“திரையரங்கிற்குள் ஆட்டோக்களை அனுமதிக்க வேண்டும்”: விஷால் கோரிக்கை!
ஜெயம் ரவி, ஹன்சிகா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ‘ரோமியோ ஜூலியட்’ படத்தை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ்.நந்தகோபால் தற்போது ‘கத்தி சண்டை’ படத்தை தயாரித்துள்ளார். இப்படம் வருகிற 23ஆம் தேதி உலகெங்கும் வெளியாகிறது.
இந்த படத்தில் விஷால் கதாநாயகனாக நடித்துள்ளார். நாயகியாக தமன்னா நடித்துள்ளார். நகைச்சுவை வேடத்தில் வடிவேலு, சூரி இருவரும் நடித்திருக்கிறார்கள். முக்கிய வேடத்தில் ஜெகபதி பாபு நடித்துள்ளார். இவர்களுடன் சௌந்தரராஜா, மதன்பாப், தருண் அரோரா, சரண் தீப், ஜெயபிரகாஷ், சின்னி ஜெயயந்த், நிரோஷா, தாடி பாலாஜி, ஆர்த்தி, பாவா லட்சுமணன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் விஷால் பேசுகையில் கூறியதாவது:
முன்பெல்லாம் திரையரங்குகளில் அதிகமாக ஆடோக்காரர்கள் தான் முதல் காட்சி பார்ப்பார்கள். பார்த்துவிட்டு அவர்கள் தங்கள் நண்பர்களிடமும், தங்களது ஆட்டோவில் பயணம் செய்யும் பயணிகளிடமும் ‘படம் நன்றாக இருக்கிறது. தியேட்டரில் போய் பாருங்கள்’ என்று சொல்வார்கள். அதைக் கேட்டு திரையரங்குகளுக்கு கூட்டமும் வரும். படமும் நன்றாக போகும்.
இப்போது ஆடோக்களை திரையரங்க வளாகத்துக்குள் அனுமதிப்பதில்லை. இதனால் பெரும்பாலான ஆட்டோக்காரர்கள் புதுப்படத்தின் முதல் காட்சி பார்க்க முடிவதில்லை.
ஆனால், எங்கள் ‘கத்தி சண்டை’ படம் மூலம் அதற்கு ஒரு விடிவுகாலம் பிறக்க உள்ளது. நான், இப்படத்தின் தயாரிப்பாளர் எஸ்.நந்தகோபால், இந்த படத்தை வெளியிடும் கேமியே பிலிம்ஸ் ஜெயகுமார், படத்தின் இயக்குனர் சுராஜ் ஆகியோர் அனைத்து திரையரங்க உரிமையாளர்களிடமும் ‘கத்தி சண்டை படத்திற்கு ஆட்டோக்களை திரையரங்க வளாகத்துக்குள் அனுமதிக்குமாறு பேசி வருகிறோம். நிச்சயம் இது நடக்கும்.
‘கத்தி சண்டை’ தமிழகத்தில் மட்டும் 400க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது. அதுபோல் ஆந்திரா, கேரளா, கர்நாடகாவிலும் வெளியாகிறது.
வடிவேலு சினிமாவில் ஒரு சகாப்தம். நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த படத்தில் அவர் நடித்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் இல்லாமல் ‘கத்தி சண்டை’ படம் இல்லை. கதையை கேட்டதும் நடிக்க ஒப்புக்கொண்டார். வடிவேலுவின் மறுபிரவேசத்தை எல்லோருமே ஆர்வமாக எதிர்பார்த்தனர். அது என் படம் மூலம் நடந்து இருப்பது பெருமை அளிக்கிறது. அவர் பூத்ரி என்ற மனோதத்துவ டாக்டராக இதில் வருகிறார்.
நகைச்சுவைக்கு படத்தில் பஞ்சமே இருக்காது. முதல் பாதியில் சூரியும், இரண்டாம் பாதியில் வடிவேலுவும் வருகிறார்கள்.
தமன்னா அழகான நடிகை. எங்களுடைய ஜோடி இந்த படத்தில் புதுசாக இருக்கும். தமன்னா கவர்ச்சியாக வருகிறாரா? என்று கேட்கிறார்கள். அவர் கவர்ச்சியாகவோ, நீச்சல் உடையிலோ இதில் நடிக்கவில்லை. பாடல் காட்சியில் எவ்வளவு கவர்ச்சி தேவையோ அந்த அளவுக்கு நடித்து இருக்கிறார்.
எனது படங்களில் இதுவரை கதாநாயகிகளின் முகம் சுழிக்கும் ஆபாச காட்சிகள் இருந்தது இல்லை. இனிமேலும் இருக்காது. இந்த படத்தில் சமூக பிரச்சினை ஒன்றையும் வைத்து இருக்கிறோம்.
இவ்வாறு விஷால் பேசினார்.