தலித்துகளாக நாம், வாழ்க்கையாக பன்றி, அரசாக தேசிய கீதம்…!

Fandry என ஒரு மராத்தி படம். அற்புதமான படம். நம்ம ‘அழகி’ படம் போல் பால்ய கால காதல்தான். ஒரே வித்தியாசம், அது பேசும் சாதி ஒடுக்குமுறையின் தீவிரம்!

பட நாயகன் சக பள்ளி மாணவி ஒருத்தியை காதலிப்பான். அவள் தமிழ் நாயகிகள் போல் நாயகனை காதலிக்க மாட்டாள். ஏனென்றால் நாயகன் தலித். நாயகி உயர்சாதி. காதலும் சாதி பார்த்துதானே வருகிறது!

நாயகனின் குடும்பம் ஊருக்கு வெளியே வசிக்கிறது. ஊருக்குள் பன்றி பிடிப்பதுதான் குடும்பத்துக்கு தொழில். நாயகனை மட்டும் படிக்க வைப்பார்கள். பள்ளிக்கு வந்ததுமே தனக்கு எந்த பிரச்சினையும் இனி இருக்க போவதில்லை என்ற அரசியல் புரிதலற்ற முட்டாளின் கற்பனையோடு, நாயகியை தன்னை காதலிக்க வைக்க முயன்று கொண்டிருப்பான்.

நாயகனின் வகுப்பில் சண்டியராக உயர்சாதி பையன் ஒருவன் இருக்கிறான். நாயகனின் காதல் அவனுக்கு பிடிக்கவில்லை. உயர்சாதி ஆணவம் உடன் இ்ருப்பதாலும் நாயகனை சீண்டிக் கொண்டே இருப்பான். அவனுக்கு ஊரின் உயர்சாதி இளவட்டம் ஒருவனுடன் பழக்கம் இருக்கும். நாயகனுக்கோ நியாய வியாக்கியானங்கள் பேசி, வேலைவெட்டி பார்க்காமல், ஊர் சுற்றும் இளவட்டம் ஒருவனுடன் பழக்கம் இருக்கும்.

நாயகனின் ஒரே சகோதரிக்கு வீட்டில் மணம் பேசி முடிப்பார்கள். வரன் அதிக தட்சணை கேட்கிறார். மகள் கல்யாணத்துக்காக வேறு வழியின்றி அப்பாவும் சம்மதிக்கிறார். ஊருக்குள் இருக்கும் பெரிய மனிதர்களிடம் எல்லாம் கையேந்தி பணம் புரட்ட முயல்கிறார். சேர்ந்தபாடில்லை. அப்போது ஊர் தலைவர் அழைத்து, திருவிழாவுக்குள் புகுந்து கூட்டத்தை குலைத்த பன்றிக்கூட்டத்தை தேடி அழிக்க சொல்கிறார். அதற்கு கூலியாக ஒரு தொகை கொடுப்பதாகவும் சொல்கிறார். அப்பாவும் சம்மதிக்கிறார். மகனை பள்ளிக்கு விடுமுறை எடுக்க சொல்லிவிட்டு, மொத்த குடும்பத்தையும் பன்றிகளை கொல்ல அழைத்து செல்கிறார்.

இதுதான் க்ளைமேக்ஸ். ஒட்டுமொத்த இந்திய சினிமாவையும் செவுளில் அறைந்த க்ளைமேக்ஸ்.

பன்றிகள் வாழும் குப்பை மேடு நாயகன் படிக்கும் பள்ளிக்கூடத்துக்கு அருகில் உள்ளது. உடன் படிப்பவர்கள் கண்ணில் பட்டுவிடக்கூடாது என்ற கெளரவ உணர்ச்சியாலும், நாயகி பார்த்துவிடக் கூடாது என்ற எச்சரிக்கை உணர்வாலும் பதுங்கி பதுங்கித்தான் வேலை பார்க்கிறான் நாயகன். அவன் ஒத்துழைப்பு கொடுக்காததால் அப்பா திட்டுகிறார். அடிக்கிறார். விரட்டுகிறார்.

பின்பு பள்ளி முடிந்து, எல்லா மாணவர்களோடும் உயர்சாதி மாணவனும் நாயகியும் உட்கார்ந்து, நாயகனின் குடும்பம் பன்றி பிடிப்பதை, வேடிக்கை பார்த்து, எள்ளி நகையாடி கொண்டிருப்பார்கள். பன்றிகளை பிடித்து, கொன்ற பின், அவமானத்தில் கூனிக் குறுகி, ஆத்திரம் மேலெழுந்து, உயர்சாதி மாணவன் மீது நாயகன் கல்லெடுத்து எறிவதாக படம் முடியும்.

சொல்ல வந்த விஷயம், இந்த க்ளைமேக்ஸில் வரும் ஒரு காட்சியை பற்றி!

நாள் முழுக்க, அந்த குப்பை மேட்டில் ஓடி, சுற்றி, வியர்த்து விறுவிறுத்து, பன்றியை அப்பாவும் மகனும் வளைத்து விடுவார்கள். இப்புறம் அப்பா, அப்புறம் மகன் என நடுவே பன்றி நிற்கும். இதை பிடித்தால் மகள் கல்யாணத்துக்கான பணம் அப்பாவுக்கு கிடைத்து விடும். நாயகி கண்ணில் படாமல் சென்று நாயகனும் மானத்தை காப்பாற்றி கொள்ளலாம். அந்த நேரத்தில் ஒன்று நடக்கும்.

பள்ளி முடிந்து, மணி அடிக்கப்பட்டு, மாணவர்கள் கூடி தேசிய கீதம் பாடத் துவங்குவார்கள். குப்பைமேட்டில் ஓடிக் கொண்டிருந்த குடும்பம் நின்று விடும். மகனும் அப்பாவும் அப்படியே நின்று, தேசிய கீதத்துக்கு மரியாதை கொடுத்து கொண்டிருப்பார்கள். பன்றி வெறிக்க வெறிக்க பார்த்துக் கொண்டிருக்கும். அப்பாவுக்கு பன்றி ஓடிவிடுமே என பதற்றம் முகமெங்கும் தேங்கி நிற்கும். மகனும் செய்வதறியாமல் நின்று கொண்டிருப்பான். தேசிய கீதம் முடியும் தருவாயில், பன்றி ஓடி விடும்.

தேசிய கீதத்துக்காக தங்கள் காலத்தை உறைய வைத்து, வாழ்க்கையை இழந்து விடுவார்கள். அற்புதமான காட்சி அது!

இப்படித்தான் நாமும் இருக்கிறோம். அந்த குடும்பமாக நாம், வாழ்க்கையாக பன்றி, அரசாக தேசியகீதம்!

அரசும் ஒடுக்கிக்கொண்டே இருக்கிறது. நாமும் நின்றுகொண்டே இருக்கிறோம். பன்றியும் ஓடிக்கொண்டே இருக்கிறது.

RAJASANGEETHAN JOHN