“வானே இடிந்ததம்மா” பாடலை கேட்டு கண் கலங்கினார் சசிகலா!
ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்ட அதே நாளில் அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக “வானே இடிந்ததம்மா… வாழ்வே முடிந்ததம்மா…’ என்ற பாடல் ஒன்று உருவாக்கப்பட்டது.
மிகவும் உருக்கமான இந்த பாடலை இளையராஜா இசையமைத்துப் பாடியதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. ஆனால் இந்த பாடலை இசையமைத்து பாடியது ‘புறம்போக்கு’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான வர்சன் என்பவர்.
மேலும், இப்பாடலை எழுதியது ஈழத்தமிழரான பொத்துவில் அஸ்மின். இவர் விஜய் ஆண்டனியின் ‘நான்’ படத்தில் இடம் பெற்ற “தப்பெல்லாம் தப்பேயில்லை…” என்ற பாடலை எழுதி பிரபலமானவர்.
இசையமைப்பாளர் வர்சன், பாடலாசிரியர் அஸ்மின் ஆகிய இருவரையும் போயஸ் தோட்ட இல்லத்துக்கு அழைத்து பாராட்டியிருக்கிறார் சசிகலா. இது குறித்து அஸ்மின் கூறியிருப்பதாவது:
நான் எழுதி, வர்சன் இசையமைத்துப் பாடிய ‘வானே இடிந்ததம்மா’ அம்மா இரங்கல் பாடல், உலகம் எங்கும் கவனம் பெற்ற நிலையில், தமிழக மக்களின் மனதிலும் அழியாத காவியமாய் ஆழ வேரூன்றியுள்ளது.
தொடர்ந்து 20 நாட்களுக்கும் மேலாக அம்மாவின் சமாதியில் 24 மணிநேரமும் ‘வானே இடிந்ததம்மா’ பாடல் ஒலித்து வருகிறது.
அந்த வகையில், போயஸ் கார்டனில் அமைந்துள்ள அம்மாவின் வேதா இல்லத்துக்கு எம்மை அழைத்த அம்மாவின் நெருங்கிய தோழி சசிகலா நடராஜன், எம்மை பாராட்டினார். அம்மா இரங்கல் பாடல் தன்னை வெகுவாக பாதித்ததாகவும் தெரிவித்தார்.
அம்மாவின் இரங்கல் பாடலை வர்சன் பாடும்போது, அவர் கண் கலங்கி ஸ்தம்பித்து போனதையும் காணக் கூடியதாக இருந்தது.
இவ்வாறு அஸ்மின் கூறியுள்ளார்.