடர்பாக பாஜக தலைவர் ஒருவரிடம் கேட்டபோது, “சந்திக்க நேரம் ஒதுக்கவே தயங்கும் தேசியத் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் ஜல்லிக்கட்டு போராட்டத்துக்குப் பிறகு தமிழகத்தை அச்சத்துடனும் மரியாதையுடனும் பார்க்கின்றனர். போராட்டம் நடந்த ஒரு வாரமும் தமிழகத் தலைவர்களுக்கு டெல்லியில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்துகொண்டே இருந்தது. ஜல்லிக்கட்டு சட்டத்தை எதிர்த்து வழக்கு தொடர்வது தொடர்பாக வழக்கறிஞர்களுடன் மத்திய அமைச்சர் மேனகா காந்தி ஆலோசனை நடத்தி வந்தார். தமிழக பாஜக தலைவர்களின் நிர்ப்பந்தம் காரணமாக அந்த முயற்சியை அமித்ஷா கைவிடச் செய்தார். முன்பெல்லாம் இதை எதிர்பார்க்கவே முடியாது’’ என்றார்.

ராகுல் காந்தி

ஜல்லிக்கட்டு போராட்டம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரிடமும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 24-ம் தேதி டெல்லி சென்ற தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரிடம், தமிழகத்தில் நடைபெற்ற போராட்டம் குறித்து 2 மணி நேரத்துக்கும் மேலாக ராகுல் காந்தி ஆலோசனை நடத்தியுள்ளார்.

பொதுவாக தமிழக காங்கிரஸ் தலைவர்கள், மேலிடத் தலைவர்களை சந்திப்பது எளிதானது அல்ல. அப்படியே சந்தித்தாலும் அரை மணி நேரத்துக்கும் மேலாக அனுமதி கிடைக்காது. ஆனால், முதல்முறையாக சாப்பிடக்கூட செல்லாமல் தமிழக நிலவரம் குறித்து ராகுல் காந்தி விவரங்களை கேட்டறிந்துள்ளார்.

தமிழகத்தில் நடந்தது போன்ற போராட்டம் மற்ற மாநிலங்களிலும் நடக்கும் வாய்ப்புகள் உள்ளதால் பாஜகவும், காங்கிரஸும் அதிர்ச்சி அடைந்துள்ளன. இதனால் அக்கட்சிகளின் தமிழகத் தலைவர்களுடன் தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

எம்.சரவணன்

Courtesy: tamil.thehindu.com