“வேலையில்லா பட்டதாரி 2’ படத்தை இயக்குகிறார் சௌந்தர்யா”: தனுஷ் அறிவிப்பு!
வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து 2014ஆம் ஆண்டு வெளிவந்த ‘வேலையில்லா பட்டதாரி’ படம் சூப்பர் ஹிட் வெற்றியைப் பெற்றது. தனுஷின் 25வது படமாக வெளிவந்த இப்படத்தின் கதை மட்டுமில்லாது அனிருத்தின் பாடல்களும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகுமா? என்று ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது.
அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் தனுஷ் தனது அடுத்த படத்தை பற்றிய புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் இரண்டாம் பாகத்தை தனுஷ் எடுக்கப்போவதாக அறிவித்துள்ளார். அப்படத்தை கலைப்புலி எஸ்.தாணுவும், தனுஷுன் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.
இப்படத்தை ரஜினியின் இளையமகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்குகிறார். அனிருத், ஷான் ரோல்டன் என இரு இசையமைப்பாளர்கள் இப்படத்திற்கு இசையமைக்கிறார்கள். இப்படத்தில் கதாநாயகி யார் என்பதை அவர் குறிப்பிடவில்லை.
இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பரில் துவங்கும் என்றும், தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் படத்தை எடுக்கப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.
தனுஷ் கதையமைப்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கும் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படம்தான் தற்போது ‘வேலையில்லா பட்டதாரி-2’ ஆக மாறியிருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் கூறப்படுகிறது.