ஜெயலலிதாவை தீவிர சிகிச்சை பிரிவிலிருந்து சிறப்பு வார்டுக்கு 15ஆம் தேதி மாற்ற திட்டம்!

தமிழக முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் உடல் நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டு வருவதை அடுத்து, அவரை வரும் 15ஆம் தேதி தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து சிறப்பு வார்டுக்கு மாற்ற மருத்துவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

ஜெயலலிதா திடீர் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

லண்டன் மருத்துவ நிபுணர் ரிச்சர்ட் பீலே, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையை சேர்ந்த நுரையீரல் சிகிச்சை நிபுணர் ஜி.கில்னானி, மயக்க மருத்துவ நிபுணர் அஞ்சன் ட்ரிக்கா, இதய சிகிச்சை நிபுணர் நிதிஷ் நாயக் ஆகியோரது ஆலோசனையின்படி அப்போலோ மருத்துவமனையின் மூத்த மருத்துவர்கள் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் இருந்து வந்துள்ள பெண் பிசியோதெரபி நிபுணரும் அவருக்கு தொடர்ந்து பிசியோதெரபி சிகிச்சை அளித்து வருகிறார்.

மருத்துவர்களின் தொடர் சிகிச்சையால் ஜெயலலிதாவின் உடல் நிலை தொடர்ந்து குணமடைந்து வருகிறது. அவருக்கு பொருத்தப்பட்டிருந்த செயற்கை சுவாச கருவிகள் அகற்றப்பட்டுவிட்டன.ஆனால், அவரது தொண்டை பகுதியில் இருக்கும் டியூப் மட்டும் இன்னும் அகற்றப்படவில்லை.

இந்நிலையில், ஜெயலலிதாவுக்கு கொடுக்கப்பட்டு வந்த உணவு முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை அவருக்கு திரவ உணவுகள் மட்டுமே கொடுக்கப்பட்டு வந்தது. கடந்த 2 நாட்களாக திட உணவுகள் கொடுக்கப்படுகிறது. தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வரும் அவரை வருகிற 15ஆம் தேதி சிறப்பு வார்டுக்கு மாற்றுவதற்கு மருத்துவர்கள் திட்டமிட்டுள்ளனர்.