மோடியின் கருப்பு பண ஒழிப்பு மோசடி: சென்னை பாஜக அலுவலகம் முற்றுகை!

மோடியின் கருப்பு பண ஒழிப்பு மோசடி நாடகத்தை எதிர்த்து மக்கள் அதிகாரம் அமைப்பு முற்றுகை போராட்டத்தை அறிவித்திருந்தது. மோடியின் கட்சியான பா.ஜ.கவின் தமிழக தலைமை அலுவலகமான கமலாலயம் சென்னை தி.நகரில் உள்ளது. அதை நோக்கி இன்று காலை (10.11.2016) 11.30 மணியளவில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் முழக்கத்துடன் பேரணியாகச் சென்றனர். கமலாலயம் அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் போலிசார் தயாரிப்புடன் இருந்தனர். உடனே சாலையில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் மறியல் செய்தனர். இதனால் போலீசார் செய்வதறியாது திகைத்தனர்.

சென்னையின் முக்கிய சாலையான பாண்டி பஜாரில் இந்த மறியல் போராட்டம் சுமார் அரை மணிநேரம் நடந்தது. அங்கே குழுமியிருந்த நூற்றுக்கணக்கான மக்கள் உடனே அணி திரண்டனர். எளிய மக்களை துன்புறுத்தும் விதமாகவும், வெளிநாட்டில் கருப்பு பணத்தை பதுக்கியிருக்கும் முதலைகளை காப்பாற்றும் விதமாகவும் மோடி செய்திருக்கும் இந்த நடவடிக்கையை மக்கள் அதிகாரம் அமைப்பினர் விளக்கினர். கூடியிருந்த மக்கள் அதை ஆதரித்ததோடு செல்பேசிகளில் படமும், வீடியோவும் எடுத்து உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தனர். யாரும் சாலை மறியலை இடையூறாக பார்க்கவில்லை என்பதோடு ஆதரித்ததும் இங்கே குறிப்பிடத் தக்கது.

0a1

பிறகு போலீசார் மக்கள் அதிகாரம் அமைப்பினரை கைது செய்தனர். போராட்டத்தில் பங்கேற்ற பள்ளி மாணவர்களை கைது செய்யாமல் போலீசு தயங்கியபோது, “பரவாயில்லை, கைது செய்யுங்கள்” என்று உற்சாகப்படுத்தினர் அந்த மாணவர்கள். “மாணவர்கள் மீது. வழக்கு வந்தால் நாங்கள் பார்த்துக் கொள்வோம்” என்று மக்கள் அதிகாரம் அமைப்பினர் தெரிவித்த பிறகு போலீசு மாணவர்களை கைது செய்தது.

இந்நேரம் பார்த்து மோடியின் அடிமை ஊடகமான “டைம்ஸ் நவ்” தொலைக்காட்சி, போராட்டக்காரர்களை தனித்தனியாக பார்த்து தவறான கருத்துக்களை பெற அரும்பாடு பட்டது. ஆனால் அவர்களின் தந்திரத்தை போராட்டக்காரர்கள் முறியடித்தனர். “பள்ளி மாணவர்களை ஏன் அழைத்து வருகிறீர்கள்?” என்று அந்நிருபர்கள் பெரிய ‘மனிதாபிமான’த்தோடு கேட்டபோது, “மோடியின் நடவடிக்கையால் எங்கள் வீடும் பாதிக்கப்பட்டிருக்கிறது, மக்கள் பலரும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள், ஆகவே போராடுவது எங்கள் கடமை” என்றபோது, அந்த மேட்டுக்குடி செய்தியாளர்கள் முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டு போய்விட்டனர்.

மொத்தம் 200க்கும் மேற்பட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கைது செய்யப்பட்டனர். “காவிரி உரிமைப் போராட்டத்தில் எதிரியாகிப் போன பா.ஜனதா கும்பல், இப்போது கருப்புப் பண விவகாரத்திலும் அம்பலப்பட்டு நிற்கிறது. முதலாளிகளின் பிரதிநிதியாக செயல்படும் பாரதிய ஜனதாவை முறியடிப்பதன் அவசியத்தை இந்த போராட்டம் ஏற்படுத்தியது. தொடர்ந்து போராடுவோம்” என்றார்கள் மக்கள் அதிகாரம் அமைப்பினர்.