சசிகலாவுக்கு எதிரான கோபம் வெடிக்கும் காலம் தூரத்தில் இல்லை!

‘சசிகலாவிற்கு அதிக எதிர்ப்பில்லை’ என்பது போல திருமாவளவனும் வழிமொழிந்துள்ளார் போலிருக்கிறது. நேரடி சந்திப்பும் நிகழ்ந்துள்ளது. நாம் சற்றாவது நம்பிக்கை வைத்திருக்கும் பிம்பங்களும் நம் கண் எதிரேயே உதிர்ந்து வீழ்ச்சியை நோக்கி நகர்வது துரதிர்ஷ்டமானது.

அரசியல் எனும் பத்மவியூகத்தில் நுழைந்தவிட்ட பிறகு வெளியேற முடியாமல், விரும்பாமல் தங்களின் இருப்பை தக்கவைத்துக் கொள்ள அதன் எதிர்அற விதிகளில் சிக்குவது பரிதாபமானது.

சமூக விடுதலைக்கான போராட்டங்களில் ஈடுபட்ட முன்னோடி தலைவர்கள், ‘அதிகாரத்தை’ நோக்கி நகர்ந்ததில்லை, அது அவர்களின் நோக்கமாக இருந்ததில்லை’ என்பதில் நிறைய பாடங்கள் உள்ளன.

சசிகலாவிற்கு எதிர்ப்பில்லை என்பதெல்லாம் பிழைப்புவாத ஊடகங்கள் இணைந்து ஏற்படுத்தும் ஒரு மாயை. அரசியலை முற்றிலும் வணிகமாக எண்ணும், அதற்கேற்ப தந்திரமாக காய் நகர்த்தும் ஒவ்வொருவருமே இதற்கு உடந்தையாக இருப்பதில் ஆச்சரியமில்லை – எதிர்க்கட்சிகள் உட்பட.

ஊடகங்களை விடுங்கள், அன்றாட வாழ்வில் நான் சந்திக்கும் ஒவ்வொருவரிடம் இது குறித்து ஆழமான வெறுப்பு உள்ளது. ‘வேற வழியில்லை, இதுதான் நிதர்சனம்’ என்று அரசியல் அறிவுஜீவிகள் சாமர்த்தியமாக வழிவதைப் போல ஒருவரும் வழியவில்லை.

இந்தக் கோபம் ஒரு குவிமையத்தில் இணைந்து எங்காவது வெடிக்கும் காலம் தூரத்தில் இல்லை என்று தோன்றுகிறது.

SURESH KANNAN