மோடியை தோற்கடிக்க நாம் கடக்க வேண்டியது பத்தே பத்து அடிகள் தான்…!
ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பிற்குப் பின், நவம்பர் 13, 2016 அன்று கோவாவில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, “50 நாட்கள் பொறுத்துக் கொள்ளுங்கள். நான் செய்தது தவறு என்றால், என்னை உயிருடன் கொளுத்துங்கள்” என்று கண்ணீர் மல்கக் கூறினார்.
இதோ, 50 நாட்கள் கடந்துவிட்டது. வங்கிகளில் கூட்டம் குறைந்தபாடில்லை; முக்கால்வாசி ATM-கள் மூடிக் கிடக்கின்றன; செலவுக்குக் காசில்லாமல் மக்கள் 2000 ரூபாய் நோட்டுகளுடன் சில்லறைக்கு அலைகிறார்கள்; பொதுத்துறை வங்கிக் கணக்குகளில் பணம் இருந்தும், எடுக்க முடியவில்லை; போதிய பணம் இருக்கிறது என்று ரிசர்வ் வங்கி அறிவிக்கிறது, ஆனால் வங்கிகளுக்குப் போதிய அளவு விநியோகிக்கப்படவில்லை; புழக்கத்திற்குப் பணம் இல்லாமல் மக்கள் வங்கி, வங்கியாக அலையும்போது, கோடி, கோடியாக கருப்புப் பணம், அதுவும் புதிய 2000 நோட்டில் பிடிபடுகிறது.
“நிலைமை சீராக குறைந்தது 4 மாதங்களாவது ஆகும்” என்று முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறுகிறார். மோடியின் திட்டம் படுதோல்வி அடைந்தது கண்முன்னே எல்லோருக்கும் தெரிகிறது.
சமூக வலைத்தளங்கள் அனைத்திலும் மோடிக்கு பெட்ரோல் அனுப்பத் தயார் என்று பதிவுகள் வெளியாகின்றன. அவர்கள் ஒன்றை கவனிக்கத் தவறுகிறார்கள்.
‘கொடுத்த வாக்கைக் காப்பத்த முடியலைன்னா, நாக்கைப் புடுங்கிட்டு சாவேன்’ என்றுதான் மானமுள்ள பொதுமக்கள் கூறுவார்கள். ஆனால், ஓட்டுப் பொறுக்கி அரசியல்வாதிகள் அதிலும் உஷார்.
“என் குடும்பத்தினர் அரசியலுக்கு வந்தால், என்னை முச்சந்தியில் நிறுத்தி சவுக்கால் அடியுங்கள்” – பாமக நிறுவனர் இராமதாஸ்
“நான் செய்தது தவறு என்றால், என்னை உயிருடன் கொளுத்துங்கள்” – மோடி
இவர்களாகவே செய்து கொள்ளமாட்டார்களாம்! நாம் தான் செய்ய வேண்டுமாம்..! இவர்களைச் சுற்றி நிற்கும் கருப்புப் பூனைப் படையினரையும், கட்சி விசுவாசிகளையும் தாண்டி நாம் எங்கே போய் தண்டிப்பது?
“சவுக்கு இங்கே? இராமதாஸின் முதுகு எங்கே?” என்று முன்பு கேட்டுத் திரிந்ததுபோல், இப்போது பெட்ரோலை வாங்கி வைத்துக் கொண்டு நாம் அலைய வேண்டியதுதான்…
ரூ.500, 1000 செல்லாது என்று அறிவித்ததால் உண்டான பாதகங்கள், இனிமேல் ஏற்படக்கூடிய விளைவுகள், இப்படி அறிவித்ததன் நோக்கம் குறித்து ஏராளமான கட்டுரைகளும், புள்ளிவிவரங்களும் வெளிவந்துள்ளன. இப்பிரச்சினையில் மோடியை எவ்வாறு தோற்கடிப்பது என்பது குறித்தும் கொஞ்சம் யோசிக்கலாம்.
சில்லறை வணிகத்தைக் காப்பாற்றுவது குறித்து:
மோடியின் முதன்மையான நோக்கமாக எல்லோரும் கூறுவது – சில்லறை வணிகர்களை அடியோடு ஒழித்து, சில்லறை வர்த்தகத்தில் ரிலையன்ஸ், பிக் பஜார் போன்ற நிறுவனங்களை வளர்த்து விட மோடி முயற்சிக்கிறார் என்பது. அது உண்மைதான் என்பது போல், தற்போதைய நிலைமை இருக்கிறது.
பொதுமக்கள் எல்லோரிடமும் ரூ.2000 நோட்டு மட்டுமே இருக்கிறது. யாரிடமும் சில்லறை இல்லை. எங்கேயும் பொருட்கள் வாங்க முடியவில்லை. வணிகர்களும், பொதுமக்களும் அவதிப்படுகிறார்கள். Swiping Machine இருக்கும் ரிலையன்ஸ், பிக் பஜார் கடைகளில் கூட்டம் அதிகரித்து இருக்கிறது. சில்லறை வணிகத்தில் விற்பனை பாதியாகக் குறைந்து விட்டது.
இதை எப்படி தீர்ப்பது?
சில்லறை இல்லை என்பதற்காக பிக் பஜார், ரிலையன்ஸ் போன்ற சூப்பர் மார்க்கெட்டுகளில் போய், Debit card / Credit card தேய்ப்பதை முதலில் நிறுத்துவோம். நாம் எப்போதும் பொருட்கள் வாங்கும், நமது வீட்டிற்கு அருகில் இருக்கும் கடைகளையே அணுகுவோம். மாதக் கணக்கு சீட்டு (monthly account card) போடச் சொல்லி, நமக்கான பொருட்களை வாங்குவோம். 2000 அல்லது 4000 ரூபாய் அளவுக்குப் பொருட்கள் வாங்கிய பின்பு, அதற்கான பணத்தைக் கொடுத்து, கணக்கை முடிப்போம்.
சில்லறை வணிகர்களும் தாங்கள் பொருட்கள் வாங்கும் மொத்த வணிகர்களிடம் இந்த முறையையே பின்பற்ற வேண்டும். பெரும்பாலான கிராமங்களிலும், சில நகர்ப்புறங்களி்லும் ஏற்கனவே இந்த நடைமுறை உண்டு. இதை எல்லா இடங்களிலும் விரிவுபடுத்துவோம். இதனால், சில்லறை வணிகர்களின் வியாபாரம் பாதிப்படையாமல் தொடரும்.
ஆண்டுக்கணக்கில் பரிச்சயமான நபர்களுக்கு மாதக் கணக்கு வைக்கலாம். புதிய நபர்களை நம்பி எப்படி கடன் கொடுப்பது?
அவர்களுக்கு கடன் கொடுக்க வேண்டாம். அதே நேரத்தில் சில்லறை இல்லை என்ற காரணத்திற்காக அவர்களை சூப்பர் மார்க்கெட்டுகள் பக்கம் தள்ள வேண்டாம். சுங்கச் சாவடிகளில் கொடுப்பது போன்ற கூப்பன் சிஸ்டத்தை வணிகர் சங்கங்கள் கொண்டு வர வேண்டும். ஒரு கடையில் சில்லறைக்காக கொடுக்கப்பட்ட கூப்பனை, இன்னொரு கடையில் பயன்படுத்த முடிய வேண்டும்.
வணிகர் சங்கங்களும், நாமும் இணைந்தால் இது சாத்தியமே.
Online transaction & Cashless Economy
நம் பணம், நாம் உழைத்துச் சம்பாதித்தது. அதை எங்கே சேமிக்க வேண்டும், எந்த முறையில் (online transaction or cash) செலவழிக்க வேண்டும் என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும்; மாட்டு மோத்திரம் குடிப்பவர்கள் அல்ல…
நம்மைச் சுரண்டி, இலட்சம் கோடிகளில் சொத்து சேர்த்துள்ள எந்தவொரு மயிராண்டிக்கும் நமது பணம் கடனாகப் போகவும், அதே கடன் பின்பு வாராக்கடன் ஆகவும் நாம் அனுமதிக்கக் கூடாது.
அதேபோல், மோடி சொல்லும் online transaction அல்லது paytm, airtel money போன்ற E-wallet சேவைகளையும் நாம் முற்றிலும் புறக்கணிக்க வேண்டும்.
ரூ.500, 1000 மதிப்பு இழப்பு ஆன பின்பு, வங்கிகளில் நாம் செலுத்திய பணத்தை மீண்டும் திரும்பப் பெறுவோம். நாம் செலுத்தியது கோடிகளில் அல்ல. ஒரு சில இலட்சங்களில்தான். வாரம் ரூ.24,000 என்ற வரம்பை உயர்த்தச் சொல்லி, வங்கிகளில் குரல் கொடுப்போம். இரண்டு மாதங்களில் நம் பணம், நம் கையில் இருக்க வேண்டும். செலவுகள் அனைத்தையும் ரொக்கப் பணத்திலேயே செய்ய வேண்டும்.
அரசியல் கட்சிகளின் மவுனத்தைக் கலைப்போம்!
மோடியின் ரூ.500, 1000 ஒழிப்பு நடவடிக்கைக்கு எதிராக பேஸ்புக்கில் பெரும்பாலான அரசியல் கட்சிகளின் தொண்டர்கள் (பாஜக நீங்கலாக) எழுதுவதைப் பார்க்க முடிகிறது. கட்சியிலோ, அமைப்பிலோ இல்லாத நம்மைப் போன்ற உதிரிகள் தங்களது ஆத்திரத்தை இணையத்தில் கொட்டுவதைப் புரிந்து கொள்ள முடிகிறது. அரசியல் கட்சித் தொண்டர்களும் இதையே செய்தால் எப்படி? இதைத் தாண்டி செய்ய வேண்டியது இல்லையா?
நீங்கள் எல்லோரும் ஏதோ ஒரு கட்சிப் பொறுப்பில் (ஒன்றியம், வட்டம், மாவட்டம், தலைமைக் குழு) இருப்பவர்களோடு தொடர்புகளைப் பேணுபவர்கள்தானே! நாட்டையே சீர்குலைத்து இருக்கும் பிரச்சினையில் உங்களது கட்சி இன்னும் வாயை மூடிக்கொண்டு இருப்பது ஏன் என்று அவர்களிடம் கேளுங்கள்! ஒருநாள் அடையாளப் போராட்டத்தையும், அவ்வப்போது அறிக்கைகள் விடுவதையும் தாண்டி, இப்பிரச்சினையில் உங்கள் கட்சி உருப்படியாக எதையும் செய்ய முடியாமல் போனதேன் என்று கேளுங்கள்! தேர்தலுக்கு முன்பு ஊர் ஊராகச் சுற்றி மக்களைச் சந்தித்த உங்களது தலைவர்கள், இன்று வீட்டை விட்டு வெளியே வராமல் இருப்பதேன் என்று கேளுங்கள்!
நாள்தோறும் வங்கி வாசல்களில் நிற்கும் பொதுமக்களை அணி திரட்ட, கட்சிப் பொறுப்பாளர்களை ஏன் அனுப்பவில்லை என்று கேளுங்கள்! தேர்தல் காலத்தில் யார் காலிலும் விழுந்து, கூட்டணி வைக்கத் தயாராகும் உங்கள் தலைவர்கள், மோடிக்கு எதிராக ஏன் கூட்டணி அமைக்கவில்லை என்று கேளுங்கள்! ‘தமிழகம் கொந்தளிக்கும்’ என்று மேடைக்கு மேடை முழக்கமிடுகிற தலைவர்கள், அப்படி ஒரு கொந்தளிப்பை உருவாக்க என்ன செய்தார்கள் என்று கேளுங்கள்! மோடிக்கு எதிராக கிளர்ந்து எழாமல் இருப்பது, ஏறக்குறைய மோடியை ஆதரிப்பதற்குச் சமம் என்பதை உரக்கச் சொல்லுங்கள்!
இவை எவற்றையும் நீங்கள் கட்சியில் பேச முடியவில்லை, செயல்படுத்த முடியவில்லை; பேஸ்புக்கில் மட்டும்தான் பொங்க முடிகிறது என்றால், அப்படி ஒரு கட்சியில் இருப்பது என்ன டேஷூக்கு என்பதையாவது நீங்கள் யோசியுங்கள்!
பாஜகவினர், வைகோ-வை முற்றுகை இடுவோம்!
“ரூ.500, 1000 ஒழிப்பில் மக்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை, தேசநலனுக்காக சிறு சிறு அசௌகரியங்களைப் பொறுத்துக் கொள்கிறார்கள்” என்று ஊடகங்களில் தொடர்ந்து பேசும் தைரியத்தை பாஜகவினருக்கும், வைகோ போன்றவர்களுக்கும் யார் கொடுத்தது? மக்களுக்கு எதிரான அரசியலைச் செய்பவர்கள் பொதுவெளியில் எந்தவொரு அச்சமுமின்றி நடமாட முடியும் என்பதை இன்னும் எத்தனை நாளைக்குத்தான் அனுமதிக்கப் போகிறோம்?
முதல்நாள் அவ்வாறு பேசியபோதே எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தால், மறுநாளும் அதேபோல் பேசியிருப்பார்களா? எங்கே போனாலும், கருப்புக் கொடி காட்டுகிறார்கள்; ‘மோடியால் என் தொழில் பாதிக்கப்பட்டு இருக்கிறது; பதில் சொல்லுங்கள்’ என எதிர்க்குரல் எழுப்புகிறார்கள் என்ற நிலை இருந்தால், ஊடகங்களில் இப்பிரச்சினைக்கு ஆதரவாகப் பேச அச்சப்பட்டிருப்பார்கள் இல்லையா?
தேர்தல் கட்சிகள் இதைச் செய்தால், அரசியல் உள்நோக்கத்துடன் செய்கிறார்கள் என்ற ரெடிமேட் பதில் வரும். தேர்தல் அரசியலில் இல்லாத மக்கள் இயக்கங்கள் இப்போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். பாஜகவினர், வைகோ எங்கு சென்றாலும் அவர்களது வாகனங்களை முற்றுகையிட்டு, முழக்கங்களையும், எதிர்க்கேள்விகளையும் எழுப்ப வேண்டும். மக்கள் நலனுக்கு எதிராகப் பேசுபவர்கள், மக்கள்வெளியில் புழங்குவதற்குக் கூசும் நிலை வர வேண்டும்.
மோடியைத் தோற்கடிக்க நாம் கடக்க வேண்டியது 10 அடிகள் தான்…
நாள்தோறும் வங்கி வாசல் முன்பு வரிசையில் நிற்க யாருக்கும் ஆசையில்லை. தனது நிலத்தில் விவசாய வேலை பார்ப்பவர்களுக்கு கூலி கொடுக்க, கிராமத்தில் இருந்து நகரத்திற்கு வரும் விவசாயி, இரண்டு மணி நேரம், மூன்று மணி நேரம் கால் கடுக்க வரிசையில் நின்றால், அவருக்கு ரூ.4000 தரப்படுகிறது. அதுவும் இரண்டு 2000 நோட்டுகள். அவரது விவசாய நிலத்தில் 10 பேர் களை எடுக்கிறார்கள். பத்து பேருக்கும் இப்பணத்தை எப்படி பகிர்ந்து கொடுப்பார்?
பொதுத்துறை வங்கிகளுக்குக் குறைவான பணமே கொடுக்கப்படுகிறது. கிடைத்த பணத்தை காத்திருக்கும் மக்களின் எண்ணிக்கையைக் கணக்கிட்டு, ரூ.4000 என வங்கி ஊழியர்கள் பகிர்ந்து கொடுக்கிறார்கள். ஆனால், அடுத்த நாளும் அந்த விவசாயி, கூலி கொடுத்தாக வேண்டுமே! அவர் அடுத்த நாளும் கிராமத்திலிருந்து கிளம்பி, வங்கி வாசல் முன்பு காத்திருக்கிறார். இப்படித்தான் சிறுதொழில் செய்பவர்களும், வணிகர்களும் வங்கி வாசலில் நிற்கிறார்கள். அவர்கள் கோபம் அடைந்துவிடக் கூடாது என்பதற்காக ‘தேசபக்தி’ என்ற இனிப்பைத் தடவி, மோடி விஷத்தைக் கொடுத்திருக்கிறார். அவர்களும் ஆரம்பத்தில் இரண்டு நாட்களில் பிரச்சினை தீர்ந்துவிடும் என்று ‘தேசத்திற்காக’ வரிசையில் நின்றார்கள்.
50 நாட்கள் கடந்து விட்டன; பிரச்சினை தீரவில்லை. மக்களின் மனதில் இப்போது தேசபக்தி முன்னுக்கு இல்லை. தங்கள் வாழ்வாதாரம் அழிந்து கொண்டிருக்கிறது என்ற வெறுப்புதான் இருக்கிறது. ஆனாலும் பொறுமையுடன் வரிசையில் நிற்கிறார்கள். யார் முதல் கல்லை எறிவது என்பதுதான் அவர்களிடம் இருக்கும் பிரச்சினை.
இவ்விவகாரத்தில் மோடியைத் தோற்கடிக்க, நாம் செல்ல வேண்டியது அதிக தூரமில்லை; பத்தே பத்து அடிகள்தான். ஆம். வங்கி வாசலில் இருந்து, அந்த மக்கள் சாலைக்கு வர பத்து அடிகள்தான். அந்த 10 அடி தூரத்தைக் கடக்க, மக்களைத் தயார்படுத்தப் போவது யார்? அந்த முதல் கல்லை எறியப் போவது யார்?
கீற்று நந்தன்
Courtesy: keetru.com