“அச்சுறுத்தல் பயிற்சிகளை ஆர்.எஸ்.எஸ். நிறுத்தியாக வேண்டும்”: எச்சரித்தவர் எம்.ஜி.ஆர்!
“எம்.ஜி.ஆர் ஒரு ஆர்.எஸ்.எஸ் / இந்துத்துவா சார்பாளர்” என்கிறார்கள். “இடஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோலை எம்.ஜி.ஆர் கொண்டு வந்தது ஆர்.எஸ்.எஸ் சார்பு அணுகுமுறை” என்கிறார்கள்.
அது ஆர்.எஸ்.எஸ் சார்பு அணுகுமுறை கிடையாது. “இடஒதுக்கீடே கூடாது” என்பதுதான் ஆர்.எஸ்.எஸ் சார்பு அணுகுமுறை. எம்.ஜி.ஆர் முயற்சி செய்ததை “கம்யூனிஸ்ட் கட்சி சார்பு அணுகுமுறை” என்று வேண்டுமானால் சொல்லலாம். அவருடைய அந்த முயற்சியை, அன்றைய சிபிஎம் கட்சி ஆதரித்தது, சிபிஐ கட்சி எதிர்த்தது என்பதையும் இங்குக் குறிப்பிடுவது பொருத்தமானது.
எம்.ஜி.ஆர் அந்த முயற்சியைக் கைவிட்டபிறகு, அதிரடியாக பிற்படுத்தப்பட்டோரின் இடஒதுக்கீட்டு அளவை 50 விழுக்காடாக உயர்த்தினாரே, அது கண்டிப்பாக ஆர்.எஸ்.எஸ் விரோத அணுகுமுறை.
கொடைக்கானலில் பெண்களுக்கான தனி பல்கலைக்கழகத்தை தொடங்கிய எம்.ஜி.ஆர், அதற்கு அன்னை தெரசாவின் பெயரை அவர் வாழும் காலத்திலேயே சூட்டினார். அதன் தொடக்கவிழா நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக ஷேக் அப்துல்லாவை அழைத்திருந்தார். அன்னை தெரசா பெயரைச் சூட்டுவதும் ஷேக் அப்துல்லாவை விருந்தினராக அழைப்பதும் ஆர்.எஸ்.எஸ் சார்பு செயல்பாடுகளா?
…மண்டைக்காடு கலவரம் தொடர்பாக அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர் என்ன நிலைப்பாடு எடுத்திருந்தார்?… முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர் அவர்கள் தமிழ்நாடு சட்டப் பேரவையிலேயே இது குறித்துத் தம் அரசின் கருத்தைப் பதிவு செய்துள்ளார். காவல்துறை மான்யத்தின் மீதான விவாதத்துக்கு (29.3.1982) சட்டமன்றத்தில் முதலமைச்சர் பதிலளித்தார். அவர் தனது உரையில் குறிப்பிட்டதாவது:
“மதவாதிகள் அவர்களின் கொள்கை எதுவாக இருந்தாலும் மக்களை ஒற்றுமைப்படுத்துவதாக இருக்க வேண்டும். மதவாதிகள் மக்களைப் பிளவுபடுத்த நினைப்பதை இந்த அரசு அனுமதிக்காது என்பதைத் தெளிவாகச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
“இந்து முன்னணி என்ற பெயரால் பேரணி நடத்துகிறார்கள். இந்தப் பேரணியால் நாட்டுக்கு நன்மையா? சிந்திக்க வேண்டும். இந்து முன்னணிக்காரர்களுக்கு யோசனை சொல்லும் மடாதிபதிகளுக்கும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இது போன்ற செயல்களை அரசு அனுமதிக்காது. குன்றக்குடி அடிகளார் நடந்து கொள்வதுபோல் மற்ற மடாதிபதிகள் நடந்துகொள்ள வேண்டுமே தவிர, மற்ற வழிமுறைகளில் இறங்கக் கூடாது.
“நான் மீண்டும் சொல்லிக் கொள்கிறேன். அச்சுறுத்தல் பயிற்சி கொடுக்கிறார்களே _ அதை அரசு ஏற்றுக்கொள்ள முடியாது. குறிப்பாகச் சொல்கிறேன்; ஆர்.எஸ்.எஸ். தனது பயிற்சிகளை நிறுத்தியாக வேண்டும். ஏற்கெனவே என்.சி.சி., சாரணர் பயிற்சிகள் இருக்கின்றன. அந்தப் பயிற்சியே போதும்; ஆர்.எஸ்.எஸ்.சின் இந்தப் பயிற்சிகள் தேவை இல்லை.
“மக்கள் நலன் காக்கக்கூடிய அரசியல் கட்சிகள் இருக்கின்றன. மக்கள் நலனுக்காகப் பாடுபடக்கூடிய சிறந்த தலைவர்கள் இருக்கிறார்கள். எல்லா அரசியல் கட்சிகளிலும் இருக்கிறார்கள். எனவே, மதவாதிகள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம்.
அரசு விதித்துள்ள 144 தடையை மீறுவோம் என்கிறார்கள். தடையை அவர்கள் மீறி செயல்பட்டால், அரசு அதைச் சமாளிக்கும்; அரசு அதற்குத் தயாராக இருக்கிறது.’’