கடவுள் இருக்கான் குமாரு – விமர்சனம்
இயக்குனர் ராஜேஷ் படம் என்றாலே அதில் கருத்து இருக்காது; ஆனால் காமெடிக்கும், கலகலப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சம் இருக்காது. இந்த ‘கடவுள் இருக்கான் குமாரு’ படமும் இதற்கு விதிவிலக்கு அல்ல.
நாயகன் ஜி.வி.பிரகாஷ் (குமார்) தன் நண்பன் ஆர்ஜே பாலாஜியுடன் சேர்ந்து விளம்பர படங்கள் எடுக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். அவருக்கும் கல்லூரி மாணவியான நாயகி ஆனந்தி (நான்ஸி)க்கும் காதல். ஜி.வி.பிரகாஷ் இந்து, ஆனந்தி கிறிஸ்துவர் என்பதால் சிக்கல் ஏற்படுகிறது. ஜி.வி.பிரகாஷ் தன் பெற்றோர்களுடன் கிறிஸ்துவ மதத்துக்கு மாறினால் தான் என் மகளை உனக்கு திருமணம் செய்துகொடுப்பேன் என்று நிபந்தனை விதிக்கிறார் ஆனந்தியின் தந்தை எம்.எஸ்.பாஸ்கர். இதை ஏற்க மறுக்கும் ஜி.வி.பிரகாஷ், எம்.எஸ்.பாஸ்கரை படுகேவலமாக திட்டிவிட, காதல் முறிகிறது. இது (கடந்தகால) முன்கதை.
நிகழ்கால கதை, படத்தின் முதல் காட்சியிலேயே ஆரம்பமாகி விடுகிறது. நாயகன் ஜி.வி.பிரகாஷூக்கும், இரண்டாவது நாயகியான நிக்கி கல்ராணிக்கும் (ப்ரியாவுக்கும்) நிச்சயதார்த்தம். அடுத்த இரண்டு நாள்களில் திருமணம் என முடிவாகிறது.
இந்நிலையில், ஜி.வி.பிரகாஷின் முன்னாள் காதலி ஆனந்தி (நான்ஸி) பெயர் மணமக்களுக்கு இடையே பிரச்சனையை ஏற்படுத்துகிறது. கடுப்பாகும் நிக்கி கல்ராணியிடம், ‘இனி முன்னாள் காதலியின் பெயரை உச்சரிக்க மாட்டேன்’ என பொய் வாக்குறுதி கொடுத்து அவரை சமாதானப்படுத்துகிறார்.
திருமணத்துக்கு முதல்நாள் பாண்டிச்சேரியில் ‘பாச்சுலர் பார்ட்டி’ கொண்டாடுவதற்காக நிக்கி கல்ராணியிடம் கெஞ்சிக் கூத்தாடி அவரது காரை வாங்கிக்கொண்டு, நண்பர் ஆர்ஜே பாலாஜியுடன் போகிறார் ஜி.வி.பிரகாஷ்.
திரும்பி வரும் வழியில் இவர்களின் காரை, போலீஸ் அதிகாரிகளான பிரகாஷ்ராஜ், சிங்கம்புலி, ரோபோ சங்கர் ஆகியோர் மடக்கி சோதனை செய்கிறார்கள். காரில் நிறைய கடத்தல் மது பாட்டில்கள் இருக்க, சிக்கலில் சிக்கிக் கொள்கிறார்கள். அவர்களை கைது செய்யப்போவதாக மிரட்டும் போலீஸ் அதிகாரி பிரகாஷ்ராஜ், அவர்களை கைது செய்யாமல் இருக்க ரூ.3 லட்சம் லஞ்சம் கேட்கிறார்.
பயந்துபோன ஜி.வி.பிரகாஷூம், பாலாஜியும், திருமணத்துக்காக உடனே போயாக வேண்டும் என்பதால், போலீஸிடமிருந்து தப்பிச் செல்கிறார்கள். ஆனால் பாலாஜியின் செல்போன் சிங்கம்புலியிடம் சிக்கிக்கொள்கிறது. அதை வைத்து அவர்களை துரத்தி பின்தொடர்கிறார் பிரகாஷ்ராஜ்.
இதற்கிடையில், ஜி.வி.பிரகாஷின் முன்னாள் காதலியான ஆனந்தியும், திருமணம் செய்து கொள்ளப்போகும் நிக்கி கல்ராணியும் அவருக்கு தொடர்ந்து போன் செய்துகொண்டே இருக்கிறார்கள். ஜி.வி.பிரகாஷ் மீது ஆனந்தி பாசமாகவும், நிக்கி கல்ராணி ரொம்ப கண்டிஷனாகவும் நடந்து கொள்கிறார்கள்.
ஒருகட்டத்தில் ஜி.வி.பிரகாஷின் மனதில் தடுமாற்றம் ஏற்படுகிறது. நிக்கி கல்ராணியை திருமணம் செய்யலாமா, அல்லது ஆனந்தியை திருமணம் செய்யலாமா? என்று குழம்புகிறார்.
ஜி.வி.பிரகாஷூம், பாலாஜியும் பிரகாஷ்ராஜிடம் இருந்து தப்பித்தார்களா? ஜி.வி.பிரகாஷ் யாரை திருமணம் செய்தார்? என்பது மீதிக்கதை.
வழக்கம்போல் நண்பர்களோடு அரட்டையடிப்பது, நாயகிகளுடன் இணைந்து டூயட் ஆடுவது என்று மட்டும் இல்லாமல், இப்படத்தில் கொஞ்சம் நடிக்கவும் செய்திருக்கிறார். நீண்ட வசனங்களைக்கூட அசால்ட்டாக பேசி அசர வைக்கிறார். நிக்கி கல்ராணி, ஆனந்தி ஆகிய இரண்டு கதாநாயகிகளுடனும் எந்தவித தயக்கமும் இல்லாமல் தாராளமாக நெருங்கி நடித்திருக்கிறார்.
படத்திற்கு படம் ஆனந்தி மெருகேறிக்கொண்டே வருகிறார். நிக்கி கல்ராணியும் பார்க்க அழகாக இருக்கிறார். இருவரது நடிப்பும் ஓ.கே.ரகம்.
இயக்குனர் ராஜேஷ் படம் என்றால் சந்தானம் இருப்பார். ஆனால் இந்த படத்தில் சந்தானம் இல்லாத குறையை நீக்கியிருக்கிறார் ஆர்ஜே பாலாஜி.. அவர் வரும் காட்சிகளில் எல்லாம் திரையரங்கில் ரசிகர்களின் கரவொலி காதைப் பிளக்கிறது.
படத்திற்கு மற்றொரு பெரிய பலம் பிரகாஷ் ராஜ். காமெடி கலந்த வில்லத்தனத்தில் கலக்கியிருக்கிறார். மிகவும் யதார்த்தமான நடிப்பில் அசர வைக்கிறார். அவருக்கு ரோபோ சங்கரும், சிங்கம் புலியும் கைகொடுத்து உதவியிருக்கிறார்கள்.
லட்சுமி ராமகிருஷ்ணனின் ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியை கலாய்க்கும் விதமாக ‘பேசுவதெல்லாம் உண்மை’ என்ற நிகழ்ச்சியை நடத்தும் ஊர்வசியும், அந்த நிகழ்ச்சியின் இயக்குனராக வரும் மனோபாலாவும் வயிறு குலுங்க சிரிக்க வைத்திருக்கிறார்கள்.
எம்.எஸ்.பாஸ்கர் கண்டிப்பான அப்பாவாக வந்து மிளிர்கிறார். அதிகார தோரணையுடன் இவர் பேசும் வசனங்கள் எல்லாமே ரசிக்க வைக்கிறது. ஜி.வி.பிரகாஷின் அப்பாவாக வரும் டி.சிவாவும் தனது கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்.
இயக்குனர் எம்.ராஜேஷ் வழக்கம் போல காமெடி கலந்த ஒரு படத்தையே கொடுத்திருக்கிறார். முந்தைய படங்களின் சாயல் இருந்தாலும் படத்தை ரசிக்கும்படி எடுத்திருப்பது சிறப்பு. ராஜேஷ் படங்கள் என்றாலே விழு ந்து விழுந்து சிரித்துவிட்டு வரலாம் என்பதற்கு இந்த படமும் கியாரண்டி.
ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடல்கள் ஏற்கெனவே ஹிட் . அவற்றை திரையில் பார்ப்பதற்கும், கேட்பதற்கும் அதிரடியாக இருக்கிறது. சக்தி சரவணனின் ஒளிப்பதிவு, காட்சிகளை மிகவும் அழகாக படம்பிடித்திருக்கிறது.
‘கடவுள் இருக்கான் குமாரு’ – காமெடி பிரியர்களுக்கு செம விருந்து!