கருப்பு பண முதலைகளை பாதுகாக்கும் காவல் நாய் தான் அரசாங்கம்!
“எது கருப்புப் பணம்?” என்ற தலைப்பில் தோழர் மருதையன் ஆற்றிய உரையின் முதல் பாகம் “கருப்பு பணத்துக்கு சம்பந்தமே இல்லாத ஏழை மக்கள் மீது தாக்குதல் தொடுத்திருக்கிறார் மோடி” என்ற தலைப்பிலும், இரண்டாம் பாகம் “அதானியின் கருப்பு பணத்தில் பிரதமர் ஆனவர் தான் நரேந்திர மோடி” என்ற தலைப்பிலும் HERONEWSONLINE.COM-ல் வெளியானது. தோழர் ம்ருதையன் உரையின் மூன்றாம் பாகம் இதோ:-
கடந்த சில நாட்களாக நடைபெறுகின்ற விவாதத்தைக் கவனித்தால், ஒரு முக்கியமான விஷயத்தை எல்லாருமே திரும்பத் திரும்ப வலியுறுத்துகின்றனர். அதாவது, “காகிதப் பணத்தை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்; ரொக்க பரிவர்த்தனை அற்ற பொருளாதாரத்திற்கு (Cashless Economy) மாறிக் கொள்ள வேண்டும்” என்கின்றனர். “அப்படி மாறிக் கொள்ளும்போது தான் இலஞ்ச ஊழலை ஒழிக்க முடியும்; அதுதான் சர்வரோக நிவாரணி” என்று வலியுறுத்துகின்றனர்.
இதுவரை நாம் பார்த்த விஷயங்களெல்லாம் கேஷ்லெஸ் எக்கானமி அல்லது வங்கிப் பொருளாதாரத்தில் இருக்கக் கூடியவர்கள் செய்யக்கூடிய ஊழல்தான். அதில் உருவாகக் கூடிய கருப்புப் பணம் என்பதைப் பற்றியும், மேலும் அதுதான் முதன்மையான ஊற்றுக்கண்; அதாவது கார்ப்பரேட் முதலாளிகள் என்பதையும் இவ்வளவு நேரம் பேசினோம்.
குளோபல் ஃபைனான்சியல் இன்டெக்ரிட்டி(Global Financial Integrity) என்ற அமைப்பு செய்த ஆய்வில், மொத்தமாக உலகளவில் சுவிஸ் வங்கி போன்ற பல்வேறு வங்கிகளில் பதுக்கி வைத்திருக்கும் கருப்புப் பணம் யார் யாருடையது, அது எவ்வளவு என்பதைக் கூறுகிறது.
அந்த ஆய்வில், அரசியல்வாதிகள், அதிகாரிகளுடைய பணம் 3 சதவீதமாகும். போதைமருந்து கடத்தல் போன்ற சட்டவிரோத அல்லது முறைகேடான தொழில்களிலிருந்து வருகின்ற வருமானம் 33 சதவீதமாகும். மீதமுள்ள 3-ல் 2 பங்கு, ஏறத்தாழ 64 சதவீத பணம் பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் கார்ப்பரேட் முதலாளிகள், தரகு முதலாளிகள் இவர்களுடைய பணம் தான் சுவிஸ் வங்கி போன்ற பல வங்கிகளில் கருப்புப் பணமாக அமர்ந்திருக்கிறது.
உண்மை இப்படியிருக்கும்போது, “எல்லோரும் பேங்க் அக்கவுண்ட் ஆரம்பிக்காததும், கார்டு வழியாகப் பரிவர்த்தனை செய்து கொள்ளாததும் தான் ஒரே காரணம்; எல்லோரையும் வங்கிப் பொருளாதாரத்துக்குள் கொண்டுவர வேண்டும்” என்று இவர்கள் சொல்வது ஏன்?
இப்படி வங்கிக்குள் கொண்டுவர வேண்டுமென்று மோடி முதலில் சொல்லத் தொடங்கவில்லை. அது யுபிஏ (UPA) காங்கிரசு கூட்டணி ஆட்சிக் காலத்தில் வந்தது. அவர்கள் சொல்லும்பொழுது, “எல்லோருக்கும் வங்கி கணக்கு ஆரம்பித்து, இனிமேல் மானியத்தை வங்கியில் போட்டு விடுகிறோம், அங்கே வாங்கிக் கொள்ளுங்கள்” என்றார்கள். அதாவது “மானிய விலையில் ரேசன், சிலிண்டர் கொடுக்க மாட்டோம், சந்தை விலையில் வாங்கிக் கொள்ளுங்கள், இடைப்பட்ட தொகையை அங்கே செலுத்திவிடுகிறோம்” என்று யுபிஏ அரசு இருக்கும் போதே தொடங்கினார்கள். அதற்கு கடுமையான எதிர்ப்பிருந்த காரணத்தினால் அவர்கள் அதை கைவிட்டு விட்டார்கள்.
2014 ஆம் ஆண்டு மோடி வந்த பிறகு, அதையே சொன்னால் ஒத்துக்கொள்ள மாட்டார்கள், திரும்பப் பிரச்சனையாகும் என்பதனால் மிகவும் தந்திரமாகவும், சூழ்ச்சியாகவும் என்ன செய்தாரென்றால், ‘’நான் பொருளாதாரத் தீண்டாமையை ஒழிக்க விரும்புகிறேன். இந்த நாட்டில் ஆகப் பெரும்பான்மையான மக்கள் வங்கிக் கணக்கு இல்லாமல் இருக்கிறார்கள், அதனால் அவர்களுக்கு அக்கவுண்ட் ஆரம்பிக்க வேண்டும். வங்கிக் கணக்கு இல்லாமல் ஒரு மனிதனா? இந்தியக் குடிமகனா?. கணக்கு ஆரம்பித்தால் எல்லோருக்கும் 5000 ரூபாய் வரை கடன் கிடைக்க வாய்ப்பிருக்கிறது” என்று முதலில் ஆசையைக் காட்டுகிறார்.
அதற்குப் பிறகு எரிவாயு உருளைக்கு மானியம் வேண்டுமென்றால் அக்கவுண்ட் இருந்தால் தான் கிடைக்கும் என்ற கட்டாயத்தை உருவாக்குகிறார். இன்றைக்கு உணவுக்கு அதாவது ரேசனுக்கும், ரேசன் கடைக்குப் பதிலாக ரேசன் மானியம் வரப் போகிறது. அதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது.
இதில் வங்கிக் கணக்குகளை 23 கோடி பேர் ஆரம்பித்திருக்கிறார்கள் என்பதைச் சாதனையாகக் கூறிக் கொள்கிறார்கள். இதெல்லாம் மோசடியான (Fraud) கணக்கு. வங்கி ஊழியர்களே 1 ரூபாய், 2 ரூபாய், 5 ரூபாய் என்று போட்டுத் தொடங்கிய கணக்குகள் தான் என்பது அம்பலமாயிருக்கிறது.
அந்தக் கணக்குகளில் யாரும் பரிவர்த்தனை செய்து கொள்வதில்லை, அதெல்லாம் செயல்படாத கணக்குகள் (Dead Account) என்பதும் அம்பலமாயிருக்கிறது. இருந்தாலும் கூட எப்படியாவது வங்கி மூலமாக பரிவர்த்தனை செய்ய வைக்க வேண்டும் என்ற முயற்சியிலே இவர்கள் தீவிரமாக ஈடுபடுகிறார்கள்.
தினமலர் பத்திரிக்கையில் ஒரு செய்தி வெளியிட்டனர். “செல்போன் ஆப் (Mobile App) வழியாக காய்கறிகள் வாங்கலாம், பூக்காரம்மாவுக்கு பணம் கொடுக்கலாம், எப்படி கொடுக்கலாம்? இனி எதிர்காலம் என்பது இதுதான் என்றாகிவிட்டது. அதனால் எப்படி என்பதைக் கற்றுக் கொள்ளுங்கள்” என்பதைப் படம் போட்டு விளக்கம் தருகிறார்கள்.
இந்த மோடியினுடைய 500, 1000 ரூபாய் செல்லாது என்ற அறிவிப்பிற்கு பாராட்டுத் தெரிவித்து முழுபக்க அளவிற்கு விளம்பரம் கொடுத்திருக்கிறது பேடிஎம்(Paytm). செல்போன் மூலம் பணப் பரிவர்த்தனை செய்வதற்கான கேட்வே (Gateway) நிறுவனம். இவர்களெல்லாம் விளம்பரம் கொடுத்துக் கொண்டாடுவது ஏன்? மக்களை வங்கிக் கணக்கு தொடங்கு என பிடித்து நெட்டித் தள்ளுவது ஏன்? என்பதுதான் கேள்வி.
பெரும்பான்மையான உழைக்கும் மக்களும் சரி, சிறு வணிகர்களும் சரி, வங்கிப் பொருளாதாரத்திற்கு வெளியே இருக்கிறார்கள்; பணப் பொருளாதாரத்தில் இருக்கின்றனர். அவர்களைக் கட்டாயமாக வங்கிப் பொருளாதாரத்திற்குள் கொண்டு வருவதற்கு வேறு எந்த காரணத்தையும் இவர்களால் சொல்ல முடியவில்லை. திரும்பத் திரும்ப என்ன சொல்கின்றனர் என்றால், “ரொக்க பரிவர்த்தனையற்ற பொருளாதாரத்தில்தான் ஊழல் ஒழியும்” என்கிறார்கள். அது எப்படி ஒழியும்?
இதைப் பார்ப்பவர்கள், கேட்பவர்களிடம் எப்படி விளக்குகின்றனர் என்றால், “எல்லாமே ஏ.டி.எம் கார்டை தேய்ப்பதாக வந்துவிட்டால் ஆர்.டி.ஓ ஆபிசில் எப்படி இலஞ்சம் வாங்குவார்கள்?” அதைப் பற்றி இவர்கள் கவலைப்படத் தேவையே இல்லை. அதற்கும் அவர்கள் வழி கண்டுபிடிப்பார்கள். தேர்தல் கமிசன் கெடுபிடிகள் எல்லாம் தொடங்கியபோது பணம் அப்படி கொடுக்க முடியாது, இப்படி கொடுக்க முடியாது, பறக்கும் படை, அந்த படை, இந்த படையென்று சொன்னார்கள். அதையெல்லாம் தாண்டி டோக்கன் கொடுத்து பணம் வினியோகிப்பது எப்படி என்பதை ஓட்டுக்கட்சிகள் கண்டுபிடித்ததை போல, இலஞ்சம் வாங்குவதற்கும் கொடுப்பதற்குமான வழிகளை அவர்கள் கண்டுபிடிப்பார்கள்.
இலஞ்சம் எப்படி வாங்குவது என்பதை ஆர்.டிஓ ஆபிசில் பார்க்கக் கூடாது. வேறு எங்கே பார்க்க வேண்டும்? இலஞ்சம் வேண்டுமென்பது அதானியின் தேவை. அதானிக்கு நத்தம் விஸ்வநாதன் இருந்தால்தான் 5,000 கோடி திருட முடியும். அம்பானிக்கு மோடி இருந்தால் தான் பல்லாயிரம் கோடிக்கணக்கான இயற்கை வளங்களை சூறையாட முடியும். 4G மாதிரி அலைக்கற்றைகளை அடிமாட்டு விலைக்கு அபகரிக்க முடியும்.
இப்படியாக அந்த கார்ப்பரேட் முதலாளிகளுக்கு இலஞ்சம் ஊழல் என்பது தேவை. முதலாளித்துவ சுரண்டல், முதலாளித்துவ அமைப்பு என்பது இலகுவாக இயங்குவதற்கு, அவர்களுக்கு இந்த அரசு இயந்திரம் வேலை செய்ய வேண்டுமானால், அந்த குளோபல் பைனான்சியல் இன்டெக்ரிட்டி புள்ளி விவரத்தில் சொன்னதுபோல 3% தான் அரசியல்வாதிகள், அதிகார வர்க்கத்தினரின் பணம். 64% என்பது கார்ப்பரேட் முதலாளிகளுடைய பணம். இந்த 64% கருப்புப் பணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும், வளர வேண்டும் என்று சொன்னால் அந்த 3% இலஞ்ச ஊழல் பணம் நிரந்தரமாக கிடைக்கும்படி இருக்க வேண்டும். அதை உத்திரவாதப்படுத்தும் பொறுப்பு டாடாவிற்கும், பிர்லாவிற்கும், அம்பானிக்கும், அதானி, மிட்டல் போன்ற கார்ப்பரேட் முதலாளிகளுக்கு இருக்கிறது. இங்கே கார்டு தேய்ப்பது வந்தால் அங்கே ஊழல் ஒழிந்து விடும் என்று சிந்திப்பதைப் போல முட்டாள்தனம் வேறெதுவும் இல்லை.
எல்லா மக்களையும் வங்கிக் கணக்கிற்குள் கொண்டு வருவதற்க்கான நோக்கம் என்ன? “பெரும்பான்மை மக்களை வரி கட்ட வைப்பது தான் என்னுடைய நோக்கம்” என்று அருண் ஜேட்லி தெளிவாகச் சொல்கிறார். அப்படியென்றால் பெரும்பான்மை மக்கள் இப்போது வரி கட்டாமலா இருக்கின்றனர்? இன்கம்டாக்ஸ் கட்டாதவர் தான் வரி கட்டாதவரென்று பலர் நினைக்கலாம். ஆனால் மறைமுக வரிகளாக நாம் எண்ணற்ற வரிகளைக் கட்டிக் கொண்டு இருக்கிறோம்.
இப்போது வரிகளை எல்லாம் ஒருங்கிணைத்து கொண்டு வரப்பட்டிருக்கிற ஜி.எஸ்.டி(GST)-ல் அதிகபட்ச வரி 28% என்று தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு மேல் எஜூகேசன் செஸ், அந்த செஸ், இந்த செஸ்னு வாங்குவாங்க. இதல்லாமல் ஐ.டி. போன்ற நிறுவனங்கள், வங்கிகள், பொதுத் துறை நிறுவனங்களில் வேலை செய்யக்கூடிய ஊழியர்கள், நடுத்தர வர்க்கத்தினர் மறைமுக வரியாக இதை செலுத்துகின்ற அதே நேரத்தில் நேர்முக வரியாக வருமான வரியும் செலுத்துவார்கள்.
அப்படி அவர்கள் செலுத்தும் வரி என்பது கணிசமாகப் பார்த்தால் 30-40% இருக்கும். ஆனால் முதலாளிகள் எவ்வளவு வரி செலுத்துகிறார்கள்? முதலாளிகள் செலுத்துகின்ற அதிகபட்ச நேர்முக வரி என்பது 30% . உலகத்திலேயே மிகக் குறைவான நேர்முக வரி விதிப்பு உள்ள நாடுகளில் ஒன்று இந்தியா.
தனியார்மய, தாராளமய கொள்கைகள் அமலாக்கப்பட தொடங்கிய 1994-1995 காலம் முதல் இன்று வரை யாருக்கு வரி குறைக்கப்பட்டிருக்கிறது, யாருக்கு வரி கூட்டப்பட்டிருக்கிறது என்பதை பரிசீலித்துப் பாருங்கள். சாதாரண உழைக்கும் மக்களுக்கு வரிப் படிப்படியாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது.
ஒரு உதாரணம் சொல்கிறேன். சேவை வரி என்பது ஒரு வரி. இப்போது நாம் செல்பேசியிலிருந்து ரீசார்ஜ் செய்கின்றோம், டாப் அப் செய்கின்றோம். அதற்கு அந்த சேவையை வழங்குவதற்காக அவனுக்கு காசு கொடுக்கின்றோம். விவரமாகப் பார்த்தால், அரசாங்கத்திற்கு அவன் வழங்குகின்ற சேவைக்குப் பணம் கொடுத்து தான் நாம் வாங்குகிறோம். சேவை வரி என்ற வரியை நாம் யாருக்கு கொடுக்கிறோம்? எதற்காகக் கொடுக்கிறோம்? ஏன் அவ்வளவு தொகையை அங்கே வாங்குகிறார்கள்? ஓட்டல் பில் முதல் எல்லா துறைகளுக்கும் சேவை வரி வந்துவிட்டது. அது ஒரு உதாரணம்.
ஆனால் இதே காலக்கட்டத்தில் கார்ப்பரேட் முதலாளிகளுக்கான வரிகள் குறைக்கப்பட்டிருக்கின்றன. இந்தியாவில் சூப்பர் டாக்ஸ் என்று இருந்த காலகட்டம் எல்லாம் உண்டு. மிகப்பெரிய பணக்காரர்களின் வருமானம் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் போனால், 80-90% வருமான வரி செலுத்த வேண்டும் என்ற நிலையெல்லாம் இருந்தது.
ஆனால் அந்த வரிவிதிப்பு படிப்படியாகக் குறைக்கப்பட்டு 30 சதவீதத்தில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்கள். வரியைக் குறைப்பதற்கு சொல்லப்பட்ட இரண்டு காரணங்களை நீங்கள் கவனித்துப் பார்க்க வேண்டும். வருமான வரியை அல்லது நேர்முக வரியை, மூலதனத்தின் மீதான வரியை முதலாளிகளின் மீதான வரியை குறைத்தால் தான் அந்நிய முதலீட்டாளர்கள் அல்லது முதலாளிகள் முதலீடு போடுவார்கள். தொழில் தொடங்குவார்கள். அதனால் வரி போடக் கூடாது என்பது ஒரு வாதம்.
இரண்டாவது என்ன? அரசாங்கம் அதிகமாக 60,70,80% என்று வரி விதிப்பதால் தான் வரி ஏய்ப்பு செய்கிறார்கள். அதனால் நீங்கள் வரியைக் குறைவாக வைத்தீர்கள் என்றால் முதலாளிகள் நேர்மையாக வரியைக் கட்டி விடுவார்கள். நீங்கள் நேர்மையற்ற முறையில் அடாவடியாக அதிகமாக வரியை விதித்ததால் தான் இந்த வரி ஏய்ப்பு என்ற சிந்தனையே முதலாளிகளுக்கு வருகிறது என்ற வாதம் முன் வைக்கப்பட்டது.
ஆனால், தனியார்மய தாராளமய கொள்கைகள் அமலாக்கப்பட்ட இந்த காலகட்டத்தில் சாய்நாத் போன்ற எழுத்தாளர்கள் பலரது ஆய்வின்படி சராசரியாக ஆண்டிற்கு 5 இலட்சம் கோடி அளவிற்கு கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. ஆண்டுதோறும் வரி குறைக்கப்பட்டிருக்கிறது.
இதனால் தான் 90% ல் இருந்து 30% க்கு வந்து விட்டது வருமான வரி. அப்படி குறைத்த பிறகு கருப்புப் பணம் குறைந்திருக்க வேண்டுமல்லவா? ஆனால் கருப்புப் பணம் பன்மடங்கு அதிகமாகிவிட்டது என்பது தான் ஆய்வுகள் கூறுகின்ற தகவல்.
இப்படி 90% ல் இருந்து 30% வரிக் குறைக்கப்பட்டிருப்பதை நாம் எப்படிப் பார்ப்பது? 90% வரி முடியாது. சரி 80% ஆக குறைக்கிறோம்,அப்புறம் 60% ,50%, 40% ஆக குறைக்கிறோம். அப்படியும் கட்ட முடியாது என்று சொல்லச் சொல்ல, அவர்களிடம் இருக்கும் கருப்புப் பணத்தை வெள்ளை என்று ஒத்துக் கொள்கிறோம்; மிச்சத்துக்காகவாவது கட்டுங்க என்று கருப்புப் பணத்தை வெள்ளை என்று அங்கீகரிக்கிறது இந்த அரசாங்கம்.
அவை வெறுமனே வரி குறைப்பு மட்டுமல்ல. சில வரிகளை மூலதன ஆதாய வரி, வெல்த் டாக்ஸ் போன்றவை முற்றிலுமாக அகற்றப்பட்டிருக்கின்றன. ஆக முதலாளிகள் , நான் வரி கட்ட முடியாது கருப்புப் பணம் தான் வைத்துக்கொள்வேன் என்று சொல்லும்போது அரசாங்கம் மண்டியிட்டு அவர்கள் முன் தாள் பணிந்து நீங்கள் வைத்திருக்கும் கருப்புப் பணத்தை இவ்வளவு ரூபாய் வரைக்கும் நாங்கள் வெள்ளை என்று ஒத்துக் கொள்கிறோம் என்று இறங்கி வருகிறது; அப்படி இறங்கி வந்து இனி வரியே கட்ட வேண்டாம், வரி என்று ஒன்றும் உங்களுக்கு கிடையாதுப்பா என்று சொன்னாலும் இந்த முதலாளிகள் திருப்தி அடையப் போவதில்லை.
சென்னையில் இருந்த நோக்கியா நிறுவனத்தை எடுத்துக் கொள்ளுங்கள். எண்ணற்ற சலுகைகள் வழங்கப்பட்டது அந்நிறுவனத்திற்கு. அவர்கள் போட்ட மூலதனத்திற்கு மேல் பலமடங்கு இலாபம் அடைந்து விட்டார்கள். எல்லாம் முடிந்த பிறகு 22,000 கோடி ரூபாய் வரி கட்ட வேண்டும் என்று கேட்ட போது, முடியாது என்று சொல்லி கம்பெனியையே மூடிவிட்டுப் போய்விட்டனர்.
இதுதான் வரி செலுத்துவதன்பால் முதலாளிவர்க்கம், பன்னாட்டு முதலாளிகள் கொண்டிருக்கின்ற அணுகுமுறை. இப்போது வரி கட்டுவது ஏன் என்று மக்களைக் கேட்டால் என்ன பதில் சொல்கின்றனர்? வரி இருந்தால் தானே அரசாங்கம் இயங்க முடியும். அப்போது தான் ரோடு போடுவார்கள். தண்ணீர் கொடுப்பார்கள். பள்ளிக்கூடம் இருக்கும். ஆஸ்பத்திரி இருக்கும். வேண்டிய வசதிகள், அடிப்படைத் தேவைகளை மக்களுக்குச் செய்து கொடுப்பார்கள் என்பதே மக்களுடைய புரிதல். ஆனால் அதெல்லாம் நமக்கு இப்போது செய்து கொடுக்கப்படுகிறதா என்றால் இல்லை. முன்பு பெயரளவிற்கு இருந்தது. இப்போது அதுவும் இல்லை.
அது ஒருபக்கம் இருக்கட்டும். முதலாளி எதற்கு வரி கட்டுகிறான் என்றால் அவன் தொழில் செய்வதற்கான ஏற்பாடுகள் எல்லாம் செய்து கொடுக்க வேண்டும். சாலை, மின்சாரம், வங்கிக் கடன் போன்ற வசதிகளை எல்லாம் அரசாங்கம் செய்து கொடுக்க வேண்டும். இதைச் செய்து கொடுத்தால் மட்டும் போதாது. அந்த முதலாளியினுடைய தொழிலை, சொத்தைப் பாதுகாக்க வேண்டும். தொழிலாளர்களுடைய தொழிற்சங்கம், போராட்டம், கோரிக்கை என்று சொன்னால் அங்கே போய் முதலாளியின் சொத்திற்கு நாயைப் போல காவலுக்கு நிற்க வேண்டும். இது தான் அரசாங்கத்திற்கு முதலாளிகள் வரி கட்டுவதற்க்கான காரணம்.
கடந்த 20 ஆண்டுகளை எடுத்துக் கொண்டால், முதலாளிகளுக்கு அரசாங்கத்தால் ஏற்கனவே செய்து வந்த சேவையைக் காட்டிலும் மேலதிகமான சேவைகள் வழங்கப்பட்டிருக்கின்றன.
அவர்களுக்கு சலுகை விலையில இலவசமாக நிலம் தருவது, மின்சாரத்தை குறிப்பிட்ட காலம் வரைக்கும் இலவசமாக தருவது, குறைந்த விலையில் தருவது, தண்ணீரை இலவசமாக தருவது, இலவசமாக சாலை போட்டுக் கொடுப்பது, வங்கிக்கடனை குறைந்த வட்டிக்கு ஏற்பாடு செய்து தருவது, அவர்கள் உற்பத்தி செய்கின்ற பொருட்களை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் விற்பதற்கு ஏற்பாடு செய்து தருவது என்று ஒரு வேலை பாக்கி இல்லாமல் தோளில் சுமந்து தூக்கித் திரிகிறது இந்த அரசாங்கம். கடந்த 20 ஆண்டுகளாக இதுதான் நடந்து கொண்டிருக்கிறது.
அதே நேரம் நமக்கு என்ன நடக்கிறது என்று சொன்னால், இதற்கு முன்பு இருந்தது போல அரசுப் பள்ளிகள் இப்போது கிடையாது, அரசு மருத்துமனைகள் இப்போது கிடையாது எல்லாமே தனியார் மருத்துவமனைகள். ஒரு சாலை கிடையாது. எல்லாமே டோல்கேட் தான். இப்படி தண்ணீர் உள்ளிட்ட எல்லாச் சேவைகளுமே காசிருந்தால் மட்டுமே என்று ஆக்கப்பட்டுவிட்டது.
அரசாங்கம் நம்மிடம் வரி வாங்கிக் கொண்டு செய்கின்ற சேவை என்று ஒன்றில்லை. என்ன மிச்சம் இருக்கிறது என்று சொன்னால்; இந்த கோரிக்கைகளுக்காகப் போராடினால் போலீசு வந்து நிற்கும்; ஆர்.டி.ஓ வந்து நிற்பாரு. போலீசையும் தாண்டிப் போனால் வேறு எதாவது துணை இராணுவப் படைகளோ, இராணுவமோ வந்து நிற்கும். இப்படி இந்தப் படைகள், மக்களை ஒடுக்குகின்ற படைகள், மக்களை ஒடுக்குகின்ற அதிகார நிறுவனங்கள், அவர்களுக்கு ஊதியம் தருவதற்கும், அவர்களைப் பாதுகாக்க, என்பதற்கு மட்டும்தான் நம்முடைய வரிப்பணம் பயன்படுத்தப்படுகிறதே தவிர, மக்களுக்கான சேவைக்கு நம்முடைய வரிப்பணம் பயன்படுத்தப்படுவதில்லை.
நம்மை ஒடுக்குகின்ற இந்த சேவை என்பது யாருக்கு ஆற்றப்படும் சேவை? இது முதலாளிகளுக்கு ஆற்றப்படும் சேவை. சிங்கூரில் போராட்டம் நடந்தால் போலீசு அங்கே அணிவகுத்து நிற்கிறது. அது யாருக்கு செய்கிற சேவை? டாடாவிற்கு செய்யும் சேவை. எஸ்.ஆர்.எம் (S.R.M), பிரபல கருப்புப் பண அதிபர். இன்றைக்கு புதிய தலைமுறை தொலைக்காட்சியில் பொளந்து கட்டிக்கொண்டு இருக்கிறார்கள். மோடி பின்னால் உரையாற்றிக் கொண்டு இருக்கிறார். மோடிக்கு முன்பாக அந்தத் தொலைகாட்சி நிகழ்ச்சியின் நெறியாளர் மோடி பேசியதையே பேசிக்கொண்டு இருக்கிறார். அப்புறம் மற்ற பங்கேற்பாளர்கள் எல்லாம் இருக்கின்றனர். கருப்புப் பணத்தை ஒழிப்பதைப் பற்றி ஆராய்ச்சி செய்கின்றனர். இப்படி ஒருக் கேலிக்கூத்து வேறு எங்காவது நடக்குமா என்று எனக்குத் தெரியவில்லை.
சில மாதங்களுக்கு முன்னால் தான் அந்த தொலைக்காட்சியின் அதிபர் உள்ளே சென்று வந்தார். துண்டு சீட்டுல ரூ.50 இலட்சமும், ஒரு கோடியும் வாங்கிக்கொண்டு மெடிக்கல் சீட்டை விற்பனை செய்த அயோக்கியத்தனத்திற்காக அந்தப் பணத்தை வாங்கிக் கொண்டு அவரது கையாள் மதன் ஓடி விட்டார், அது எனக்குத் தெரியாது என்று கூறினார் அவர். கமிசனர் ஆபிசுக்குப் போய் மக்கள் புகார் கொடுத்தால் புகாரை எடுக்க மாட்டேன் என்கிறார்கள். புகார் பதிவு செய்ய மறுக்கிறார்கள்.
வேறுவழியின்றி பணத்தைப் பறிக் கொடுத்தவர்கள் எல்லோரும் பச்சமுத்துவின் வீட்டைத் தேடி வந்தால் அந்த வீடு இருக்கின்ற தெருவில் கூட நுழைய முடியாமல் போலீசு மறித்து நிற்கிறது. யாரைக் காப்பாற்ற? பலகோடி ரூபாய் பணத்தை ஏமாற்றிய ஒரு கருப்புப் பண பேர்வழியைக் காப்பாற்ற!
பங்களா நாய்க்கு கறி வாங்கிப் போடுவதும் பிஸ்கட் வாங்கிப் போடுவதும் யாருடைய வேலை? அந்த நாய் யாருடைய சொத்தைப் பாதுகாக்கின்றதோ அந்த சொத்துக்குரிய முதலாளியுடைய வேலை அது. அப்படி இந்த அரசை, தன்னுடைய சொத்தை காவல் காக்கின்ற, தன்னுடைய சொத்தை பெருக்குவதற்கு கையாள் வேலை பார்க்கின்ற இந்த அரசு , அதற்கு கூலி கொடுக்க வேண்டியது, வரி கட்ட வேண்டியது இதனால் ஆதாயம் அடைகின்ற முதலாளி வர்க்கத்தின் பொறுப்பு.
ஆனால் இந்தப் பங்களா நாய்கள் யார் மீது ஏவி விடப்படுகிறதோ அந்த மக்கள் அல்லது அந்த முதலாளியிடம் அடிமைகளாக, தொழிலாளிகளாக வேலை பார்க்கின்ற மக்களாகிய நீங்கள் தான் அந்த நாயை சோறு போட்டு வளர்க்கணும். நம்மையே கடிக்கின்ற நாய்க்கு நாமே சோறு போட்டு வளர்க்கணும். அதாவது இந்த அரசாங்கம் மக்களுக்கு எதிராகத் தான் இருக்கும், முதலாளி வர்க்கத்திற்கு ஆதரவாகத் தான் இருக்கும். ஆனால் அந்த அரசாங்கத்திற்கான சம்பளத்தை எல்லாம் மக்கள் தங்களுடைய வரிப்பணத்தில் இருந்து மட்டும் தான் கொடுக்கணும். முதலாளிகள் 5 காசு ஈயமாட்டார்கள் என்பது தான் இப்போதைய கொள்கை.
வரி வலையை அகலமாக்குவோமே ஒழிய ஆழமாக்க முடியாது என்பதுதான் மோடி அரசின் கொள்கை. ஆழமாக்குவது என்றால் அதிக பணம் வைத்திருக்கின்ற பெரு முதலாளிகள் மீதான வரியை அதிகப்படுத்துவது. வரி வலையை அகலப்படுத்துவது என்றால் என்ன? பெரு முதலாளிகளை விட்டுவிட்டு, ஐந்து, பத்து சம்பாதிப்பவர்களைக் கூட கட்டாயப்படுத்தி அரசுக்கு வரி கட்ட வைப்பது. அதற்காகத்தான் நம்மை ரொக்க பொருளாதாரத்திலிருந்து வங்கி பொருளாதாரத்திற்கு வருமாறு மோடி அழைக்கிறார், அருண் ஜேட்லி அழைக்கிறார்.
இப்படி வங்கி பொருளாதாரத்திற்கு போவதால் வரும் நன்மை என்ன? ஏனென்றால் இப்போது பேசும்போதே எப்படி சொல்கிறார்கள் என்றால் ரொக்க பரிவர்த்தனை என்பதே சட்டவிரோதமானது, கிரிமினல் அயோக்கியத்தனம் போலவும் வங்கிப் பொருளாதாரம் என்பது சட்டப்பூர்வமானது, யோக்கியர்கள் செய்வது போலவும் பேசுகிறார்கள். ஆனால் உண்மை என்ன என்பதை இதுவரை பார்த்தோம். வங்கி சார்ந்த பொருளாதாரத்தில்தான் பெருங் குற்றங்கள் நடக்கின்றன.
சிறு வணிகர்கள், அவர்களிடம் வாங்கும் சாதாரண மக்கள் போன்றோர் வங்கிப் பொருளாதாரத்திற்குள் கொண்டு செல்லப்பட்டுவிட்டால் என்ன நடக்கும்? மக்கள் அனைவரின் விவரங்களும் அரசின் கைக்குள் செல்லும். அது மட்டுமல்ல, அரசிடம் ஆதார் அட்டை – உலகில் வேறு எங்குமே இல்லாத பயோ மெட்ரிக் கார்டு – இருக்கிறது. கை ரேகையையும், கருவிழி ரேகையையும் பதிவு செய்கின்ற அட்டை அது. இது மொத்த மக்களையும் குற்றவாளிகளாக ஆக்குகின்றன அட்டை. ஒரு கண்காணிப்பு அரசை உருவாக்குவதற்கு இதை ஒரு சோதனையாக இந்தியாவில் செய்கிறார்கள்.
இந்த அட்டை வரும்போது என்ன சொன்னார்கள். பல்வேறு தனித்தனி அட்டைகளை வைத்து சிரமப்படவேண்டாம், இந்த அட்டையை மட்டும் காட்டினால் போதும் வேலை முடிந்துவிடும் என்று சொன்னவுடன் மக்கள் அதை ஏற்றார்கள். இந்த அட்டை இருந்தால் நமக்கு ஒரு பாதுகாப்பு என்று நம்பினார்கள். பிறகு என்ன நடந்தது?
ஆதார் அட்டை இருந்தால்தான் வங்கிக் கணக்கு துவங்க முடியும், காஸ் மானியம் கிடைக்கும், ரேசன் கார்டு கிடைக்கும், இனி ஆதார் அட்டை இருந்தால்தான் கட்டணக் கழிப்பிடத்தில் சிறுநீர் கழிக்க முடியும் என்ற நிலை வரப்போகிறது. அப்படி ஆதார் அட்டை என்பது எல்லாவற்றுக்குமானதாக மாற்றப்பட்டுவிட்டது. இனி ஆதார் அட்டையும் வங்கிக் கணக்கும் இணைக்கப்படும். ஏற்கனவே சொன்ன தினமலர் விளம்பரம் போல, உங்கள் வங்கிக் கணக்கை செல்பேசிக்குள் கொண்டு வாருங்கள், செல்பேசி செயலி மூலம் உங்களது பரிவர்த்தனையை செய்து கொள்ளுங்கள் என்கிறார்கள்.
செல்பேசி யாரிடம் இருக்கிறது? 4 ஜி-யினுடைய ஆகப்பெரும்பான்மையான கட்டுப்பாடு அம்பானியின் கையில் இருக்கிறது. ஆக செல்பேசி, ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு அனைத்தும் ஒரு வலைப்பின்னலில் கொண்டு வரப்படும். அரசாங்கமும் அம்பானியும் ஏற்கனவே ஒரு வலைப்பின்னலில்தான் இருக்கிறார்கள்.
ஆக மக்களுடைய நடவடிக்கைகள், நிதி நடவடிக்கைகள் அனைத்தும் கண்காணிக்கப்படும், கட்டுப்படுத்தப்படும். வரி விதிப்பிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது.
– தொடரும்
Courtesy: vinavu.com