“போஸ்டரில் என் பெயரையும், படத்தையும் பயன்படுத்த வேண்டாம்!” – தீபா வேண்டுகோள்!
“போஸ்டர்களில் என் பெயரையும், புகைப்படத்தையும் பயன்படுத்துவதை அதிமுக தொண்டர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும்” என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா கேட்டுக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக ‘தி இந்து’ ஆங்கில நாளிதழுக்கு தீபா அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு ஆக வேண்டும் என பல பேர் போட்டியில் உள்ளனர். நான் புதியவள். இந்த தருணத்தில், எந்த உரிமையும் கோர மாட்டேன். அதற்கு பதில் அரசியலில் எனக்கு கதவுகள் தானாக திறக்கட்டும் என காத்திருப்பேன். எனது பார்வையில், அரசியல் என்பது மிகப் பெரிய சவால்.
நான் ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டுள்ளேன். எனவே, யாரை தேர்வு செய்வது என்பது மக்கள் கையில்தான் உள்ளது. அதுதான் சமூகத்தின் நன்மைக்கும் உகந்தது.
போஸ்டர்களில் என் பெயரையும், புகைப்படத்தையும் பயன்படுத்துவதை அதிமுக தொண்டர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இப்போது அது போன்ற செயல்கள் தேவை இல்லை என நினைக்கிறேன்.
அதிமுக தொண்டர்கள் அமைதியாக இருப்பதோடு, என் பெயரில் எந்தவித சர்ச்சையையும் ஏற்படுத்த வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.