வடசென்னையை மையப்படுத்தி வரும் மற்றுமொரு படம் ‘ஆக்கம்’!
வடசென்னையை மையப்படுத்தி தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட திரைப்படங்கள் வெளிவந்துள்ளது. அந்த வரிசையில் மீண்டும் வடசென்னையை மையப்படுத்தி புதிய படம் ஒன்று உருவாகி வருகிறது. அந்த படத்திற்கு ‘ஆக்கம்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இப்படத்தில் ராவண், டெல்னா டேவிஸ் என்ற புதுமுகங்கள் கதாநாயகன், கதாநாயகியாக நடிக்கின்றனர்.
மேலும், ‘பொன்விலங்கு’, ‘சபாஷ்’, ‘பாண்டவர் பூமி’ ஆகிய படங்களில் நடித்த பிரபல நடிகர் ரஞ்சித், பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தை வேலுதாஸ் ஞானசம்பந்தம் இயக்கியிருக்கிறார். ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார். ஆதிலட்சுமி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் செல்வம், ராஜா இருவரும் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.
இப்படம் குறித்து இயக்குனர் கூறும்போது, வடசென்னையில் வசிக்கக்கூடிய இரண்டு இளைஞர்கள், தங்களின் எதிர்காலத்தை பற்றி கவலைப்படாமல் ஊர் சுற்றி வருகிறார்கள். விளையாட்டுத்தனமாக கொள்ளை சம்பவங்களையும் செய்து வருகிறார்கள். அப்படிப்பட்ட இளைஞர்களின் எதிர்காலம் எப்படியிருக்கும்? என்பதை இந்த படத்தில் சொல்லியிருக்கிறேன்.
நான் ஒருமுறை வடசென்னை பகுதியில் ஒரு துக்க வீட்டிற்கு சென்றிருந்தபோது, அம்மாவும் மகனும் சேர்ந்து சாவுக்கூத்து ஆடிக் கொண்டிருந்தார்கள். அதைப் பார்த்தும் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. இப்படியான சூழ்நிலையில் வளரும் மகனின் எதிர்காலம் எந்தமாதிரி இருக்கும் என்பதை நினைத்துப் பார்த்தேன். இந்த நிகழ்வுதான் என்னை படம் எடுக்கத் தூண்டியது என்றார்.
இப்படத்தில் மொத்தம் 3 பாடல்கள் உள்ளன. ஒரு பாடலை இயக்குனரே எழுதியிருக்கிறார். அந்த பாடலை கானா பாலா பாடியுள்ளார். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் அனைத்தும் முடிவடைந்துவிட்டது. இந்த மாதத்தில் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.