இந்தியர்களின் எஜமான தேசத்தில் வெல்லப்போவது ஹிலாரி கழுதையா? ட்ரம்ப் யானையா?
இந்திய அரசு என்னென்ன செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து உத்தரவு பிறப்பிப்பது வாஷிங்டன் என விமர்சிப்பார்கள் முற்போக்காளர்கள். இதனால், உலக சண்டியரான அமெரிக்காவை அவர்கள் ‘இந்தியர்களின் எஜமான தேசம்’ என்றும் வர்ணிப்பார்கள்.
அத்தகைய அமெரிக்காவில் இன்று அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டன் அக்கட்சியின் கழுதை சின்னத்திலும், குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் ட்ரம்ப் அக்கட்சியின் யானை சின்னத்திலும் போட்டியிடுகிறார்கள். இந்த தேர்தலில் கழுதைக்கும் யானைக்கும் கடும் போட்டி நிலவுவதாக இதுவரை வெளிவந்த கருத்து கணிப்புகள் தெரிவித்துள்ளன.
தேர்தல் வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. மொத்தம் 14 கோடியே 63 லட்சத்து 11 ஆயிரம் பேர் ஓட்டு போடுகிறார்கள். அங்கு முன்கூட்டியே ஓட்டு போடும் முறை உள்ளது. அதன்படி 4 கோடி பேர் ஏற்கனவே ஓட்டு போட்டு விட்டனர். மற்றவர்கள் இன்று ஓட்டு போடுகிறார்கள்.
மற்ற நாடுகளைப் போல ஒரே நேரத்தில் அங்கு வாக்குப்பதிவு தொடங்குவது இல்லை. அங்கு மொத்தம் 50 மாகாணங்கள் உள்ளன. வாக்குப்பதிவு தொடங்கும் நேரம் மற்றும் முடியும் நேரம் ஒவ்வொரு மாகாணத்துக்கும் மாறுபடும்.
முதலாவதாக காம்சையரில் உள்ள டிக்சிவெல் நாட்ச் என்ற இடத்தில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அங்கு 12 வாக்காளர்கள் மட்டுமே உள்ளனர். அவர்கள் தான் முதலில் வாக்களித்தனர். அதன்பிறகு மற்ற பகுதிகளிலும் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
வாக்குப்பதிவு முடிந்ததும் உடனடியாக வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. எனவே, வெல்லப்போவது கழுதையா? யானையா? என்பது நாளை தெரிந்துவிடும்.
எஜமான தேசத்து அதிபர் தேர்தல் என்பதால் இந்திய தொலைக்காட்சி சேனல் ஒவ்வொன்றும் விசுவாசத்துடன் தங்கள் நிருபர் ஒருவரை அமெரிக்காவுக்கு அனுப்பி, போட்டி போட்டு தகவல் சேகரித்து, டெல்லியை மூச்சடைக்க வைத்திருக்கும் காற்று மாசுவை மிஞ்சுமளவுக்கு புழுதியைக் கிளப்பும் செய்திகளை ஒளிபரப்பி வருகின்றன. இந்த இழிவான வணிக ஊடகப் போட்டியில் தமிழகம் பின்தங்கிவிடக் கூடாது என்ற கரிசனையில் தந்தி டிவியும் தனது நிருபராக ஹரியை அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.