மோ – விமர்சனம்
சும்மாங்காச்சுக்கும் பேய் இருப்பதாகச் சொல்லி ஏமாற்றித் திரியும் ஒரு கும்பல், நிஜமாகவே ஒரு பேயின் பிடியில் சிக்கிக் கொண்டால் என்ன ஆகும் என்ற காமெடி திகில் டெம்ப்ளேட்டில், சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் சொல்லப்பட்டிருக்கும் படம் தான் ‘மோ’.
முன்னாள் எம்.எல்.ஏ.வான மைம் கோபிக்கும், ஓர் அடுக்குமாடி குடியிருப்பின் செயலாளரான செல்வாவுக்கும் இடையே, ரியல் எஸ்டேட் தொழிலில் கடும் போட்டி நிலவுகிறது.
மைம் கோபி எந்த இடத்தையும் வாங்குவதற்கு முன்னால், அங்கு பேய், பிசாசு இருக்கிறதா என்று மந்திரவாதியை வைத்துப் பார்த்து, அவை இல்லை என்றால் தான் வாங்குவார்; இருக்கிறது என்றால் வாங்க மாட்டார்.
இந்நிலையில், பாழடைந்து கிடக்கும் பள்ளிக்கூடம் ஒன்று விற்பனைக்கு வருகிறது. அதை வாங்க விரும்புகிறார் மைம் கோபி. அங்கு பேய் இருப்பதாக மைம் கோபியை நம்ப வைக்க வேண்டும் என்று, அவரது தொழில் போட்டியாளரான செல்வா திட்டமிடுகிறார். அப்படி பேய் இருப்பதாக மைம் கோபியை நம்ப வைக்கும் பொறுப்பை 5 பேர் கொண்ட கும்பலிடம் ஒப்படைக்கிறார்.
பேய் இருப்பதாக நம்ப வைப்பது, பின்னர் பேயை ஓட்டிவிட்டதாக கதைவிட்டு பணம் பறிப்பது போன்ற பித்தலாட்ட வேலைகளுக்குப் பெயர் போன அந்த 5 பேர் கும்பல், பொய்யாக பேய் நாடகத்தை அரங்கேற்ற அந்த பள்ளிக்கூடத்துக்குச் செல்லும்போது, அங்கே நிஜமாகவே ஒரு பேய் இருப்பதை அறிந்து அதிர்ச்சியடைகிறது. யார் அந்தப் பேய்? அதனிடமிருந்து அவர்கள் தப்பித்தார்களா, இல்லையா என்பது மீதிக்கதை
பேய் கதைக்கான கதாபாத்திரங்களை நடப்பு விஷயங்களோடு தொடர்புபடுத்தி நம்பகமாக உருவாக்கிய விதத்தில் கவர்ந்து விடுகிறார் அறிமுக இயக்குநர் புவன் ஆர்.நுல்லன். ‘‘மக்கள்கிட்ட பயம் இருக்கிற வரைக்கும் நாம பயப்பட தேவை இல்ல’’ என்று பித்தலாட்டம் செய்யும் ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட இளைஞர்களை அறிமுகப்படுத்தும் விதமே செம!
பாழடைந்த பள்ளிக்கூடத்தில் பேய் வரும் காட்சிகள் நேர்த்தியாக படமாக்கப்பட்டுள்ளன. மைம் கோபியையும், மந்திரவாதியையும் மிரட்டி அனுப்பும் காட்சி கலகலப்பான மிரட்டல். சொதப்பல் திலகமாக நடித்திருக்கும் முனீஸ்காந்த் கலக்கிவிடுகிறார்.
பேய் உலவும் இடங்களைச் சித்தரித்த விதத்தில் இயக்குநர் புவன், ஒளிப்பதிவாளர் விஷ்ணுஸ்ரீ கே, கலை இயக்குநர் பாலசுப்ரமணியம் ஆகியோரின் கடின உழைப்பும், கற்பனையும், உண்மையான திகில் உணர்வை பார்வையாளர்களுக்கு கடத்தி விடுகின்றன.
இரைச்சல் இல்லாமல் மிரட்டும் சந்தோஷ் தயாநிதியின் பின்னணி இசையும், ஒலி வடிவமைப்பாளர் ஆனந்த் ஏற்படுத்தும் சிறப்பு ஒலிகளும் படத்துக்குப் பெரிய பலம்.
எந்த ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தையும் மையப்படுத்தாமல், கதை தன் போக்கில் செல்லும் விதத்தில் அமைக்கப்பட்டிருக்கும் திரைக்கதை குழப்பமில்லாமல் பயணித்தாலும், படத்தின் நீளம் சோர்வைத் தருகிறது. காட்சிகள் சுவையாக இருந்தாலும், திருப்பங்கள் ஊகிக்கக் கூடியவையாக இருக்கின்றன.
கதாநாயகன் என்று யாருமில்லை. ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பேயோட்டும் ஐவர் குழுவில் அனைவருக்கும் சமமான முக்கியத்துவம் வழங்கப்பட்டிருக்கிறது. ஐஸ்வர்யா ராஜேஷ், சுரேஷ் ரவி, ரமேஷ் திலக், தர்புகா சிவா ஆகியோர் நகைச்சுவை இழையோடும் இயல்பான நடிப்பைத் தந்திருக்கிறார்கள். செல்வா, மைம் கோபி ஆகியோர் சில காட்சிகளே வந்தாலும் நிறைவு.
நடிப்பாலும் நகைச்சுவைச் சரவெடிகளாலும் அதிக கைத்தட்டல்களை அள்ளுவது முனீஸ்காந்தும் யோகிபாபுவும். சினிமா ஒப்பனைக் கலைஞராக முனீஸ்காந்த், சினிமா நடிகனாகும் லட்சியம் கொண்டவராக யோகி பாபு என இருவரும் தொடர்ந்து கொளுத்திப் போடும் நகைச்சுவை வெடிகளில் திரையரங்கம் அதிர்ந்துகொண்டே இருக்கிறது. பேய் பங்களாவில் முனீஸ்காந்த் செய்யும் சேட்டைகளும், பேசும் விதமும் படத்தின் கலகலப்புக்கு உத்தரவாதம் அளிக்கின்றன. தன்னுடைய உலக சினிமா ‘அறிவை’ யோகி பாபு வெளிப்படுத்தும் விதம் அட்டகாசம்.
பாசாங்கு இல்லாத நகைச்சுவைப் படம். எதிர்பார்க்கக் கூடிய திருப்பங்களையும், நீளத்தையும் குறைத்திருந்தால் கச்சிதமான பொழுதுபோக்குப் படமாக இருந்திருக்கும்!.
‘மோ’ – காமெடி பிரியர்களுக்குப் பிடிக்கும்!