‘இறுதிச்சுற்று’ விமர்சனம்

ஒரு சாதாரண குப்பத்து மீனவப் பெண்ணை, குத்துச்சண்டை பயிற்சியாளன் ஒருவன், எப்படி உலக குத்துச்சண்டை வீராங்கனையாக மாற்றுகிறான் என்பதே ‘இறுதிச்சுற்று’ படம்.

ஹரியானாவில் குத்துச்சண்டை வீரனாக இருப்பவன் பிரபு (மாதவன்). அவன் ஒரு போட்டியில் தோல்வி அடைந்துவிடுகிறான். இதனால் போட்டிகளில் கலந்துகொள்ள அனுமதிக்காமல் அவனை புறக்கணிக்கிறது குத்துச்சண்டை விளையாட்டு சங்கம். இந்நிலையில் அவனது மனைவியும் அவனைவிட்டு பிரிந்து சென்றுவிட, மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகிறான் பிரபு.

எனினும், குத்துச்சண்டை விளையாட்டை தன் உயிர்மூச்சாகக் கருதும் பிரபு, போட்டிகளில் கலந்துகொள்ள இயலாதபோதிலும், குத்துச்சண்டை பயிற்சியாளராக பணியாற்றுகிறான். அவனுக்கும் குத்துச்சண்டை விளையாட்டு சங்கத்துக்கும் உள்அரசியல் காரணமாக மீண்டும் பிரச்சனை ஏற்படுகிறது. விளைவாக, அவன் சென்னைக்கு மாற்றப்படுகிறான். ‘ஒரு குத்துச்சண்டை சாம்பியனை உருவாக்கிக் காட்டுகிறேன், பார்’ என்ற சவாலுடன் சென்னைக்கு வருகிறான்.

சென்னை காசிமேடு குப்பத்தைச் சேர்ந்தவள் மதி (ரித்திகா சிங்). மீன் விற்கும் பெண். அவளுடைய அக்கா லட்சுமி (மும்தாஜ் சர்க்கார்), குத்துச்சண்டை போட்டியில் வெற்றி பெற்றால் காவல் துறையில் வேலை கிடைக்கும் என்ற எண்ணத்தில் குத்துச்சண்டை கற்றுக்கொண்டு, போட்டியில் ஈடுபாடு காட்டி வருகிறாள். ஆனால், அவளது தங்கை மதிக்கு குத்துச்சண்டை விளையாட்டில் துளியும் ஈடுபாடு கிடையாது.

ஒருநாள் லட்சுமி பங்கேற்ற குத்துச்சண்டை போட்டியில் தவறாக செயல்பட்ட நடுவரை இழுத்துப்போட்டு உதைக்கிறாள் மதி. இதை பார்க்கும் பிரபு, மதி அடிக்கும்போது அவளிடம் குத்துச்சண்டைக்கு உரிய ஸ்டைல் இருப்பதைக் கண்டு வியக்கிறான். அவளுக்கு குத்துச்சண்டை பயிற்சி கொடுத்து, சாம்பியனாக்கி, தன் லட்சியத்தை நிறைவேற்றிக்கொள்ள தீர்மானிக்கிறான்.

மதியிடம் சென்று அவளை குத்துச்சண்டை கற்றுக்கொள்ள அழைக்கிறான். ஆரம்பத்தில் பணத்துக்கு ஆசைப்பட்டு குத்துச்சண்டை கற்றுக்கொள்ள வரும் மதி, ஒரு கட்டத்தில் பிரபு குத்துச்சண்டை மீது கொண்டுள்ள வெறியைக் கண்டு, சீரியஸாகி கடினமாக உழைக்கிறாள்.

இது மதியின் அக்கா லட்சுமிக்கு பிடிக்காமல் போகிறது. அவள் சில சூழ்ச்சிகள் செய்து, போட்டியில் மதி கலந்துகொள்ள முடியாதவாறு செய்துவிடுகிறாள். இதனால் மதி மீது கோபம் கொள்ளும் பிரபு அவளை துரத்திவிடுகிறான்.

மதி மீண்டும் பிரபுவிடம் வந்து சேர்ந்தாளா? பிரபுவின் லட்சியம் நிறைவேறியதா? என்பது மீதிக்கதை.

சுமார் 3 ஆண்டுகளுக்குப்பிறகு தமிழ் திரைக்கு திரும்பியிருக்கும் மாதவன், நாயகன் பிரபு கதாபாத்திரத்தில் பிரமாதமாக நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அவருக்கே உரித்தான தனி ஸ்டைலில் நடித்து அசத்தியிருக்கிறார். படத்தில் அவர் பேசும் வசனங்கள் எல்லாம் அரசியல்வாதிகளுக்கும், இந்திய விளையாட்டு சங்க நிர்வாகிகளுக்கும் சவுக்கடி. சில வசனங்கள் பேசுகையில் அவரது துடிப்பும், நடிப்பும் ரசிகர்களை உறைய வைக்கிறது.

நிஜவாழ்க்கையில் குத்துச்சண்டை வீராங்கனையாகத் திகழும் ரித்திகா சிங், இந்த படத்தில் நாயகி மதியாக நடித்திருக்கிறார். அவருக்கேற்ற கச்சிதமான கதாபாத்திரம்.குத்துச்சண்டை சம்பந்தப்பட்ட காட்சிகளில் மட்டுமல்லாமல், மற்ற காட்சிகளிலும் அற்புதமாக நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஒரு குத்தாட்டம் போடுகிறாரே… யப்பா… என்னா குத்து! இவர் புதுமுக நடிகை என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள்.

எந்த பெண் இயக்குனரும் கையிலெடுக்கத் தயங்கும் ஒரு கதையை துணிச்சலாக எடுத்து, எந்த சொதப்பலும் இல்லாமல் பக்குவமாகவும், வெற்றிகரமாகவும் கையாண்டிருக்கும் சுதா கொங்கராவை எத்தனை பாராட்டினாலும் தகும். நுணுக்கமாக செதுக்கப்பட்ட திரைக்கதை, கருத்தாழமிக்க வசனங்கள் படத்தை தூக்கி நிறுத்தியிருக்கின்றன. ரித்திகா சிங்கின் அக்காவாக வரும் மும்தாஜ் சர்க்கார் மற்றும் ஜாகிர் உசேன், ராதாரவி, நாசர், காளி வெங்கட் என படத்தில் நடித்த அனைத்து நடிப்புக் கலைஞர்களின் கதாபாத்திரங்களையும் எங்கேயும் விட்டுவிடாமல் கடைசி வரை கொண்டு வந்திருப்பது பாராட்டத்தக்கது. தமிழ் திரையுலகின் சிறந்த பெண் இயக்குனர்கள் பட்டியலில் சுதா கொங்கரா பெயர் நிச்சயம் இடம் பெறும் என்று பெருமையுடன் சொல்லலாம்.

சந்தோஷ் நாராயணன் இசையில் பாடல்கள் அனைத்தும் அருமை. அவை திரைக்கதையை பாதிக்காத வண்ணம் இடம் பெற்றிருப்பது சிறப்பு. பின்னணி இசையில் மனிதர் வெளுத்து வாங்கியிருக்கிறார். சிவகுமார் விஜயனின் கண்கவர் ஒளிப்பதிவும் படத்துக்கு மிகப் பெரிய பலம்.

‘இறுதிச்சுற்று’ – மகத்தான வெற்றிச்சுற்று!