அரசியலில் ஈடுபடுவது பற்றி 3 வாரங்களில் முடிவு: தீபா அறிவிப்பு!
ஜெயலலிதா மரணம் அடைந்ததைத் தொடர்ந்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் பதவியை அவரது தோழி சசிகலா ஏற்றுள்ளார். இதனால் அ.தி.மு.க நிர்வாகம் முழுமையாக சசிகலாவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அடுத்து, அவர் முதலமைச்சர் ஆவதற்கு காய் நகர்த்தி வருகிறார். அப்படி அவர் முதலமைச்சரானால் தமிழக ஆட்சி நிர்வாகமும் அவருடைய முழு கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும்.
எனினும், சசிகலாவின் தலைமையை ஏற்க மறுத்து அதிருப்தியுடன் உள்ள அ.தி.மு.கவின் கீழ்மட்ட நிர்வாகிகளும் அடிமட்ட தொண்டர்களும், தற்போது ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவை ஆதரிக்கத் தொடங்கி உள்ளனர். சென்னை தியாகராய நகர் சிவஞானம் தெருவில் வசித்து வரும் தீபா இதுவரை நேரடி அரசியலில் ஈடுபட்டதில்லை.
ஜெயலலிதா சிகிச்சைக்காக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அவரை பார்க்க அனுமதிக்கப்படாததால் தீபா பரபரப்பு குற்றச்சாட்டுக்களை வெளியிட்டார். ஜெயலலிதா மரணம் அடைந்தபிறகு, அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரங்களை வெளியிட வேண்டும் என்று தீபா வலியுறுத்தி வருகிறார்.
இதன் காரணமாக அ.தி.மு.க.விலுள்ள சிலரது பார்வை தீபா பக்கம் திரும்பியுள்ளது. அவர்கள் தீபாவை அரசியலுக்கு வருமாறு அழைப்பு விடுத்து வருகிறார்கள்.
தீபாவை பார்ப்பதற்காக அ.தி.மு.கவினர் வெளி மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு தினமும் வந்த வண்ணம் உள்ளனர். நேற்று கடலூர், வேலூர், சேலம் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் நூற்றுக்கணக்கில் தீபா வீடு முன்பு திரண்டனர். அவர்கள் தீபாவை வாழ்த்தி முழக்கமிட்டனர்.
”ஜெயலலிதாவின் ரத்த சொந்தம் என்பதால் நீங்கள் தான் அ.தி.மு.க.வை வழிநடத்த முன் வரவேண்டும்” என்றும் அவர்கள் குரல் எழுப்பினார்கள். தீபா முதலில் தன்னை சந்திக்க வருவதை தவிர்க்கும்படி கோரிக்கை விடுத்தார். போஸ்டர்கள் அச்சடித்து ஒட்ட வேண்டாம் என்றும் கூறினார். ஆனால் அதை அ.தி.முக தொண்டர்கள் ஏற்கவில்லை.
தீபா படம் போட்ட பெரிய பெரிய போஸ்டர்களை வைத்து வருகிறார்கள். இன்றும் தீபாவை பார்க்க நிறைய பேர் வந்தனர். தொண்டர்களின் வாழ்த்து முழக்கங்களால் மனம் நெகிழ்ந்த தீபா, நேற்றும் இன்றும் தனது வீட்டின் மாடியில் உள்ள பால்கனிக்கு வந்து தொண்டர்களைப் பார்த்து கையசைத்தார். ரெட்டை இலை சின்னத்தை பிரதிபலிக்கும் வகையில் அவர் இரண்டு விரல்களைக் காட்டியபோது தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர்.
அ.தி.மு.க தொண்டர்களின் தொடர் ஆதரவு காரணமாக தீபாவின் மன நலையில் மாற்றங்கள் ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அவர் தீவிர அரசியலில் ஈடுபட முடிவு செய்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
உங்கள் வாழ்த்துக்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் எதிர்பார்க்கும் நல்ல முடிவை விரைவில் நான் அறிவிப்பேன்.
இன்னும் நான் எந்த முடிவும் எடுக்கவில்லை. எனது எதிர்கால நடவடிக்கை எப்படி இருக்கும் என்பதை சில வாரங்களில் தீர்மானிப்பேன். 2 அல்லது 3 வாரங்களில் எனது முடிவு என்ன என்பது தெரிந்து விடும்.
ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விபரங்கள் வெளிப்படையாக தெரிவிக்கப்பட வேண்டும். அதற்காகத் தான் நான் காத்துக்கொண்டிருக்கிறேன்.
என்னைப் பற்றி தற்போது வரும் தகவல்கள் அனைத்தும் யூகத்தின் அடிப்படையிலேயே உள்ளன. அரசியலில் ஈடுபடுவது பற்றி ஓரிரு வாரங்களில் தெளிவாக சொல்லிவிடுவேன்.
இவ்வாறு தீபா கூறினார்.