“வடிவேலு இடத்தை யாராலும் நிரப்ப முடியவில்லை!”
தமிழ் திரைப்பட நகைச்சுவை காட்சிகளில் நடிகர் வடிவேலுவால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை யாராலும் நிரப்ப முடியவில்லை என நடிகர் பாண்டு தெரிவித்தார்.
மதுரை நகைச்சுவை மன்றத்தின் 26-வது ஆண்டு விழா மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் நடைபெற்றது. மன்றத்தின் நிறுவனர் மருத்துவர் ந.சேதுராமன் தலைமை வகித்தார். தலைமை உறுப்பினர் பாண்டியராஜன் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகர் பாண்டு பேசியதாவது:
தமிழ் சினிமாவில் தற்போது நகைச்சுவைக்கு வறட்சி ஏற்பட்டுள்ளது. நகைச்சுவை என்பது இயற்கையாக அமைய வேண்டும். தற்போது வாட்ஸ்அப், பேஸ்புக் மூலமாக நகைச்சுவைகள் மக்களை சுலபமாகச் சென்றடைகின்றன. இதனால் திரைப்பட நகைச்சுவைக்கு முக்கியத்துவம் இல்லாமல் போய்விடுகிறது.
பெரிய பெரிய நகைச்சுவை நடிகர்கள் இருந்த போதிலும், தமிழ் சினிமாவில் பெரியளவில் நகைச்சுவை காட்சிகள் இடம் பெறுவதில்லை. நகைச்சுவை பஞ்சத்தை போக்குவதற்கு தங்கவேலு, சுருளிராஜன், நாகேஷ் போன்றவர்கள் மீண்டும் பிறக்க வேண்டும்.
உடல்மொழி மற்றும் யோசிக்க வைக்கும் வசனங்களுடன் நகைச்சுவை காட்சிகள் இடம் பெற வேண்டும். நகைச்சுவை காட்சிகள் மூலம் சமுதாயத்துக்கு தேவையான நல்ல கருத்துக்களை நடிகர்கள் எடுத்துக் கூற வேண்டும்.
மதுரை வட்டார மொழி சார்ந்த நகைச்சுவை காட்சிகளுக்கு சினிமாவில் எப்போதும் தனியிடம் உள்ளது. நகைச்சுவை காட்சிகளில் நடிகர் வடிவேலுவால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை யாராலும் நிரப்ப முடியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
நகைச்சுவை மன்றத் தலைவர் பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் பேசும்போது, “சிரிப்பு என்பது தன்னை மறந்ததாக இருக்க வேண்டும். மற்ற உயிர்களிடம் இருந்து மனிதனை வேறுபடுத்திக் காட்டுவது சிரிப்பு ஒன்றுதான். சிரித்தால் முகம் அழகு பெறும்” என்றார்.
மருத்துவர் ந.சேதுராமன் பேசுகையில், “தலைமைப் பண்பு வளர்வதற்கு நகைச்சுவை உணர்வு அதிகம் இருக்க வேண்டும்” என்றார்.