“விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக அறிவித்தது தவறு”: கண் கெட்ட பிறகு வைகோ சூரிய நமஸ்காரம்!
மக்கள்நலக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக விஜயகாந்தை அறிவித்ததற்காக வருத்தப்படுவதாக மதிமுக பொதுச் செயலாளரும் மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளருமான வைகோ கூறியுள்ளார்.
விஜயகாந்த் மக்கள்நலக் கூட்டணியில் இணைந்து விட்டார் என்றவுடன், கூட்டணியின் பெயரையே மாற்றி “கேப்டன் கூட்டணி” என்று உற்சாகமாக கூவிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு காலங்கடந்து மனம் திறந்து அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:
தமிழக சட்டப் பேரவைக்கு மே மாதம் தேர்தல் நடந்தபோது மக்கள் நலக் கூட்டணி சார்பில் யாரையும் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கக் கூடாது என்று நாங்கள் முடிவு செய்திருந்தோம். ஆனால், திமுகவுடன் கூட்டணி அமைக்காமல் எங்கள் கூட்டணிக்கு விஜயகாந்த் வந்ததால் அவரை முதல்வர் வேட்பாளராக அறிவித்தோம்.
மக்கள் நலக் கூட்டணி தனது முடிவில் இருந்து மாறியது தவறானதுதான். ஆனால், எந்த சூழ்நிலையில் விஜயகாந்தை நாங்கள் முதல்வர் வேட்பாளராக அறிவித்தோம் என்பதை நீங்கள் சற்று சிந்தித்து பார்க்க வேண்டும்.
மக்கள் நலக்கூட்டணியில் விஜயகாந்த் சேர்ந்ததற்காக நாங்கள் அவருக்கு மிகவும் கடமைப்பட்டிருந்தோம். கூட்டணி அமைப்பதற்காக விஜயகாந்த் கேட்கும் தொகுதிகளை கொடுக்க திமுக தயாராக இருந்தும் அவர் திமுகவுடன் கூட்டணி வைக்காமல், மக்கள்நலக் கூட்டணிக்கு வந்தார். அந்த ஒரு காரணத்துக்காக அவருக்கு நன்றி தெரிவிக்கும் அடையாளமாக நாங்கள் அவரை முதல்வர் வேட்பாளராக அறிவித்தோம்.
2006-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலின்போது மதிமுகவில் இருந்த எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன், கண்ணப்பன் ஆகியோர் திமுகவுடன் கூட்டணி அமைக்க கூடாது என்றனர். அவர்களுக்கு கட்டுப்பட்டு அதிமுகவுடன் கூட்டணி அமைத்தோம். ஆனால், அவர்கள் மூவரும் பிறகு திமுகவுக்கு போய் விட்டனர்.
திமுகவுக்காக நான் 29 ஆண்டுகள் உழைத்தேன். ஆனால் என் மீது பழி சுமத்தி சதி குற்றச்சாட்டு கூறி கட்சியில் இருந்து வெளியேற்றினார்கள். ஆனால், ஆதரவாளர்கள் எனக்கு துணை நின்றனர். நாங்கள் மதிமுகவை தொடங்கினோம். ஆனால், இன்றும் மதிமுகவை அழிக்க வேண்டும் என்ற ஒரே திட்டத்துடன் திமுக செயல்படுகிறது.
அதற்காக நான் அதிமுக ஆதரவாளர் என்று அர்த்தம் கொள்ளக் கூடாது. 2011-ல் நாங்கள் ஜெயலலிதா வீட்டுக் கதவை தட்டவில்லை. தேர்தலில் போட்டியிடுவதையே தவிர்த்தோம். உடனே அவர் என் முடிவை மதிப்பதாக கடிதம் எழுதினார். அதுபோல் நான் பாதயாத்திரை சென்றபோது வழியில் சந்தித்து உடல்நலம் விசாரித்தார். இந்த நட்பை நான் அரசியலுக்கு பயன்படுத்தவில்லை.
இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.