உதவிய ‘மீனவ தமிழர்’களை ‘ஜல்லிக்கட்டு தமிழர்’கள் கைவிடலாமா?

சென்னை பெருவெள்ளத்தின்போது படகுகளோடு ஓடி வந்து வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்ற பேருதவி புரிந்தவர்கள் இதே மீனவர்கள்.

வெள்ளம் வடிந்த பிறகு, காப்பாற்ற வந்த படகுகள் சென்னையின் தெருக்களில் விடப்பட்டு, அந்த மீனவர்கள் அதை கடலுக்கு எடுத்துச் செல்ல பட்ட கஷ்டம் எத்தனை பேருக்கு தெரியும்? ஒருவர் நான்கு நாட்களுக்கும் மேலாக, சில ஆயிரம் ரூபாய் கொடுத்தால்தான் வண்டியில் ஏற்றி படகை கொண்டு செல்ல முடியும் என்று அந்த படகிலேயே உட்கார்ந்திருந்த காட்சி கண் முன் வந்து போகிறது.

நேற்றும் தங்கள் அருகில் நடக்கும் அராஜகத்தை காண சகியாது ஓடி வந்து அரணாக நின்று காத்தவர்கள் அதே மீனவர்கள். யாருக்கோ விழ வேண்டிய அடிகளையும், வலிகளையும் தாங்கியவர்கள் அவர்கள். பொருளாதார இழப்புகளை சுமந்து நிற்பவர்களும் இவர்களே.

இந்த சல்லிகட்டுக்கும் இவர்களுக்கும் என்ன தொடர்பு? இந்த போராட்டத்துக்கும் இவனுக்கும் என்ன சம்பந்தம்? அல்லது இந்த சல்லிகட்டோடு தொடர்புடையவனும், அதை விளயாடுபவனும் இந்த அரசின் அராஜகத்தால் ஏதேனும் பாதிப்புக்கு உள்ளானானா?

எம் மீனவ சொந்தங்கள் வந்து எங்களை காத்தார்கள் என்று முகநூலில் பொங்குவதோடு உங்கள் ‘தமிழன்டா’ கோஷம் இரண்டு நாளில் முடிந்து போகும். ஆனால் அந்த மீனவனின் இழந்த வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க அவன் வாழ்நாளை அடகு வைக்க வேண்டும். அவன் சந்ததியின் வாழ்க்கையையும் அடகு வைக்க வேண்டும்.

நாளையும் உனக்கு தேவையென்றால் அவன்தான் மீண்டும் வந்து நிற்கப் போகிறான். இழப்புகளை பற்றி அவனுக்கு கவலை இல்லை. அது அவன் இயல்பு. ஆனால் உங்களுக்கு கொஞ்சமேனும் மனிதம் இருந்தால், ‘தமிழன்டா’ என்று நீங்கள் எழுப்பிய கோஷம் உண்மையானதாக இருந்தால், இழப்புகளையும் வலிகளையும் சுமந்து நிற்பவர்களை ஒருமுறையேனும் போய் பாருங்கள். உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள்.

JOSEPH SATHYAN KISHORE