திரையரங்கில் தேசிய கீதம் இசைக்க சொன்ன நீதிமன்றம் ஜெ. மரணம் பற்றியும் சுயமாக விசாரிக்க வேண்டும்!”
திரையரங்கில் தேசிய கீதம் இசைக்க வேண்டும் என சுயமாக உத்தரவிட்ட நீதிமன்றம், ஜெயலலிதா மரணத்தையும் சிறப்பு வழக்காக தாமாகவே முன்வந்து எடுத்து, விசாரித்து, தவறு செய்தவர்களுக்கு தண்டனை தர வேண்டும்” என்று நடிகர் மன்சூர் அலிகான் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், அப்போலோ மருத்துவமனை ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த சிசிடிவி பதிவுகளை வெளியிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக இன்று சென்னையில் நடிகர் மன்சூர் அலிகான் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
‘மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளது. அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டிருந்தாலும் அதை ஏன் ரகசியமாக வைக்க வேண்டும்?
தமிழக ஆளுநர், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி என பலரையும் பார்க்க விடாமல் தடுத்தது ஏன்? சாதாரண காய்ச்சல் என்று தானே சொன்னார்கள். பின்னர் பார்க்க முடியாத அளவுக்கு ரகசியம் காத்தது ஏன்?
75 நாட்கள் அடைத்து வைத்து, இல்லாமல் செய்வதற்கு என்ன காரணம்? முதல்வர் கூடவே இருக்கும் மருத்துவக் குழு செப்டம்பர் 22ஆம் தேதி என்ன செய்தது? மருத்துவமனைக்கு ஜெயலலிதா பேசும் நிலையில் சென்றாரா? அல்லது நினைவிழந்த நிலையில் சென்றாரா?
இதற்கான சி.சி டி.வி. காட்சிகள் வெளியிடப்பட வேண்டும். அப்போலோ தலைவர் பிரதாப் ரெட்டி இதற்கு பதில் சொல்ல வேண்டும்.
திரையரங்கில் தேசிய கீதம் இசைக்க வேண்டும் என சுயமாக உத்தரவிட்ட நீதிமன்றம், ஜெயலலிதா மரணத்தையும் சிறப்பு வழக்காக தாமாகவே முன்வந்து எடுத்து, விசாரித்து, தவறு செய்தவர்களுக்கு தண்டனை தர வேண்டும்.
ஐசியுவில் சேர்த்திருந்தாலும் கண்ணாடி வழியாக பார்க்க முடியுமே… அதையும் தடுத்தது ஏன்? நான் பல முறை மருத்துவமனை போனேன். அவர்கள் சொல்வதை கேட்டுவிட்டு வந்தேன். இந்த சந்தேகத்தை அப்போலோ வாசலில் ஏன் கேட்கவில்லை என்றால் ‘ஜெயலலிதா குணமடைகிறார்… ஆப்பிள் சாப்பிடுகிறார். அரை இட்லி சாப்பிடுகிறார்’ என்று சொல்லிக் கொண்டே இருந்தார்கள்.
அவரை பார்த்துக்கொள்ள உடன் இருந்த உதவியாளர் சசிகலா இதற்கு பதில் சொல்ல வேண்டும். எப்படியாவது அவர் நலமாக திரும்பி விடுவார் என்றுதான் நானும் என்னைப் போன்ற கோடிக்கணக்கான தொண்டர்களும் அமைதி காத்தார்கள்.
இதே சசிகலாவை இதே குற்றச்சாட்டுகள் சொல்லித்தானே வீட்டைவிட்டு அம்மா விரட்டினார். எனவே முதல்வர் மரணத்தில் உள்ள சந்தேகத்தை தீர்க்க வேண்டும். ஒரு மாநிலத்தின் முதல்வருக்கே இந்த நிலை என்றால், சாதாரண மக்களின் நிலை என்ன?
நானும் அதிமுகவில் இருந்திருக்கிறேன். பல முறை போயஸ் வீட்டுக்கு குடும்பத்தோடு போய் ஜெயலலிதா அம்மையாரை பார்த்திருக்கிறேன். குழந்தை மனசு அவர்களுக்கு. இப்போது வாட்ஸ் அப், பேஸ் புக்கில் வருகின்ற செய்திகளை பார்க்கிறபோது நெஞ்சு பதறுகிறது.
தமிழகத்தில் தெருத் தெருவாக போய் ‘நான் உங்களுக்காக என் வாழ்வையே அர்ப்பணம் செய்திருக்கிறேன்’ என்று சொல்லிச் சொல்லி உழைத்து தானே இந்த பதவிக்கு வந்தார். அப்படிப்பட்ட ஒரு செல்வாக்கு மிக்க தலைவர் இறந்த பிறகு, அவர் மரணம் ஏன் நடந்தது என்று கேள்வி கேட்கக்கூட ஒருவரும் இல்லையா இந்த தமிழகத்தில்?
எனக்கு ஏற்பட்ட சந்தேகத்தை வெளிப்படுத்தி விட்டேன். இனி இதற்கு அவரோடு இருந்த சசிகலா, அப்போலோ பிரதாப் ரெட்டி ஆகியோர் தான் பதில் சொல்ல வேண்டும். தேவைப்பட்டால் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் முதல்வருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து கேள்வி கேட்பேன்.
அதோடு சட்ட ரீதியாக வழக்கும் போடுவேன். முதல்வரின் அண்ணன் மகள் தீபாவையும் ஏன் தடுத்து நிறுத்தி விரட்டினார்கள்? அஞ்சலி செலுத்தி அடக்கம் செய்வதிலும் ஏன் இந்தனை அவசரம் காட்டினார்கள். ஒரு சாமானிய குடிமகனாக இந்த சந்தேகத்தை எழுப்பி இருக்கிறேன்.
இவ்வாறு மன்சூர் அலிகான் கூறினார்.