பழைய வண்ணாரப்பேட்டை – விமர்சனம்
க்ரைம், ஆக்ஷன், த்ரில், காதல், காமெடி என சகல அம்சங்களும் கலந்த கலவையாக வெளிவந்திருக்கிறது ‘பழைய வண்ணாரப்பேட்டை’.
நாயகன் பிரஜினும், அவரது நண்பர்களும் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்பை முடித்துவிட்டு, அந்த சந்தோஷத்தில் டாஸ்மாக்கில் சென்று பார்ட்டி கொண்டாடிவிட்டு, வழியில் ஒரு கடையில் சாப்பாட்டை முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்புகிறார்கள்.
இவர்கள் திரும்பிய மறுநிமிடம் இவர்கள் சாப்பிட்டுக்கொண்டிருந்த இடத்தில் அரசியல் பிரமுகர் ஒருவரை ஒரு கும்பல் வெட்டி சாய்க்கிறது. சம்பவ இடத்திற்கு வரும் போலீசார், அப்போது அந்த கடைக்கு வந்து சென்றவர்களை பற்றிய விவரங்களை கேட்கிறது. அப்போது நாயகன் மற்றும் அவரது நண்பர்களை பற்றிய தகவலை போலீசாருக்கு கடைக்காரர் கொடுக்கிறார்.
அதன்பேரில், பிரஜின் மற்றும் அவரது நண்பர்களை சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணைக்கு அழைத்து செல்கின்றனர். அப்போது, அங்கு ஏற்கெனவே சந்தேகத்தின் பெயரில் பிடித்து வைக்கப்பட்டிருக்கும் டான்ஸ் மாஸ்டர் ஜான், நிஷாந்த் ஆகியோருடன் பிரஜின் மற்றும் அவரது நண்பர்கள் நட்புடன் பழகுகிறார்கள்.
இந்நிலையில், அரசியல் பிரமுகருடன் வெட்டுப்பட்ட மற்றொருவர் மருத்துவமனையில் வாக்குமூலம் கொடுக்கும்போது, பிரஜின் நண்பர்களில் ஒருவனை சந்தேகமாக அடையாளம் காட்டுகிறார். ஆனால், போலீசார் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இந்நிலையில், வெட்டுப்பட்டு கிடந்த அரசியல் பிரமுகர் மருத்துவமனையில் இறந்துபோக, போலீஸுக்கு உண்மையான குற்றவாளியை பிடிக்க நெருக்கடி வருகிறது.
இதனால் போலீஸ் வேறு வழியில்லாமல் பிரஜினின் நண்பனையே குற்றவாளியாக காட்ட முடிவெடுக்கிறது. இதனால், அவனை மட்டும் பிடித்து வைத்துக்கொண்டு மற்றவர்களை விடுவிக்கின்றனர். இந்நிலையில், போலீஸ் உயரதிகாரியாக வரும் ரிச்சர்ட், பிரஜினின் நண்பன் உண்மையான குற்றாவளி இல்லை என்று அறிந்து, உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க முயல்கிறார். மறுமுனையில் தனது நண்பனை மீட்பதற்காக பிரஜினும், நிஷாந்தும் உண்மையான குற்றவாளியை தேடி புறப்படுகிறார்கள்.
இறுதியில், யார் உண்மையான குற்றவாளியை கண்டுபிடித்தது யார்? போலீஸ் ஸ்டேஷனில் இருக்கும் பிரஜினின் நண்பன் வெளியே வந்தானா? இல்லையா? என்பதுதான் மீதிக்கதை.
பிரஜின் வடசென்னை வாலிபர் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். நடிப்பிலும் ஓகே சொல்ல வைக்கிறார். அவரது நண்பர்களாக வருபவர்களும் இயல்பாக வந்து நடித்து கொடுத்திருக்கிறார்கள். போலீஸ் அதிகாரியாக வரும் ரிச்சர்ட் கம்பீரமாக, போலீஸ் அதிகாரிக்குண்டான மிடுக்குடன் சிறப்பாக நடித்திருக்கிறார். மாஸ்டர் ஜான் லுங்கி கட்டிக்கொண்டு வடசென்னை ஏரியா தாதாவாக பளிச்சிடுகிறார். நிஷாந்த் வழக்கம்போல தனது கதாபாத்திரத்தை செவ்வனே செய்திருக்கிறார்.
ஆக்ஷன், திரில்லர் படமாக இருந்தாலும், காதல், காமெடி என அனைத்தையும் அளவாக சேர்த்துள்ளார் இயக்குனர் மோகன் ஜி. தான் சொல்ல வந்ததை ரொம்பவும் நேர்த்தியாக சொல்லியிருக்கிறார். நாயகியிடம் நாயகன் காதலை சொல்லும் காட்சிகள் புதுமையாக இருக்கிறது.
இசையமைப்பாளர் ஜுபினின் இசை படத்திற்கு மிகப் பெரிய பலமாக இருந்திருக்கிறது. ஆரம்பத்தில் கிளைமாக்ஸ் வரை பின்னணி இசையால் படத்தை தூக்கி நிறுத்தியிருக்கிறார். பாடல்களிலும் தாளம் போட வைக்கிறார். ஒளிப்பதிவாளர் பாரூக் வண்ணாரப் பேட்டையின் மூலை முடுக்குகளையெல்லாம் நன்றாக படமாக்கியிருக்கிறார்.
‘பழைய வண்ணாரப்பேட்டை’ – பார்க்கலாம்!