மோடி அரசை எதிர்த்து 200 எம்.பி.க்கள் போராட்டம்: காங்கிரஸ் – தி.மு.க.வுடன் கைகோர்த்தது அ.தி.மு.க!

புழக்கத்தில் இருந்த 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று  நரேந்திர மோடி திடீரென அறிவித்து மேற்கொண்டிருக்கும் நோட்டு நடவடிக்கை காரணமாக, இந்தியர்களில் பெரும்பகுதியினரான ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்து மக்கள் சொல்லொணா துயரத்துக்கு ஆளாகி இருக்கிறார்கள்.

இதனால், மோடியின் நோட்டு நடவடிக்கைக்கு எதிராக நாடாளுமன்றத்துக்குள் 10க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக போராடி வருகின்றன. விளைவாக, நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் அலுவல்களும் முடங்கியுள்ளன. எனினும் மோடி அரசு பிடிவாதத்தை தளர்த்தி இறங்கி வந்து சாமானிய மக்களின் இன்னல்களை போக்குவதாக இல்லை. எதிர்க்கட்சிகளும் விடுவதாக இல்லை.

இன்று காலை 9.45 மணியளவில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள், நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலையின் முன் திரண்டு அணிவகுத்து நின்று, மோடி அரசுக்கு எதிராக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

“மத்திய அரசின் நோட்டு நடவடிக்கையால் சாமானிய மக்களே பாதிக்கப்பட்டுள்ளனர்”, “சாமானிய மக்களை துன்புறுத்தாதீர்”, “நோட்டு நடவடிக்கை குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை தேவை”, “ஏழை எளிய மக்களை காப்பாற்றுவீர்” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி அவர்கள் மோடி அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினார்கள்.

காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி தலைமையில் நடந்த இந்த தர்ணா போராட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் நவநீதகிருஷ்ணனும், தி.மு.க. சார்பில் கனிமொழி, திருச்சி சிவா ஆகியோரும் கலந்துகொண்டார்கள். (மேலே உள்ள படத்தில் அவர்கள் முன்வரிசையில் இருக்கிறார்கள்.)

தேர்தல் களத்தில் எதிரும் புதிருமாக இருக்கும் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும், வெகுமக்களை பாதிக்கும் பொதுப் பிரச்சனைகளில் இதுபோல் ஒன்றுபட்டு செயல்பட்டால், தமிழகத்தின் பல பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.