“அம்மா” பதவியில் இனி “சின்னம்மா”: அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகள் நேரில் வலியுறுத்தல்!
தமிழக முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமாக இருந்த ஜெயலலிதா கடந்த 5ஆம் தேதியன்று மறைந்தார். அதன் பின்னர் ஓ.பன்னீர்செல்வம் தமிழக முதல்வராக பதவியேற்றுக் கொண்டார்.
இந்நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் பொறுப்பை ஏற்பது யார் என்ற கேள்வி எழுந்தது. இது தொடர்பாக பல்வேறு யூகங்களும் வெளியாகி வந்த நிலையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா கட்சிக்கு தலைமை ஏற்க வேண்டும் என அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் போயஸ் கார்டன் இல்லத்தில் அவரை நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளனர்.
அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன், சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி, முன்னாள் அமைச்சர் ப.வளர்மதி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் சசிகலாவிடம் பேசினர்.
இது தொடர்பாக அதிமுக அதிகாரபூர்வ முகநூல் பக்கத்தில், “வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கட்சியின் அரணாக, மையப் புள்ளியாக செயல்பட்டு கட்சிக்கு தலைமை ஏற்க வேண்டும் என மூத்த நிர்வாகிகள் வலியுறுத்தியதாக” பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதிமுகவில் பொதுச் செயலாளர் பதவி மிகவும் அதிகாரம் வாய்ந்தது என்பதால், அப்பதவியைக் கைப்பற்ற சசிகலா தீவிர முயற்சியில் இறங்கியுள்ளார். இதற்காக, முதல்வர் ஓபிஎஸ், தம்பிதுரை எம்.பி. மற்றும் அமைச்சர்களுடன் கடந்த 3 நாட்களாக தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.
அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்களில் பலர் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரால் தேர்வானவர்கள். எனவே, அவர்களில் பலரும் சசிகலாவுக்கு ஆதரவாகவே இருப்பதாக தெரிகிறது. ஆனால், ஒன்றிய, கிளைச் செயலாளர்கள் என அடிமட்ட நிர்வாகிகளிடமும், தொண்டர்களிடமும் சசிகலாவுக்கு அவ்வளவாக ஆதரவு இல்லை. ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடகங்களிலும் சசிகலா எதிர்ப்பு கருத்துகளையே அதிகம் காண முடிகிறது.
இதையெல்லாம் மீறி, பொதுச் செயலாளர் பதவியை கைப்பற்றி விட வேண்டும் என்ற முடிவில் இருக்கும் சசிகலா, கீழ்மட்ட நிர்வாகிகள் மத்தியில் தன் மீதான ஆதரவு அலையை உருவாக்குமாறு அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், நிர்வாகிகளிடம் அவர் கூறியிருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், பரவலான எதிர்ப்பையும் மீறி அதிமுகவுக்கு தலைமை ஏற்று கட்சியை வழிநடத்துமாறு அதிமுக மூத்த நிர்வாகிகள் சசிகலாவிடம் வலியுறுத்தியுள்ளனர்.