“அசத்தப்போவது யாரு” மதுரை முத்துவின் மனைவி கார் விபத்தில் பலி!

சன் தொலைக்காட்சி ஒளிபரப்பிய “அசத்தப்போவது யாரு?” என்ற காமெடி நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்றவர் மதுரை முத்து. அதன் பின்னர் சில திரைப்படங்கள், மேடை நிகழ்ச்சிகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் போன்றவற்றில் நடித்து மக்கள் மனதில் இடம் பெற்றுள்ளார்.

மதுரை முத்துவின் மனைவி வையம்மாள் (வயது32). இவர்கள் மதுரை தனக்கன்குளத்தில் வசித்து வந்தனர். நிகழ்ச்சி ஒன்றிற்காக மதுரை முத்து வெளிநாடு சென்றுள்ளார். இந்த நிலையில் சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி கோவிலுக்கு சென்று வர வையம்மாள் திட்டமிட்டார்.

இன்று (வியாழக்கிழமை) காலை அவர் வீட்டில் இருந்து காரில் புறப்பட்டுள்ளார். அந்த காரை டிரைவர் கண்ணன் (32) ஓட்டி சென்றார். காலை 7 மணியளவில் திருப்பத்தூர் கோட்டையிருள் பகுதியில் கார் சென்றபோது எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. அதே வேகத்தில் சாலையோரம் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக சென்று மீட்பு நடவடிக்கையில் இறங்கினர். ஆனால் காரில் இருந்த வையம்மாள் சம்பவ இடத்திலேயே பலியாகி விட்டார். பலத்த காயம் அடைந்த டிரைவர் கண்ணன் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். விபத்து குறித்து திருப்பத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.