“ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் சோதனை நடந்திருக்குமா?”
ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் தலைமைச் செயலரின் வீட்டிலோ, அலுவலகத்திலோ சோதனை நடத்த மத்திய அரசுக்கு தைரியம் வந்திருக்காது என்று மூத்த பத்திரிகையாளர் என். ராம் கருத்துத் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் தலைமைச் செயலர் ராம மோகன ராவ் வீடு மற்றும் அலுவலகத்தில் நடைபெற்ற வருமான வரி சோதனை குறித்து பிபிசி தமிழுக்கு அளித்த பேட்டியில் அவர் இக்கருத்தைத் தெரிவித்தார்.
“ஜெயலலிதா இருந்திருந்தால் கட்டாயமாக நடத்தியிருக்க மாட்டார்கள். மென்மையான நேரத்தில் நடத்தியிருப்பது ஒரு பலவீனம்தான். ஆனால் எப்போதும் நடக்காமல் இருப்பதற்கு, தாமதமாக நடப்பது நன்று எனச் சொல்லலாம். நிலைமை மாறிவிட்டது. வேகமாக நடவடிக்கை எடுக்கலாம். இதை முன்பே செய்திருக்க வேண்டும். ஆனால் எடுக்க முடியவில்லை. ஜெயலலிதா இருந்தபோதும் இதே ராம மோகன ராவ்தான் தலைமைச் செயலராக இருந்தார்” என்று ராம் சுட்டிக்காட்டினார்.
“சேகர் ரெட்டி, சீனிவாசலு, விவேக் ஆகியோர் அப்போதும் இருந்தார்கள். அவர்கள் மீது சந்தேகம் இருந்தது. மணல் குவாரி ஒப்பந்த விவகாரத்தில் அவர்களுக்கு நெருக்கமான தொடர்பு இருந்தது அப்போதே தெரிந்ததுதான். ஆனால், ஜெயல்லிதா இருந்தபோது, இந்த விஷயத்தை தைரியமாக முன்வைக்க மத்திய அரசுக்கோ, ஊடகங்களுக்கோ ஒருவித தயக்கம் இருந்தது, பயம் கூட இருந்தது என்று சொல்லலாம். அது நடைமுறைகளில் உள்ள பலவீனம்” என்றார் என்.ராம்.
“வருமான வரிச் சோதனை ஆளுங்கட்சிக்கு அதிர்ச்சியளிக்கக் கூடியது. இது ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதைப் போலத்தான். கடந்த பல ஆண்டுகளாக தமிழகத்தில் மாபெரும் ஊழல், அதாவது கொள்கைகளை மாற்றி, மாநிலத்தையே கொள்ளையடித்த போக்கு எல்லோருக்கும் தெரியும். பேசப்பட்ட விடயம். அதனால் இப்போதாவது எடுத்திருப்பது ஓர் உறுதியான நடவடிக்கை. வரவேற்கத்தக்கது” என்றார் ராம்.
“இந்த சோதனை நடவடிக்கை, மாநிலத்தின் நேர்மைத் தன்மையை கேள்விக்குறியாக்கும் சம்பவம்” என்றார் அவர். “தலைமைச் செயலாளரே இப்படி என்றால் மற்றவர்கள் எப்படி இருப்பார்கள் என்ற வகையில் அரசாங்கத்தின் மீதே ஆழமான சந்தேகம் ஏற்பட்டுள்ளது” என்றார்.
“இந்த நடவடிக்கையால் அதிமுகவுக்கு உடனடியாக எந்த வகையிலும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை” என்ற அவர், அதே நேரத்தில் அடுத்து கூட உள்ள தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் இந்தப் பிரச்சனையை பெரிதாக எடுத்து பிரச்சனையாக்க திமுகவுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு என்றும், திமுக தற்போது பலம் வாய்ந்த கட்சியாக மாறியிருப்பதாகவும் என்.ராம் தெரிவித்தார்.
அதே நேரத்தில், இந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி, பாரதீய ஜனதாவோ, காங்கிரஸோ தமிழகத்தில் அதிகாரத்தைப் பிடிக்க வாய்ப்பில்லை என்றார் அவர்.
மத்திய அரசு எடுத்த இந்த நடவடிக்கை, ஊழலை ஒடுக்கும் நடவடிக்கையாக பார்க்க முடியுமா என்பது குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள என். ராம், “அப்படிச் சொல்ல முடியாது. ஏனென்றால், பாரதீய ஜனதா கட்சியிலும் பல பேர் ஊழல் மற்றும் கிரிமினல் சக்திகளாக இருக்கிறார்கள். இது ஊழலுக்கு எதிரான நேர்மையான நடவடிக்கை என்று சொல்ல முடியாது” என்று குறிப்பிட்டார்.
உயர் மதிப்பு ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டதால் பல சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாகக் கூறிய அவர், தற்போது 20 அல்லது 30 லட்சம் ரூபாய் புதிய ரூபாய் நோட்டுக்கள் இருந்தாலே பெரிய சிக்கல் வரும் என்று தெரிந்துவிட்டது. அதனால், இந்த விடயம் அதிலும் கூட சிக்கிக் கொண்டிருக்கலாம் என்றார் ராம்.
தமிழக தலைமைச் செயலரின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது, மத்திய துணை ராணுவப் படை அதற்குப் பயன்படுத்தப்பட்டதற்கு மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி எதிர்ப்புத் தெரிவித்திருந்தார். ஆனால், அவரது நிலைப்பாட்டை எல்லோராலும் ஏற்க முடியாது என்றார் என்.ராம்.
“மாநில காவல் துறையை சோதனை நடவடிக்கைக்குப் பயன்படுத்தியிருந்தால் சர்ச்சை ஏற்பட்டிருக்கும். மத்திய படை வந்ததில் தவறில்லை. டிஜிபிக்கு உத்தரவு கொடுத்து, தலைமைச் செயலருக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் தடுக்கப்பட்டு, தேவையற்ற சிக்கல் ஏற்படும் என்பதால் இதைச் செய்திருக்கலாம்” என்றார் அவர்.
“ஆனால், மோடி அரசு சில மாநிலங்களை குறிவைத்து நடவடிக்கை எடுக்கிறதா என்ற கேள்விக்குறி எல்லோர் மனத்திலும் இருக்கிறது. பாஜக ஆளும் மாநிலங்களிலும் ஊழல் இருக்கிறது. ஆனால், எந்த பாஜக மாநிலத்திலும் இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆனாலும், இது வரவேற்கத்தக்க நடவடிக்கை” என்றார் என். ராம்
Courtesy: bbc.com/tamil