ஜெயலலிதாவின் அரசியல் ஆலோசகர் ‘சோ’ ராமசாமி அதே அப்போலோவில் மரணம்!
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் “அரசியல் ஆலோசகர்” என்றும், ஜெயலலிதாவின் பினாமி நிறுவனங்களின் பங்குதாரர் என்றும் கூறப்படும் ‘சோ’ என்ற ராமசாமி இன்று (புதன்கிழமை) அதிகாலை 4.05 மணியளவில் அப்போலோ மருத்துவமனையில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 82.
தமிழ்கூறும் நல்லுலகில் சிரிப்பு நடிகர் என்றும், ‘துக்ளக்’ என்ற பத்திரிகையின் ஆசிரியர் என்றும் அறியப்படும் சோ, கடந்த சில மாதங்களாகவே உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். சுவாசக் கோளாறு காரணமாக அவர் சில முறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு, டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இந்த நிலையில், கடந்த வாரம் அவருக்கு சுவாசப் பிரச்சனை மற்றும் உணவு உட்கொள்ள முடியாத பிரச்சனை ஏற்பட்டது. இதனால், ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த அதே அப்போலோ மருத்துவமனையில் கடந்த (நவம்பர்) 29ஆம் தேதி சோவும் அனுமதிக்கப்பட்டார்.
சோ அனுமதிக்கப்பட்ட 6 நாட்களுக்குப்பின், ஜெயலலிதா கடந்த திங்கட்கிழமை (5ஆம் தேதி) இரவு 11.30 மணிக்கு மரணம் அடைந்ததாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்தது. ஜெயலலிதா மரணம் அடைந்த சுமார் இருபத்தி எட்டரை மணி நேரத்தில் அதே அப்போலோ மருத்துவமனையில் அவரது அரசியல் ஆலோசகரான சோவும் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சில ஆண்டுகளுக்குமுன் சசிகலா மற்றும் அவரது உறவினர்களை அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கிய ஜெயலலிதா, அவர்கள் பெயரிலிருந்த தனது பினாமி நிறுவனங்களை சோ மற்றும் அவரது உறவினர்களின் பெயர்களுக்கு மாற்றினார் என்றும், சசிகலா மீண்டும் அ.தி.மு.க.வில் இணைத்துக்கொள்ளப்பட்ட பிறகு அந்நிறுவனங்களில் சில மீண்டும் சசிகலா மற்றும் அவரது சொந்தங்களின் பெயர்களுக்கு மாற்றப்பட்டன என்றும் ‘ஜூனியர் விகடன்’ உள்ளிட்ட ஊடகங்களில் செய்திகள் வெளியானது நினைவுகூரத் தக்கது.