“நடிகர்கள் வெளியில் மோடிக்கு வாழ்த்து கூறுகிறார்கள்; உள்ளுக்குள் அதிருப்தியில் இருக்கிறார்கள்!”
“ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது” என ‘முகமது பின் துக்ளக்’ பாணியில் திடீரென அறிவித்து, ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்களை அல்லாட வைத்திருக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கு, சாமானிய மக்களைப் பற்றி கவலைப்படாமல் உச்சாணிக் கொம்பில் உட்கார்ந்துகொண்டு ஒய்யார வாழ்க்கை வாழ்ந்துவரும் நடிகர்கள் உள்ளிட்ட தமிழ் திரையுலக பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்தது பற்றி “துக்ளக்’ பாணி அறிவிப்புக்காக மோடிக்கு ‘ஆயில்’ அடித்த தமிழ் திரையுலக பிரபலங்கள்“ என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தது HERONEWSONLINE.COM.
இந்த விவகாரம் குறித்து முன்னணி நடிகரின் மேலாளர் ஒருவர் கூறுகையில், “அனைத்து நடிகர்களுமே பிரதமருக்கு வாழ்த்து சொன்னாலும், உள்ளுக்குள் கடுமையான அதிருப்தியில்தான் இருப்பார்கள். இதில் ஒரு சில முன்னணி நடிகர்கள் மட்டுமே விதிவிலக்கு. ஏனென்றால் இன்றைய நடிகர்கள் பலரும் சம்பளத்தை முழுமையாக வரிக் கணக்கில் கொண்டு வருவதில்லை.
பாதி கருப்பு, பாதி வெள்ளை என்ற அடிப்படையில்தான் தமிழ் சினிமாவே செயல்பட்டு வருகிறது. ஒரு முன்னணி நடிகர் எப்போதுமே தன்னுடைய அலுவலகம் வந்தவுடன், அவருடைய அறையில் இருக்கும் பீரோவை திறந்து பூஜை செய்துவிட்டு தான் பணிகளைத் தொடங்குவார். எப்போதுமே வங்கிக் கணக்கில் கொஞ்சம் பணத்தைச் செலுத்துவிட்டு, மீதி பணம் முழுவதையுமே அந்த பீரோவில் தான் வைத்திருப்பார். அவருடைய நிலைமையை இப்போது யோசித்துப் பாருங்கள்” என்றார்.
மோடியின் திடீர் அறிவிப்பால் பல நடிகர்கள் மட்டுமல்ல, தமிழ் திரையுலகம் சம்பந்தப்பட்ட பலர் பலவிதங்களில் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். எனினும், தங்களது பாதிப்பை வாய்விட்டு சொல்ல முடியாத அவல நிலையில் இருக்கிறார்கள்.
சென்னை, மதுரை, கோவை, திருச்சி, ஈரோடு உள்ளிட்ட நகரங்களில் உள்ள மால் திரையரங்குகள் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றன. இங்கெல்லாம் டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே நேற்றைய காட்சிகளை பார்த்துள்ளனர். இது குறித்து சென்னை திரையரங்க உரிமையாளர் ஒருவர் கூறுகையில், “மோடியின் திடீர் அறிவிப்பு வெளியான நேற்றுமுன் தினம் இரவுக் காட்சி டிக்கெட் வழங்கும்போது எவ்வித தடையும் இல்லாமல் 500, 1000 நோட்டுகளை வாங்கிக்கொண்டு டிக்கெட்டுகளை வழங்கினோம்.
இரவுக்காட்சி நடந்துகொண்டிருக்கையில், இடைவேளை நேரத்திலிருந்துதான் திரையரங்கில் இதை அமலுக்கு கொண்டு வந்தோம். திரையரங்க கேன்டினில் உணவுப்பொருட்கள் வாங்கும்போது மக்கள் பெரிதாக சிரமத்துக்கு உள்ளானார்கள். பிளாஸ்டிக் பணம் என்று சொல்லப்படும் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு வைத்திருந்தவர்களுக்கு அந்த சிரமம் பெரிதாகப் படவில்லை.
நேற்று பகல் காட்சி தொடங்கி இரவுக் காட்சி வரைக்கும் படம் பார்க்க வருபவர்களின் கூட்டம் பாதியாக குறைந்தது. பலரும் 500,1000 நோட்டுகளுடன் திரையரங்கம் வந்து, டிக்கெட் வழங்கப்படவில்லை என்பதை அறிந்து திரும்பிச் சென்றனர். 500,1000 ரூபாய்களின் புதிய நோட்டுகள் எளிதாக கிடைக்கும் வரைக்கும் இந்த சிரமம் இருக்கத்தான் செய்யும்’’ என்றார்.
பிரதமர் மோடியின் திடீர் அறிவிப்பால், ‘கடவுள் இருக்கான் குமாரு’ படத்தின் வெளியீடு நவம்பர் 17ஆம் தேதிக்கு மாற்றப்பட்டிருக்கிறது. மேலும், நவம்பர் 11 மற்றும் 18 ஆகிய தேதிகளில் வெளியாகும் படங்களின் தயாரிப்பாளர்கள் கடும் அவஸ்தைக்கு உள்ளாகியிருக்கிறார்கள். ஏனென்றால், படத்தின் வெளியீட்டு சமயத்தில் தான், எத்தனை திரையரங்குகளில் வெளியீடு என்று கணக்கிட்டு க்யூப்பிற்கு மொத்தமாகப் பணம் கட்டுவார்கள். அந்த பணத்தை காசோலையாக செலுத்த முடியாது. RTGS முறையில் அல்லது மொத்த பணமாக கொடுக்க வேண்டும். இதனால் பட வெளியீட்டில் சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்கள், எப்படியாவது பணத்தை தயார் செய்து வெளியிட வேண்டுமே என்ற முனைப்பில் கண்முழி பிதுங்க அங்குமிங்குமாய் அலைந்துகொண்டிருக்கிறார்கள்.