மிஷ்கின் உதவியாளர் இயக்கும் ‘8 தோட்டாக்கள்’ படத்தின் ஒரு வரி கதை!
தற்காப்பு ஆயுதங்களின் பெயர்களை தலைப்பாகக் கொண்டு தமிழ் திரையுலகில் மாபெரும் வெற்றி பெற்ற ‘துப்பாக்கி’, ‘கத்தி’ ஆகிய படங்களின் வரிசையில் இணைய தற்போது தயாராகி வருகிறது ‘8 தோட்டாக்கள்’.
இயக்குனர் மிஷ்கினின் உதவியாளரான ஸ்ரீ கணேஷ் இப்படத்தை இயக்குகிறார். இவர் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான ‘நாளைய இயக்குனர் – பகுதி 3ன் இறுதிச்சுற்று போட்டியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தில் புதுமுகம் வெற்றி மற்றும் அபர்ணா பாலமுரளி (மலையாள திரைப்படம் ‘மஹேஷிந்தெ பிரதிகாரம்’ புகழ்) முன்னணி கதாபாத்திரங்களிலும், நடிகர்கள் நாசர், எம்.எஸ்.பாஸ்கர், அம்மா கிரியேஷன்ஸ் டி. சிவா, மைம் கோபி மற்றும் மீரா மிதுன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடிக்கின்றனர்.
படம் பற்றி இயக்குனர் ஸ்ரீ கணேஷ் கூறுகையில், “பொதுவாகவே ஒரு பொருளை துளைத்துக்கொண்டு போவது தான் தோட்டாவின் குணாதியசம். ஆனால், அது எதனை துளைக்கிறது என்பதில் தான் விஷயமே இருக்கிறது. ஒரு துப்பாக்கியில் எட்டு தோட்டாக்கள் இருந்தாலும் அந்த எட்டும் ஒரே இலக்கை நோக்கி பயணிப்பதில்லை. மாறாக, அந்த எட்டு தோட்டாக்களும் வெவ்வேறு இலக்குகளை நோக்கி தான் பாயும். இது தான் எங்களின் ‘8 தோட்டாக்கள்’ திரைப்படத்தின் ஒரு வரி கதை.
“பரபரப்பான கிரைம் – திரில்லர் படமாக உருவாகும் இந்த திரைப்படம், ஒரு போலீஸ் அதிகாரியையும், அவரை சுற்றியுள்ள ஏனைய கதாபாத்திரங்களையும் கொண்டு நகரும். விறுவிறுப்பான திரைக்கதையும், சுவாரசியமான திருப்பங்களையும் உள்ளடக்கி இருக்கும் இப்படம் விரைவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது”என்று கூறுகிறார்.
முற்றிலும் திறமை படைத்த புதிய தொழில்நுட்ப கலைஞர்கள் பணியாற்றி வரும் இந்த ‘8 தோட்டாக்கள்’ படத்திற்கு இசையமைத்து வருகிறார் கே.எஸ்.சுந்தரமூர்த்தி (அவம், கிரகணம்).
வெற்றிவேல் சரவணா சினிமாஸ் சார்பில் எம்.வெள்ளப்பாண்டியன் தயாரிக்கும் இந்த படத்தை இணை தயாரிப்பு செய்கிறது ‘பிக்பிரிண்ட் பிச்சர்ஸ்’.