வீடு முற்றுகை எதிரொலி: “இலவச செக்ஸ்” சர்ச்சை ராதாராஜன் மன்னிப்பு கோரினார்!
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் மாணவர்கள் இளைஞர்கள் போராட்டத்தை, “இலவச செக்ஸ் என்று அறிவித்தாலும் கூட்டம் கூடும் என்று கொச்சைப்படுத்தி பேசிய பீட்டா ஆதரவாளர் ராதாராஜன் வீடு முற்றுகையிடப்பட்டது.
சென்னை பெசன்ட் நகரிலுள்ள அவரது வீட்டை தேமுதிகவினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள் நடத்தி வரும் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் விதமாக, லண்டன் பிபிசி தமிழ் வானொலிக்கு அளித்த பேட்டியிலும், தனது ட்விட்டர் பக்கத்திலும் நேற்று முன்தினம், “இலவச செக்ஸ் என்றாலும் கூட்டம் கூடும்” என்று கருத்து பதிவு செய்திருந்தார்.
இந்நிலையில், இளைஞர்களின் எழுச்சி போராட்டத்தை கொச்சைப்படுத்தி பேட்டி அளித்தற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ராதாராஜனை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் தேமுதிகவினர் இன்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி அப்புறப்படுத்தினர்.
இதன் பின்னர் மன்னிப்பு கோரி ராதாராஜன் ஒரு அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:
ஜல்லிக்கட்டு போராட்டம் நடத்தும் இளைஞர்கள் பற்றி நான் இழிவாக பேசியதாக சமூக வலைதளங்களில் உலவி வரும் தகவல் உண்மையாக நான் பேசிய பேச்சல்ல. சர்வதேச அளவில் புகழ் பெற்ற ஒரு செய்தி நிறுவனத்திலிருந்து அழைப்பதாகக் கூறிய ஒரு நபரிடம் நான் பேசினேன். என்னிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு அரசியல்-சமூகம் சார்ந்த உதாரணங்களைச் சுட்டிக் காட்டி நான் பேசியபோது தமிழகத்தைப் பற்றியோ தமிழர்களைப் பற்றியோ குறிப்பிடவில்லை.
ஒரு மேற்கத்திய நாட்டில் ஒரு குறிப்பிட்ட பிரிவு மக்கள் ஈடுபடும் கட்டுப்பாடற்ற பாலின்பம் பற்றியும் ஒரு வட இந்திய மாநிலத்தில் நடைபெற்று வரும் அரசியல் இயக்கத்தையும் தான் உதாரணமாகக் காட்டினேன். அதிலும் எந்த நாடு என்றோ, எந்த மாநிலம் என்றோ நான் பெயர் குறிப்பிடவில்லை. என் பதிலில் தமிழ், தமிழ் பெண்கள் போன்ற வார்த்தைகளை நான் பயன்படுத்தவே இல்லை. உண்மையை உள்ளபடியே சொல்கிறேன். அந்தச் செய்தி நிறுவனத்துடனான என்னுடைய தொலைபேசி உரையாடல் தற்போதைய ஜல்லிக்கட்டு போராட்டங்கள் ஆரம்பமாவதற்கு இருபது நாள்கள் முன்னாள் நடைபெற்றது.
என்னுடைய விளக்கத்தை தயவு கூர்ந்து ஏற்றுக்கொண்டு எனக்கு எதிரான போராட்டங்களை கைவிடுமாறு தமிழக மக்களை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். எனது பேச்சு தமிழ் மக்களை புண்படுத்தியிருப்பதாக அறிகிறேன். அதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என அவர் கூறியுள்ளார்.