சூர்யாவின் ‘சி 3’ பிப்ரவரி 9ஆம் தேதி வெளியாகிறது!
ஹரி இயக்கத்தில் சூர்யா, அனுஷ்கா, ஸ்ருதிஹாசன், சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘சி 3’. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும் இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது.
இப்படத்தின் தணிக்கை பணிகள் முடிந்து, டிசம்பர் 23-ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்தது. ஆனால், தணிக்கையில் ‘யு/ஏ’ கிடைத்ததால் படக்குழு அதிர்ச்சியடைந்தது. மறுதணிக்கையில் விண்ணப்பித்து ‘யு’ சான்றிதழ் பெற்றது படக்குழு. இதனால் டிசம்பர் 23-ம் தேதி படத்தை வெளியிட முடியாமல் போனது.
பொங்கலுக்கு ‘பைரவா’ வெளியானதைத் தொடர்ந்து ஜனவரி 26-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்தது. ஆனால், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள் நடத்திய போராட்டத்தால் வசூல் குறையும் என்று நினைத்து வெளியீட்டை தள்ளி வைத்தார்கள். தற்போது, பிப்ரவரி 9-ம் தேதி இப்படம் வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
விக்னேஷ் சிவன் இயக்கி வரும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சூர்யா. இப்படத்தையும் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது.