“ஜல்லிக்கட்டுக்கு தடை எனில் பிரியாணியையும் தடை செய்யுங்கள்”: கமல்ஹாசன் அதிரடி
ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு தொடர்ந்து ஆதரவு கொடுத்து வருபவர் நடிகர் கமல்ஹாசன். ஜல்லிக்கட்டு காட்சியை முன்னிறுத்தி ‘விருமாண்டி’ என்ற படத்தையும் இயக்கியிருந்தார்.
India Today Conclave 2017 நிகழ்வில் கலந்து பேசிய கமல்ஹாசனிடம் ஜல்லிக்கட்டு தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விகளும் அவர் அளித்த பதில்களும்:
கேள்வி: ஜல்லிக்கட்டு அனுமதிக்கப்பட வேண்டும் என நினைக்கிறீர்களா, தடை செய்யப்பட வேண்டும் என நினைக்கிறீர்களா?
கமல்: ஜல்லிக்கட்டு பற்றிய தவறான புரிதல் இருக்கிறது. அதன் உண்மையான பெயர் ஏறு தழுவுதல். ஆயிரம் வருடங்கள் பழமையான விளையாட்டு. ஏறு தழுவுதல் என்றால் காளையை அணைத்தல் என்று அர்த்தம். ஸ்பெயினில் விளையாடப்படும் Matador-களின் விளையாட்டாக ஜல்லிக்கட்டை புரிந்து கொள்ளக்கூடாது.
கேள்வி: ஆனால் காளைகள் காயமடைகின்றன என்னும் விலங்கு நல ஆர்வலர்களின் கூற்றுக்கு உங்கள் பதில் என்ன?
கமல்: அப்படியென்றால் அவர்கள் பிரியாணியையும் தடை செய்யப்பட வேண்டும்.
கேள்வி: ஜல்லிக்கட்டு திரும்ப விளையாடப்பட வேண்டும் என விரும்புகிறீர்களா?
கமல்: ஆமாம். ஜல்லிக்கட்டு எங்கள் பண்பாட்டின் ஒரு பகுதி. ஜெ.சி.போஸ் கூட தாவரங்களுக்கு உயிர் இருப்பதை கண்டுபிடித்தார். நமது செயல்களை அவை உணர்கின்றன என்றார். என்ன செய்வோம்? எலுமிச்சை பழம் வெட்டுவதை நிறுத்தி விடுவோமா?
கேள்வி: ஜல்லிக்கட்டில் காளைகள் காயப்படுவதில்லை என்கிறீர்களா?
கமல்: ஆமாம். ஏனெனில் நானே விளையாடியிருக்கிறேன். ஜல்லிக்கட்டு விளையாடிய மிக சில தமிழ் நடிகர்களுள் நானும் ஒருவன்.
கேள்வி: நீங்கள் ஜெயித்தீர்களா, காளை ஜெயித்ததா?
கமல்: ஜெயிப்பது என்றெல்லாம் ஒன்றுமில்லை. எவ்வளவு நேரம் காளையை அணைத்து இருக்கிறீர்கள் என்பதுதான் விளையாட்டு.
கேள்வி: அப்படியெனில் நீங்கள் ஜல்லிக்கட்டை ஆதரிக்கிறீர்களா?
கமல்: நான் தமிழன். எனக்கு அந்த விளையாட்டு ரொம்ப பிடிக்கும். எங்கள் வாழ்க்கை பற்றிய ஆவணம் ஜல்லிக்கட்டு. காளைகள் கொல்லப்படுவதெல்லாம் இல்லை. லேசான காயத்தை கூட காளைகளுக்கு ஏற்படுத்தினால், நீங்கள் ஆட்டத்தில் இருந்து விலக்கப்படுவீர்கள்.
கேள்வி: சுவாரஸ்யமான தகவல்கள். இதற்கு முரணான கருத்துகளும் பலரிடம் இருக்கும். பேட்டிக்கு நன்றி.
கமல்: சொல்லப்போனால், ஜல்லிக்கட்டை விட அதிகம் பேர் மோட்டார் வாகன விபத்துகளில் இறக்கிறார்கள். நன்றி.